கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபரூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவரது மகன் கண்ணதாசன்(வயது 52). குடும்ப வறுமையின் காரணமாக கண்ணதாசனின் 11 வயதில், தாயார் பூங்காவனம் அம்மாள் தனது உறவினர்களுடன் அவரை வேலைக்காக மும்பை அனுப்பி வைத்துள்ளார்.

மும்பை தாராவி அருகே வசித்து வந்த இவர், அங்குள்ள உணவகம் ஒன்றில் தொடர்ந்து 6 வருடங்கள் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவருடன் இணைத்து கவரிங் நகைகள் மற்றும் பொருட்கள் விற்றுவந்தார், நாளடைவில் அதே தொழிலைச் சொந்தமாகச் செய்யத் தொடங்கினர்.

அந்த நேரத்தில் அப்பகுதியில் ரௌடிகள் பலர் மாமூல் கேட்டு அங்குள்ள கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவது வாடிக்கையாக இருந்துள்ளது. அதேபோன்று இவர் சம்பாதிக்கும் பணத்தை மிரட்டி பிடுங்கும் செயலில் அந்த ரௌடிகள் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பணம் கேட்டு மிரட்டும் ரௌடிகளை தாக்கியுள்ளார். அதிலிருந்து இந்த ரௌடிகளால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களின் ஆதரவு இவருக்குக் கிடைக்கிறது.

இதனால் பொது மக்கள், வியாபாரிகளுக்காக ரௌடிகளால் ஏற்படும் பிரச்னைகளைச் சரி செய்ய தொடங்குகிறார். நாளடைவில் இவரது நட்பு வட்டாரம் பெரிதாகவே, அப்பகுதியில் வசிக்கும் வியாபாரிகள் மற்றும் மக்களின் நலனுக்காக அடிதடி மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து அதையே வேலையாக செய்ய ஆரம்பித்தார்.

இதனால் அப்பகுதியில் முக்கிய நபராக பார்க்கப்பட்டு வந்த இவர் மீது, மும்பை காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகள் அதிகரித்துக் கொண்டே வந்தன.

நாளடைவில் ஒரு கொலை வழக்கில் கைதானார். 1988ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் இவருக்குச் சாகும்வரை ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கியதால், மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் பிறகு நாசிக் மத்திய சிறை, கோல்ஹாபூர் மத்திய சிறை, ரத்னகிரி சிறப்பு சிறை, புணே மத்திய சிறை என மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு சிறைகளில் கண்ணதாசன் அடைக்கப்பட்டிருந்தார்.

"குறிப்பாக, சிறையில் நான் அடங்காத காரணத்தினால் என்னை மகாராஷ்டிரா மாநிலத்தில், அடங்காத கைதிகளைக் கட்டுப்படுத்தும் சிறைச்சாலையாக இருந்த ரத்னகிரி சிறப்பு சிறைச்சாலைக்கு மாற்றினர்.

நான் சரியாக ஒத்துழைக்காமல் இருந்த காரணத்தினால், அப்போது என்னைப் போன்றவர்களைக் கட்டுப்படுத்த சிறையில் கடுமையாக தாக்குவார்கள்.

அந்த காலகட்டத்தில், டெல்லி திஹார் சிறைச்சாலையின் சிறைத்துறை தலைமை இயக்குநராக கிரண்பேடி இருந்தார். அப்போது அவர் திஹார் சிறைவாசிகளுக்கு யோகா, தியானம் போன்றவற்றைக் கைதிகளின் நலன் கருதி பயிற்சி கொடுக்கும் முயற்சியைச் செய்யத் தொடங்கினார்.

அந்த செய்தி நாடு முழுவதும் உள்ள செய்தி நாளேடுகள் மூலம் வெளியே தெரியவந்தது. அதன் பிறகு வந்த நாட்களில், நான் இருந்த ரத்னகிரி சிறப்புச் சிறையிலும் கைதிகளுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி கற்றுக்கொடுக்கத் தொடங்கினர்.

அதையடுத்து என் நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு கொஞ்சம் மனம் திருந்திய காரணத்தினால், ரத்னகிரி சிறையிலிருந்து புனே மத்திய சிறைக்கு மாற்றினர். இப்படியே மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளைக் கடந்து விட்டேன்.

இதனிடையே, இந்தியா முழுவதிலும் பல்வேறு மாநில சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேறு மாநிலத்தைச் சேர்த்த சிறைவாசிகள், தாய் சிறை என்று சொல்லப்படும் சொந்த மாநில சிறைகளுக்கு மாற்றப்படலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின்படி, 10 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்த என்னை, தமிழகத்தில் உள்ள கடலூர் மத்திய சிறைக்கு மாற்றினர்," என்கிறார் கண்ணதாசன்.

இதையடுத்து கண்ணதாசன் கடலூர் சிறையில் கற்றுத் தரும் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். இதனால் சிறைத்துறைத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்ற இவர், புதிய கைதிகளுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்பெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். பிறகு அவருக்கு கடலூர் சிறையில் குற்றக் காவலர் பொறுப்பு வழங்கப்பட்டது.

"இப்படியே கடலூர் சிறையில் 11 ஆண்டுகள் சென்ற பிறகு, தன்னை விடுதலைக்குப் பரிந்துரைக்க அப்போதைய மாவட்ட ஆட்சியர், சிறைத்துறைத் தலைவர், சிறை கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில் 2010ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் நாளன்று எனக்கு விடுதலையென்று அறிவிப்பு வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் தமிழகம் உட்பட 21 ஆண்டுகள் வெளி உலகம் பார்க்காமல் தொடர்ந்து சிறையிலேயே இருந்தேன். இதையடுத்து எனது விடுதலைக்குக் குறித்து கேள்விப்படும் போது, எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் மும்பை சிறையில் அடைக்கப்பட்ட போது, நான் உயிருடன் இல்லை என்று நினைத்து கவலையிலேயே எனது பெற்றோர் உயிரிழந்து விட்டனர். நான் உட்பட என்னுடன் பிறந்த 13 சகோதர, சகோதரிகள் என்னைக் கண்டு கொள்ளவும் இல்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் எப்படி வெளியே சென்று வாழ்வது என்று தடுமாற்றமானேன்," என்று வேதனையுடன் கண்ணதாசன் தெரிவித்தார்.

"பின்னர் கடலூர் சிறையிலிருந்து விடுதலையானதும் எனது உடன் பிறந்தவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது என்று எண்ணி தனியாக வாழத் தொடங்கினேன். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா வேலை செய்யத் தொடங்கியதும், செருப்பு வியாபாரம் செய்ய ஆரம்பித்தேன்.

பிறகு கம்பளி ஆடைகள் விற்கத் தொடங்கினேன். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கிடையில் செய்யும் வியாபாரங்கள் கை கொடுக்கவில்லை. நானும் மனம் தளராமல் தொடர்ந்து பல வேலைகளை நேர்மையாகச் செய்து வந்தேன். அதன் பிறகு தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளர் வேலை கிடைத்தது.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்கையில், குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது. அந்த நேரத்தில் நான் திருமணத்திற்குப் பெண் தேடியபொழுது, கொலை குற்றம் செய்து 21 ஆண்டுகள் ஆயுள் சிறை தண்டனை பெற்ற எனக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க பயந்து யாரும் முன்வரவில்லை.

அதன் பிறகு சமயபுரத்தில் திருமணமாகி கணவரை இழந்த பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண்ணை அவர்களது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு இன்று வரை இருவரும் நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறோம்," என்கிறார் கண்ணதாசன்.
திருமணத்திற்குப் பிறகு கண்ணதாசன் அவரது முன்னோர்கள் செய்து வந்த மூலிகை டீ தொழிலைக் கையில் எடுத்தார். டீ, சுக்கு காப்பி, மிளகு பால், பாதம் பால், தூதுவளை, ஆவாரம்பூ, முடக்கத்தான் மூலிகை சூப்பு மற்றும் டீ வகைகளைத் தயாரிக்கும் அனுபவம் கண்ணதாசனுக்கு இருந்ததால், அதைத் தனது மனைவி சங்கீதாவிற்குக் கற்றுக்கொடுத்தார்.

தற்போது இவரது மனைவி தயார் செய்து கொடுக்கும் இந்த மூலிகை டீ அனைத்தையும், விருத்தாசலம் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகங்கள், ஆட்டோ, கார், பேருந்து நிலையங்கள் எனத் தினமும் காலை மற்றும் பிற்பகல் இரு வேளைகளில் விற்பனை செய்து வருகிறார்.

எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் எந்த கஷ்டங்களும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக கண்ணதாசனின் மனைவி சங்கீதா கண்ணதாசன் கூறுகிறார்.

"எனது கணவர் வியாபாரம் மூலம் தினம் சம்பாதிக்கும் பணத்தில், ரூபாய் 200க்கு வாழைப்பழங்கள் வாங்கி சென்று அருகே இருக்கும் குரங்குகளுக்குக் கொடுப்பார். இதுபோன்று வெளியிலும், வீட்டிலும் இருக்கும் பிராணிகளுக்கு உணவளித்துப் பராமரிப்பது எங்களுக்குக் குழந்தைகள் இல்லை என்ற மனக் குறை நீங்குகிறது," என்கிறார் சங்கீதா கண்ணதாசன்.

எனது சிறை வாழ்க்கை மிக கடுமையாக இருந்தது, அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன். தற்போது இப்படி ஒரு நல்ல நிலையில் நான் இருப்பது எனக்குக் கிடைத்த மறுபிறவியாகக் கருதுகிறேன் என்கிறார் கண்ணதாசன்.

"எனினும் இன்று வரை எனது மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டே தான் இருக்கிறது. நான் செய்த குற்றச் சம்பவங்களை நினைக்கும்போது, அது ஒரு ஆராத வடுவாக எனக்குள் இருக்கிறது. நான் என்ன தான் மனம் திருந்தி நல்லது செய்தாலும் என்னைப் பார்ப்பவர்கள் என்னைத் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கின்றனர். நிறைய பாவங்கள் செய்து, இப்படி வாழ்ந்தால் எல்லாம் சரியாகி விடுமா என்று பலர் என்னிடம் நேரடியாகக் கேட்டிருக்கின்றனர். அந்த நேரங்களில் எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கும்," என கவலையுடன் கூறுகிறார் அவர்.

"எனது வாழ்க்கை இப்போது இருக்கக்கூடிய அனைத்து இளைய சமூகத்திற்கும் பாடமாக இருக்க வேண்டும். குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் பெற்றோர் பலரும் பொருளாதார நெருக்கடியில் ஒவ்வொரு பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் என்னைப் போன்று குற்றம் செய்துவிட்டால், அவர்களுடைய நிலை என்ன ஆகும் என்று கண்ணெதிரே பார்த்திருக்கிறேன். சிறு வயதில் எதையும் யோசித்துப் பார்க்காமல் தவறு செய்து விடுவோம். ஆனால் சிறைக்குச் சென்ற பிறகு அந்த நான்கு சுவரிற்குள் என்ன நடந்தாலும் வெளி உலகிற்குத் தெரியாது.

ஆகவே அனைத்து இளைஞர்களும் குடும்ப சூழ்நிலையறிந்து எந்த தவறான செயல்களில் ஈடுபடாமல் பெற்றோர் சொற்படி நடக்கவேண்டும் என இரு கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். எந்த வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள், செய்யும் வேலையைப் பெருமையாகப் பாருங்கள்," என்று கூறுகிறார் மூலிகை டீ வியாபாரி கண்ணதாசன்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web