ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தாம் எங்கும் கூறவில்லை என ஆளும் கட்சியின் தலைவர்கள் குழுவிடம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கொழும்பில் நத்தார் பண்டிகையையொட்டி இடம்பெற்ற அமைச்சர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

"சர், இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கு வரமாட்டீங்கனு பேசப்படுகிறது. இதில் எது உண்மை” என்று, அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். பதிலளித்துள்ள ஜனாதிபதி, "நான் இன்னும் வருவேன் என்றும் சொல்லவில்லை, வரமாட்டேன் என்றும் சொல்லவில்லை. எனினும், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் நிறைய வேலைகள் செய்யவேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முடிக்க வேண்டும். புதிய பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கு நேரம் தேவை என்றும், ஜனாதிபதி அப்போது மேலும் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான கதையொன்றைத்தான், கடந்தவாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த பேச்சுக்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டவை என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். சிலர் அதற்குப் பின்வரும் காரணங்களைச் சொல்கிறார்கள்.

தற்போதைய ஜனாதிபதி அல்லது ஆளும் பிரதமர் ஒரு முக்கியமான ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டால், கட்சிக்குள் பாரிய விளம்பரம் கொடுப்பது பொதுவான மரபு. அண்மைக்கால வரலாற்றை எடுத்துக் கொண்டால், 1994ம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தபோது, சுதந்திரக் கட்சியினர் அதனை நாடுமுழுவதும் பண்டிகையாகக் கொண்டாட நடவடிக்கை எடுத்தனர்.

அது மட்டுமன்றி, 2005ம் ஆண்டு பிரதமராக பதவிவகித்த மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்ததும், அவ்வாறே சுதந்திரக் கட்சியினர் பட்டாசு கொளுத்தி நாடுமுழுவதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அப்படி இருந்தும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என அமைச்சரவையில் உத்தியோகபூர்வமற்ற அறிவிப்பு வெளியான பின்னரும், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஐதேகவின் சிரேஷ்டர்கள் எவரும் அது குறித்து ஒரு வார்த்தைகூட பேசாதது வரலாற்றில் விசேட நிகழ்வாகும்.

அதுமட்டுமின்றி, இவ்வளவு நாளாக அரச ஊடகங்களில்கூடு அதுபற்றி செய்திகள் எதுவும் பதிவாகவில்லை. இவை அனைத்தும், ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் வரமாட்டாரா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன.

இது குறித்து ஜனாதிபதியின் நெருங்கிய நபரொருவரிடம் 'தி லீடர்' கேட்டது. “இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை பிரசாரம் செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. தேர்தல் பொறிமுறையை உருவாக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளோம். ஐமச அல்லது திசைக்காட்டியைத் தாக்கக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், பிரச்சாரத்தை சர்வதேச நிறுவனத்திற்கு வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று, தலைவரின் நண்பர் கூறினார்.

அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி விக்கிரமசிங்க போட்டியிடுகிறார். ஆனால், சில சமயங்களில் வரமாட்டாரென்று பேசப்படுகிறது. இப்படி ஒரு விசித்திரமான ஆட்டம் நடந்துகொண்டிருக்கிறது. ஐமச, தேமச கட்சிகள் தற்போது மைதானத்தின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஆனால் ஜனாதிபதி விக்கிரமசிங்க அப்படியல்ல. எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு விக்கிரமசிங்க வருவாரா, வரமாட்டாரா என்ற கேள்வி பரவி விரிந்திருக்கிறது.

ஐமச கூட்டணி தொடர்பில் ஜனாதிபதியின் சகாக்கள் அச்சம்

2024 தேர்தல் ஆண்டிற்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? 2024 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, சுமார் 12 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள், தற்போது தேர்தல் கூட்டணிகளை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. ஐமச கட்சி, கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறது. ஜனவரி மாத தொடக்கத்தில் புதிய கூட்டணி தொடங்கப்படவுள்ளது.

அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிரவும் ரவியும் எதிர்க்கட்சிகளிலிருந்து ஆட்களைச் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விடுமுறைக்காக வெளிநாடு சென்றிருந்த லன்சா, ஜனவரி மாதம் தமது புதிய கூட்டணியை ஆரம்பித்து வைப்பது குறித்து சிறிபால அமரசிங்கவுக்கு தினமும் பன்னிரெண்டு தடவைகள் ஃபோன் செய்து பேசியுள்ளாராம்.

மொட்டுக் கட்சியின் வேட்பாளராக வரவிருக்கும் தம்மிக பெரேரா, கூட்டணி அமைப்பதற்கு இலகுவான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகிறது. மொட்டுக் கட்சியிலிருந்து தப்பித்து நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் பன்னிரண்டு எம்பிக்களுடன் தனித்தனியாக கலந்துரையாடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் மாத்திரமன்றி, திலங்கவும் தற்போது களத்துக்கு வந்துள்ளார். எதிர்வரும் தேர்தலுக்கு "சுதந்திர மக்கள் கூட்டமைப்பு" எவ்வாறான வியூகத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்பது தொடர்பில் திலங்க அந்த கூட்டணியில் எஞ்சியுள்ள கட்சிகள் மற்றும் குழுக்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார். சுதந்திர மக்கள் கூட்டணியின் கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, அந்தக் கட்சிகள் மற்றும் குழுக்களின் இணக்கப்பாட்டுடன் இறுதித் தீர்மானத்தை எட்டுவதற்கு திலங்கவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள், குழுக்களின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டணியின் செயற்குழு கூட்டத்தில், அந்த அதிகாரத்தை பொதுச் செயலாளரிடம் ஏகமனதாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் சுதந்திர மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவுக்கும் இடையில் நுகேகொடையில் உள்ள அவரது இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.

உத்தர லங்கா கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுதந்திர மக்கள் சபை உட்பட பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, மாகாணசபைத் தேர்தலை இலக்குவைத்து, கடந்தாண்டு ஜனவரி 11 ல் சுதந்திர மக்கள் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கின. இந்தப் புதிய அரசியல் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது, ​​அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறக்குறைய முப்பத்தாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் இணைந்தனர்.

எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் ஹெலிகாப்டர் சின்னத்தில் போட்டியிட இந்த கூட்டணி முடிவு செய்திருந்தது. இந்தக் கூட்டணிக்கான ஒப்பந்தமும், அன்றைய தினமே கையெழுத்தானது. பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, சுதந்திர தேசிய பேரவையின் அழைப்பாளர் பேராசிரியர் ஜீஎல் பீரிஸ், உத்தர லங்கா கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி வீரசிங்க, ஜனஜய பெரமுன தலைவர் அனுர பிரியதர்ஷனயாப்பா, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அசங்க நவரத்ன மற்றும் சுதந்திர மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். ஆனால், தற்போது இந்தக் குழு உடைந்து சிதறியுள்ளது. நாலக கொடஹேவாவின் சுதந்திர மக்கள் முன்னணிக்கு ஹெலிகொப்டரின் வாக்குச் சின்னத்திற்கான உரிமை இருந்தது. ஆரம்பத்தில், கட்சியின் பெயர் 'சியநா கத்திக்காவ' என்றிருந்தது. இது, தேர்தல் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாகும்.

இப்போது ஐமசவில் நாலக்க, ஜிஎல் உள்ளிட்டோர் அடங்கிய சுதந்திர தேசிய பேரவையின் குழுவொன்று ஒன்றுசேரவுள்ளது. ஐமச கூட்டணியில் தயாசிறி இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லன்சா அணியின் தலைவராக அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்தவகையில், தற்போது திலங்க செயலாளர் பதவியை வகிக்கும் சுதந்திர மக்கள் கூட்டமைப்பில், உத்தரலங்கா சபையும் இன்னும் சில குழுக்களும் மாத்திரமே எஞ்சியுள்ளன. இலங்கையில் இயங்கும் 7 இடதுசாரி மற்றும் தேசியவாத கட்சிகள் உத்தர லங்கா என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளன. இந்த கூட்டணியின் முதல் மாநாடு செப்டம்பர் 4, 2022 அன்று நடைபெற்றது. இந்த கூட்டணியின் தலைவராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளார். இந்தக் கூட்டணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 15 இடங்கள் இருந்தன.

ஆனால் இப்போது அவர்களில் சிலர் ஐமசவுடன் சேரப் போவதாக ஒரு கதை. இதற்கிடையில், லஞ்சலாவுக்கும் விமலின் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த இரண்டு மூன்று பேருக்கும் கொக்கி போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், திலங்கவுக்கு லேசுபட்ட வேலை ஒப்படைக்கப்படவில்லை.

நாடாளுமன்ற அரசியலில் மிகப்பெரிய ஆபத்து கூட்டணி அமைப்பதில் உள்ளது. கூட்டணி வைத்து வெற்றி பெற்றவர்களைவிட, ஆட்சியையும் உயிரையும் இழந்தவர்கள் அதிகம். கத்தியில் தயிர் சாப்பிடுவதை விட இது ஆபத்தானது. கூட்டணி அமைப்பதென்பது ஒரு கவனமான அரசியலமைப்புச் செயல்பாடாகும் என்று, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம், அதாவது கஃபே அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் தற்போது விக்கிரமசிங்க ஜனாதிபதியின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமுமான ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் அரசியல் பெரும்பான்மையினர், ஏன் 'தனிக்கட்சி' அடையாளத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றனர்? இன்றைய நிலவரப்படி, இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட 85 அரசியல் கட்சிகளில் பெரும்பான்மையான கட்சிகளுக்கு 'கண்கவர் அடித்தளம்' இல்லை, 'அடையாளம்' இல்லை. அத்தகைய தத்துவ அடிப்படையைக் கொண்ட கட்சிகளுக்கு அமைப்பு பலமோ பொறிமுறையோ இல்லை. கட்சிகளுக்கு தத்துவ அடிப்படை மற்றும் பொறிமுறையின் பற்றாக்குறையை மறைக்க கூட்டணிகளை உருவாக்குவதைத் தவிர வேறு வழியில்லை” என்று, கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இப்படி எந்தக் கதைகளைக் கூறினாலும், கூட்டணி அமைக்காமல் வெற்றிபெற முடியாதென்பதை ஜேவிபியும் ஐமசவும் நன்றாக உணர்ந்துள்ளன. அத்துடன், கூட்டணி அமைப்பதென்பது, ஜேவிபிக்கு ஒன்று புதிய விடயமல்ல. 88 89 களின் பின்னர், 1994 ம் ஆண்டில் மீண்டும் ஜேவிபி அரசியலுக்கு வந்ததே, ஆரிய புலேகொடவின் ஸ்ரீலங்கா முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் முன்னணியாக பூச்சாடி சின்னத்திலேயாகும்.

அப்போது ஜேவிபி, தகுதிகாண் அரசாங்கமொன்றையும் அமைத்தது. 2010 ஆம் ஆண்டு, டிரான் அலஸின் "ஜனநாயகக் கட்சி"யுடன் இணைந்து, "ஜனநாயக தேசியக் கூட்டணி" என்ற பெயரில் "வெற்றிக்கிண்ணம்" சின்னத்தின் கீழ் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டது. திசைக்காட்டி சின்னத்திலான தேசிய மக்கள் முன்னணி என்பதும் ஒரு கூட்டணியே.

ஜேவிபி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைந்தே திசைக்காட்டிக்கான கூட்டணி அமைக்கப்பட்டது. இன்று அநுரவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு அந்தக் கூட்டணி மிக முக்கியமான காரணியாக மாறியுள்ளது. அதன் பின்னணியில்தான், இம்முறை அநுர தரப்புக்கு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்போம் என்ற கோஷம் எழுந்துள்ளது.

இந்நாட்களில் பேசப்படும் தேர்தல் கூட்டணிகளில், சஜித்தின் ஐமச புதிய கூட்டணியும் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர தேசிய சபையின் GL குழு, தற்போது தெளிவான உடன்பாட்டிற்கு வந்துள்ளது. ஐமசவுடன் சுயேச்சை எம்பிக்கள் குழு, கூட்டணி அமைக்கவுள்ளது. அக்கட்சியின் உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பினால், அந்தக் கட்சி எப்போதும் எதிர்க்கட்சியில்தான் இருக்கும். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒரு கட்சி இதே விளையாட்டை விளையாட வேண்டும்.

பிசாசின் தாயுடன் இணைந்தாவது அடுத்த அரசாங்கத்தை அமைப்பேன் என்று இடதுசாரி தலைவர் கொல்வின் ஆர் டீ சில்வா கூறியதாக ஐமசவின் ஆர்வலர் ஒருவர், ஐமச கூட்டணிக்கு ஹர்ஷ தரப்பு தெரிவித்துவரும் ஆட்சேபனைக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள அனைத்து முன்னணி கட்சிகளும் கடந்த நான்கு தசாப்தங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணியாகவே போட்டியிட்டுள்ளன.

அது, தத்துவ அடிப்படை மற்றும் நிறுவன பொறிமுறையின் நெருக்கடியை சமாளிப்பதுடன். இலங்கையில் முறையான கூட்டணியை பதிவு செய்ய, நான்கு வருடங்கள் அரசியல் கட்சியாக பணியாற்றியதற்கான ஆவணங்கள் மற்றும் கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். அதனால்தான் தேர்தல் கூட்டணிகள் உருவாகின்றன. அவை தயாரிப்பது எளிது, ஆனால் ஆபத்து கொஞ்சம் அதிகம்.

மாவட்ட அளவில் வாக்காளர் தளம் இல்லாத எந்தக் கட்சியும், ஒரு தனிநபருடன் எழுத்துப்பூர்வ தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் நுழைவது பெரும்பாலும் பிரதான கட்சியை மோசமாகப் பாதித்திருக்கிறது. ஏனெனில், மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களுக்கு இடமளிப்பதன் மூலம், பிரதான கட்சியொன்று தனது வேட்பாளரை நியமிக்கும் வாய்ப்பை இழக்கிறது.

கடைசி நிமிடத்தில் கொழும்புக்கான வேட்புமனுவில் கையெழுத்திட்ட ஏஎச்எம் ஃபௌசியின் நடவடிக்கை காரணமாக, ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார். களுத்துறையைச் சேர்ந்த குமார் வெல்கம காரணமாக, அஜித் பி பெரேரா தனது ஆசனத்தை இழந்துள்ளார். “நாடாளுமன்றத் தேர்தலுக்கு, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் தேவை.

இணக்கமற்ற பலவீனமான கட்சிகளுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகள் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் தோல்விக்கு வழிவகுக்கும்'' என்று கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கிறார். தென்னகோனின் இந்தக் கதைகளைக் கேட்கும் சிலர், ஐமசவின் கூட்டணிக்கு, ஜனாதிபதி தரப்பு அச்சமடைந்திருக்கிறதென்றே கூறுகின்றனர்.

தம்மிகவை வேட்பாளராக்குவதற்கு மொட்டுக்குள் பிரச்சினை: 10 காரணிகளுடன் ஆவணம் கையளிப்பு!

டிசம்பர் 15 ம் திகதி நடைபெற்ற மொட்டுக் கட்சியின் மாநாட்டில், அக்கட்சியின் மூளையாகக் கருதப்படும் பெசில் ராஜபக்ஷ, பிரபல வர்த்தகர் தம்மிக பெரேராவுக்கு, ராஜபக்ஷக்கள் மத்தியில் முன்வரிசை ஆசனத்தைக் கொடுத்து, அவரை உத்தியோகபூர்வமற்ற ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தார். ஆனால், தற்போது தம்மிக பெரேரா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவாரா, இல்லையா என்ற சந்தேகம் மொட்டுக் கட்சியிலுள்ள சிலருக்குக்கூட ஏற்பட்டுள்ளது.

அண்மையில், நாமல் ராஜபக்ஷ எம்பியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போது, அந்த விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. மொட்டுக் கட்சியின் பின்வரிசை எம்பிக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுடன், மலலசேகர மாவத்தையில் உள்ள நாமலின் வீட்டில் அந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. “ஏன் தம்மிக பெரேராவுக்கு வாய்ப்பளிக்கிறீர்கள், நீங்கள் கேட்கலாம்தானே” என்று, அங்கிருந்த எம்பியொருவர் நாமலிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள நாமல், “முதலில் கட்சியை உருவாக்க வேண்டும், கட்சி கூறினால் ஜனாதிபதி தேர்தலுக்கு அல்ல எந்த தேர்தலுக்கும் வருவேன், நான் எந்த சவாலையும் ஏற்க விரும்புபவன்” என்று குறிப்பிட்டுள்ளார். நாமல் அவ்வாறு தெரிவித்தது, அவருக்கே சற்று கடுமையானதெனத் தெரிந்துள்ளது. அதனால் நிலைமையைச் சமாளிப்பதற்காக இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

“ஆனால் நாம் முதலில் கட்சியைக் கட்டியெழுப்பி, தேர்தலொன்றுக்குத் தயார்ப்படுத்த வேண்டும். அரசியல் சபையினால் அந்தப் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்றார். இதற்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சரொருவர், “அது சரி, உண்மையில் நாம் இப்போது அதைத்தான் செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“ஊர்களுக்குச் செல்லும்போது, ஜனாதிபதி வேட்பாளர் யாரென்றுதான் பலரும் கேட்கிறார்கள். மாநாட்டுக்குப் பிறகுதான் கட்சியின் ஆதரவாளர்கள் பெருமூச்சுவிடுகிறார்கள்” என்று, மற்றுமொரு ராஜாங்க அமைச்சரொருவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். “ஆம், தேர்தலில் போட்டியிடுவதற்கு, இப்போதைக்கு நான்கு பேர் தயார்நிலையில் இருக்கிறார்கள். நானும் பெசில் ராஜபக்ஷவும் கேட்கத் தயாரானால், எமது கட்சிக்குள்ளேயே ஆறு பேர் தயார்நிலையில் இருப்பார்கள்” என்று, அவர்கள் எல்லோரும் என்னதான் சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்காக நாமல் போட்டுப்பார்த்துள்ளார்.

நாமலின் சகாக்கள் இந்த மனநிலையில் இருந்தாலும், நத்தார் பண்டிகை முதலே தம்மிகவின் தேர்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்றே பலரும் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு மூன்று நான்குமுறை பெசிலுக்கு ஃபோன் செய்து, முன்னேற்றங்கள் தொடர்பில் அப்டேட் செய்து, மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறாராம். இதற்கிடையில், மொட்டுக் கட்சியின் சிலர், 10 நிபந்தனைகள் அடங்கிய ஆவணமொன்றை தம்மிகவிடம் கையளிக்கத் தயாராகி வருகின்றனராம்.

மொட்டுக் கட்சியின் வேட்பாளர் வாய்ப்பு வேண்டுமென்றால், “விவசாய மானியத்தை அதிகரிப்பது, பத்தாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, VAT குறைப்பு மற்றும் பொருட்களின் விலை குறைப்பு, அரச சொத்துக்களை தனியார் மயமாக்காமலிருத்தல், டொலர் சம்பாதிக்கும் உத்தியை வெளிப்படுத்துவது உள்ளிட்ட 10 நிபந்தனைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதாவது, தம்மிகவை மொட்டின் வேட்பாளராக்கும் பெசிலின் யோசனைக்கு, மொட்டுக் கட்சிக்குள்ளேயே பல குழப்பங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கின்றன என்பது தெளிவாகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், நீண்ட காலம் கடந்து செல்வதற்குள் இது பற்றிய சரியான தகவலை வழங்க முடியும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி