'சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!' என்பார்கள். அத்தகைய வேலையைச் செய்திருக்கின்றார் ரவி கருணாநாயக்க.

'சக்தி இல்லாமல் சிவனே என்று கிடந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு, யாழ். மாவட்ட அமைப்பாளர் நியமனம் என்று அறிவித்து, ஜனாதிபதி ரணிலுக்கு வடக்குக் கிழக்கில் தப்பித்தவறி கிடைக்கக்கூடிய கணிசமான வாக்குகளையும் தகர்த்தெறிந்திருக்கின்றார் ரவி கருணாநாயக்க.

இந்த விடயம் இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டு இருக்கின்றமையால், அது குறித்து அதிகம் விரிக்காமல், ஒரு விவகாரத்தை மட்டும் குறிப்பிட்டு, அடுத்த விடயத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்.

என் நினைவு சரி என்றால், இது, நல்லாட்சி அரசின் பிற்காலத்தில் - ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, மஹிந்தர் 52 நாள்கள் பிரதமராக இருந்து பதவி இறங்கிய பின்னர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 எம்.பிக்களும் கொடுத்த முண்டில் ரணிலின் அரசு நின்று பிடித்த காலத்தில் - நடந்தது.

அப்போது பிரதமர் ரணில் வடக்கே வந்திருந்தார். ஊடகவியலாளர்களையும் தனியாகச் சந்தித்தார். யுத்தம் முடிந்து எட்டு, ஒன்பது வருடங்கள் கழிந்தும், யுத்த காலத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து, நீதி முறையான விசாரணை நடக்கவில்லை என்று அந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணிலைக் குறைகூறி, நான் நேரடியாக விமர்சித்திருந்தேன். தமிழில் விசாரணைகளை நடத்துவதற்குப் போதிய புலனாய்வு அதிகாரிகள் இல்லை என்று சாக்குப் போக்குக் கூறிச் சமாளித்தார் பிரதமர் ரணில். அந்த நிகழ்வில் ரணிலின் பதில்களை தமிழாக்கம் செய்தார் அவருடன் கூடவே இருந்த கூட்டமைப்பு எம்.பியான சுமந்திரன்.

அதன் பின்னர் சுமந்திரனை அதே ஹோட்டலில் தனியாகச் சந்தித்தபோது, பலதும் பத்தும் விடயங்கள் பேசினோம். சர்ச்சைக்குரிய பேர்வழியான அருண் சித்தார்த், தாம் பிரதமர் ரணிலுடன் நிற்கும் படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கின்றமை குறித்து நான் பிரஸ்தாபித்தேன். அப்போது சுமந்திரன் பதில் தந்தார்.

''ஆம், அவர் அமைச்சர் ராஜிதவுடன் ஒட்டிக் கொண்டுதான் வந்திருக்கிறார். நான் அது குறித்து ராஜிதவையும் வைத்துக்கொண்டு, அந்தப் படத்தைக் காட்டி 'இவர் யார் தெரியுமா?' என்று பிரதமரிடம் கேட்டேன். அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 'இவர்கள் கூட்டி வந்தார்கள். சேர்ந்து படம் எடுத்தேன்' என்றார் பிரதமர். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 'நான்தான் ஆவா குழு' என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்த குழப்பக்காரர் இவர் என்று பிரதமரிடம் தெரிவித்தேன். அவர் ஆழமாக கவனித்து அந்த விடயத்தை உள்வாங்கிக் கொண்டார்'' - என்ற சாரப்பட அப்போது சுமந்திரன் பதிலளித்தார் என்று எனக்கு நினைவு.

சுமந்திரனின் அந்த ஆலோசனையை நல்லாட்சியுடன் மறந்திருப்பார் பிரதமர் ரணில். இப்போது ராஜபக்‌ஷர்களை அரவணைக்கும் அவருக்கு ,அருண் சித்தார்த்தை அரவணைப்பது அப்படி ஒன்றும் பெரிய விவகாரம் இல்லை.

இந்த நியமனம் தொடர்பில் என் நண்பர் ஒருவர் - தந்தை பெரியார் மீது பற்றுமிக்கவர் - தொலைபேசியில் இப்படிக் கூறினார்:-

''கடைசியில் தந்தை பெரியாரின் சமூக நீதி வென்றிருக்கின்றது என்று மகிழலாம். சமத்துவம் நிலைநாட்டப்பட்டிருக்கின்றது என்று சந்தோஷப்படலாம். சாதிய அடக்குமுறை ஒழிக்கப்பட்டிருக்கின்றது என்று திருப்திப்படலாம். 'எலைட்'டுகளுக்கு மட்டுமே கட்சியின் மேலிடம் என்ற அமைப்பில் யாழ்ப்பாணத்தில் திருத்தம் போதிக்கப்பட்டிருக்கின்றது'' என்றார் அவர்.

இப்படியும் விடயத்தை பார்க்கலாம்தான்.

(மூத்த ஊடகவியலாளர் என். வித்தியாதரன் அவர்களால், காலைமுரசு பத்திரிகைக்கு எழுதப்பட்ட இரகசியம்-பரகசியம் பகுதிக்கு எழுதப்பட்டது)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி