இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு வந்து 14 வருடங்களுக்குள் கட்சியின் தலைவராகும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் யாழ்ப்பாண மாவட்ட

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தனது தலைமைத்துவப் பயணத்தை கலகலப்பாக ஆரம்பித்திருக்கின்றார். துயிலும் இல்லத்துக்குப் போய் மாவீரர் தூபிக்குக் கார்த்திகைப் பூவால் அர்ச்சித்துத் தமது தமிழ்த் தேசியப் பற்றைப் பறைசாற்றிய சிறீதரன் தமிழ்த் தேசியம் தொடர்பான தமது அடுத்த கட்ட நகர்வையும் அறிவிப்பாக வெளியிட்டிருக்கின்றார்.

“2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறிருந்ததோ அவ்வாறான நிலையை - தமிழ் மக்களின் அரசியல் ஏகப் பிரதிநிதிகள் என்ற நிலையை - அது எய்த வேண்டும். எனவே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் சகல தமிழ்க் கட்சிகளும், தம் கட்சிகளின் நலனை முன்னிறுத்தாமல், மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்த் தேசியத்தின் பாதையில் ஓரணியாக - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக - ஒன்றிணையுமாறு அழைக்கின்றேன்.' - என்று அவர் பகிரங்க அழைப்பு விடுத்திருக்கின்றார்.

“தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதே எனது பெரு விருப்பம். அதனை முன்னிறுத்தியே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் நின்று, இப்போது தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இந்த நிலையில் தமிழரசுக் கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புத்துயிரூட்டுவதே என் முன்னுள்ள முதற்பணியென எண்ணுகின்றேன்.''

“தமிழ் மக்களின் உரிமைக்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகக் குரல் கொடுத்த - மக்களுக்காக அரசியல் பணி செய்த - சக தமிழ்த் தேசியக் கட்சிகள் சிலபல காரணங்களால் பிரிந்து தனிவழியே பயணிக்கின்றன. இது எமது பொது எதிரிக்கே சாதகமானது. அதன் விளைவை கடந்த தேர்தல்கள் எமக்கு உணர்த்தியிருந்தன. 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கூட்டமைப்பு எப்படி தமிழ் மக்களின் அசைக்க முடியாத சக்தியாக மிளிர்ந்ததோ, அதே நிலையை மீண்டும் எட்ட வேண்டும் எனபதே தமிழ் மக்களின் பெருவிருப்பம். எனது விருப்பமும் அதுவே. இப்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. இதற்காக அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் கடந்தகால கசப்பான நினைவுகளைக் களைந்து ஒன்றிணையுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.'' - என்று அவர தெரிவித்திருக்கின்றார்.

“சகல தமிழ்த் தேசியக் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் செயற்பாட்டைத் துரித கதியில் முன்னெடுக்கவுள்ளேன். அதன் மூலம் மக்களின் உரிமைகளையும், மாவீரர்களின் கனவுகளையும் வென்றெடுப்போம்” என்றும் அவர் அறிவித்திருக்கின்றார்.

நல்ல விடயம். தமிழ்த் தேசியக் கூட்டமைப் க இயங்குவதற்கு அண்மை காலம் வரை ஒற்றைக் காலில் நின்ற தமிழரசுத் தலைவர  மாவை சேனாதிராஜாவினால் அதைச் செய்ய முடியாமல் போய்விட்டது. அதனை சிறீதரன் இப்போது செய்ய விழைகின்றார். உண்மையாக அந்த எண்ணத்தில் இருந்த மாவை சேனாதிராஜா அதைச் செயற்படுத்த முடியாமல் இருந்தமைக்கு யார் காரணம் என்பதை மக்கள் அறிவர்.

இப்போது சிறீதரனுடன் கட்சித் தலைமைத்துவத்திற்குப் போட்டியிட்ட சுமந்திரன், தேர்தலில் தோல்வியுற்றுள்ளமையால் கட்சிக்குள் அவர் ஒதுக்கப்பட, இந்த விவகாரத்தை சிறீதரன் முன்னெடுத்துச் செல்ல விழைகின்றார் என்ற படம் காட்டப்படப் போகின்றது.

ஆக, கூட்டமைப்பு 2009 இல் இருந்த நிலைமை குன்றியதற்குக் காரணம் சுமந்திரன், அவரை ஒதுக்கிவிட்டு நமது கட்சியின் புதிய தலைவர் அதைச் சாதிக்க முன் வந்திருக்கின்றார் என்ற படம் காட்டப்படப் போகின்றது.

உள்ளூராட்சித் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் வேட்பாளர் தெரிவுக்குப் பொறுப்பாக இருந்த இதே சிறீதரன் கூட்டமைப்புப் பங்காளிகளுக்கு எவ்வாறு கௌரவமாக இடமளித்தார் என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு நல்ல அனுபவம் உண்டு. ஆகவே தமிழரசின் புதிய தலைவரின் இந்த அழைப்பை அதற்குரிய தகுதி நிலையோடு அணுகி, அவர்கள் முடிவெடுப்பர் என்பது நிச்சயம். தமிழ்க் கூட்டமைப்புக்குத் தனியான சின்னம் இருக்க வேண்டும், அது தனிக் கூட்டுக் கட்சியாகப் பதிவு செய்ய்ச்ப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் எல்லாம் பங்காளி

கட்சிகளுக்கு உண்டு. அவற்றில் அவை இப்போது விடாப்பிடியாக இருக்கின்றன. தமிழரசு கட்சி அதில் இவ்வளவு காலமும் விட்டுக் கொடுப்பைக் காட்டாதமைதான் இவ்வளவு இழுபறியும் ஏற்படக் காரணம். இப்போது அந்த நிபந்தனைகளுக்கு இணங்கி, விட்டுக்கொடுத்து, பங்காளி கட்சிகள் இறங்கி வருவது துர்லபமே.

 எனினும் அந்த நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கு தமிழரசுக்குள் மறுத்து நின்ற சுமந்திரன், சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் போன்றோர் தலைவர் தெரிவின் போது சிறீதரனுக்கு மாறாக நின்றவர்கள். இவர்கள், சிறீதரனின் வெற்றியை அடுத்து கட்சிக்குள் ஓரங்கட்டப்படும் நிலைமை உள்ளது. ஆகவே அவர்கள் இல்லாத அரசியல் குழு, மத்திய குழு போன்றவற்றை புதிய தலைவர் ஸ்ரீரன் தனக்கேற்ப கையாண்டு, பங்காளிக் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு மண்டியிட்டு, மீண்டும் கூட்டமைப்பைப் பலம் பொருந்தியதாக்கி தமிழ்த் தேசியத்தை வளர்ப்பார் என்று நம்புவோமாக.

இன்னொரு விடயமும் உண்டு. தமிழ் கூட்டமைப்பு ஒன்றாக இருந்தால்தான் பங்காளி கட்சி தலைவர்களின் ஆதரவுடன், இனி வரக்கூடிய மாகாண சபை தேர்தலில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் நியமனம் பெறலாம் என்று மாவை சேனாதிராஜா கடைசி வரை கனவு கண்டார். இப்போது அந்தத் தலைவர் பதவி சிறீதரனிடம். மாவை யரின் வாய்ப்பு இனி சிறீதரனுக்கு. கூட்டமைப்புக்கு மீள உருக்கொடுக்கும் விடயத்தில் சோழியன் குடும்பி சும்மா ஆடவில்லை என்பது போன்றே தோன்றுகின்றது.

-காலைமுரசு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி