அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்

கருத்துருவாக்கத் தளத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தவர் மு. திருநாவுக்கரசு.அவர் அதனை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது எழுதியிருந்தார். அதற்குரிய தர்க்கங்களை முன்வைத்து அவர் “பொங்குதமிழ்” இணையத் தளத்தில் ஒரு கட்டுரையும் எழுதினார்.அதன்பின் 2015 ஆம் ஆண்டும் ஒரு கட்டுரையை எழுதினார்.அதன் பின் 2019 ஆம் ஆண்டும் ஒரு காணொளியில் பேசியிருக்கின்றார்.ஆனால் அவருடைய கருத்தை எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல்வாதியோ கிரகித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் பேரவை ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு சுயாதீனக் குழுவை உருவாக்கியது. அக்குழுவினர் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தமிழ்க் கட்சித் தலைவர்களோடு உரையாடுவது என்ற முடிவை எடுத்தது. தமிழ் மக்கள் பேரவையின் நிதிப் பங்களிப்போடு சுயாதீனக் குழு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசியது. தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அதற்குச் சம்மதிக்கவில்லை.ஏனைய கட்சிகள் சம்மதித்தன. விக்னேஸ்வரன் அப்பொழுதும் அதை ஆதரித்தார். இப்பொழுதும் ஆதரிக்கின்றார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை முதலில் முன்வைத்தது சுரேஷ் ப்ரேமச்சந்திரன்.அதன் பின் அவர் சார்ந்த கட்சி இணைந்திருக்கும் குத்துவிளக்குக் கூட்டணி அகோரிக்கையை முன் வைத்தது.இப்பொழுது விக்னேஸ்வரன் அக்கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.ஒரு பொது வேட்பாளராக தேர்தலை எதிர்கொள்ளத் தான் தயார் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். இப்பொழுதும் தமிழரசுக் கட்சி அதற்கு ஆதரவாக இல்லை என்றே கருத வேண்டியுள்ளது. கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் சுமந்திரனுக்கு நெருக்கமான சாணக்கியன் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.கஜேந்திரகுமார் அதற்கு முன்னரே மட்டக்களப்பில் வைத்து தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார்.

கஜேந்திரகுமார் கூறுகிறார்,தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும் என்று கேட்பவர்கள் ஒற்றை ஆட்சிக்குள் ஒரு தீர்வை ஏற்றுக் கொள்பவர்கள் என்று. அவர்கள்,பிரதான சிங்கள வேட்பாளர்களில் யாரோ ஒருவரை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதில் எந்த ஒரு சிங்கள வேட்பாளரையும் தனது கட்சி ஆதரிக்காது என்றும்,எனவே தேர்தலைப் பரிஷ்கரிக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சாணக்கியன் கூறுகிறார் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவானது என்று.

இந்த இருவருடைய கருத்துக்களையும் சற்று ஆழமாகப் பார்க்கலாம். பொதுவான தர்க்கத்தின்படி,ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிச்சயமாக தேர்தலில் வெல்லப் போவதில்லை. ஆனால் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றியை அவர் சந்தேகத்துக்கு உள்ளாக்குவார் அல்லது சவால்களுக்கு உள்ளாக்குவார். தமிழ் மக்களின் 5 லட்சத்துக்கும் குறையாத வாக்குகள் தமிழ் பொது வேட்பாளருக்கு கிடைத்தால், எந்த ஒரு சிங்கள வேட்பாளருக்கும் 50 விகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இரண்டாவது சுற்று வாக்குக் கணக்கெடுப்புக்கு போக வேண்டியிருக்கும். அப்பொழுது தமிழ் மக்கள் எந்த சிங்கள வேட்பாளருக்கு தமது இரண்டாவது விருப்பத்தெரிவு வாக்கைக் கொடுக்கிறார்களோ, அவருக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும். எனவே பிரதான சிங்கள வேட்பாளர்கள் தமிழ் மக்களோடு ஏதோ ஒரு டீலுக்கு போக வேண்டி வரும். அதைத்தான் கஜேந்திரக்குமார் ஏதோ ஒரு தரப்பை ஆதரிப்பது என்று வியாக்கியானம் செய்கின்றார்.

ஆனால் அவ்வாறு டீலுக்கு போவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், தமிழ்த் தரப்புடன் அவ்வாறான ஒரு வெளிப்படையான உடன்படிக்கைக்கு வர எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் தயாராக இருக்க மாட்டார் என்பதுதான். 2010ல் சரத் பொன்சேகாவுக்கு என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். தமிழ் மக்களோடு ஓர் உடன்படிக்கைக்கு வரும் சிங்கள வேட்பாளரை கடும்போக்கு சிங்கள வாக்குகள் தோற்கடித்து விடும் என்ற அச்சம் இரண்டு பிரதான சிங்கள வேட்பாளர்கள் மத்தியிலும் இருக்கும். எனவே ஒரு தமிழ் பொது வேட்பாளருடன் இனப்பிரச்சினை தொடர்பாக ஒரு வெளிப்படையான எழுத்துமூல உடன்படிக்கைக்கு வர எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

இந்த யதார்த்தத்தை வைத்துச் சிந்தித்தால், தமிழ்ப் பொது வேட்பாளர் எந்த ஒரு சிங்கள வேட்பாளரோடும் பேரம் பேசும் நிலமை குறைவாகவே இருக்கும். அப்படியென்றால் அதாவது சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேச முடியாது என்றால், பிறகு எதற்கு தமிழ் பொது வேட்பாளர்?

இந்த இடத்தில்தான் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு இருக்கும் மற்றொரு முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.அது தமிழ்த் தேசிய நோக்கு நிலையில் இருந்து முக்கியமானது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர், தமிழ் வாக்குகளை ஆகக்கூடிய பட்சம் தன்னை நோக்கித் திரட்டுவார். அது தமிழ் மக்களின் தேசத் திரட்சியை உறுதிப்படுத்தும். கடந்த 15 ஆண்டு காலமாக ஜனாதிபதித் தேர்தல்களின் போது, தமிழ் மக்கள் ராஜபக்சக்களுக்கு எதிராகவே வாக்களித்து வந்திருக்கிறார்கள்.பொதுத் தேர்தல்களில் தமிழ் மக்கள் கட்சிகளுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதனால் தமிழ் வாக்குகள் சிதறிக் காணப்பட்டன. ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் மட்டும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களித்து வந்திருக்கிறார்கள்.அதாவது,கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் தேசத் திரட்சியை ஒப்பீட்டளவில் பெருமளவுக்கு நிரூபித்த ஒரு வாக்களிப்பாக அது காணப்பட்டது.அவ்வாறு ராஜபக்சங்களுக்கு எதிராகப் போகும் வாக்குகளை தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கித் திருப்பினால், அது தேசத் திரட்சியை நோக்கிய ஒரு வாக்களிப்பாக இருக்குமல்லவா ?

தமிழ்ப் பொது வேட்பாளர் குத்துவிளக்கு கூட்டணிக்குள் இருந்து வருவாராக இருந்தால், அவர் 13 வது திருத்தத்தை அதாவது ஒற்றை ஆட்சிக் கோரிக்கையை முன்வைப்பார் என்று கஜேந்திரகுமார் சந்தேகப்படுகிறார். அப்படியென்றால் குத்துவிளக்கு வெளியே இருந்து ஒரு பொது வேட்பாளரை இறக்கலாம். அந்தப் பொது வேட்பாளர் தமிழ் மக்களுக்கு உச்சபட்சமான ஒரு தீர்வை முன்வைத்து தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வாக்குக் கேட்கலாம். அவருக்கு விழும் வாக்குகள் தமிழ் மக்களின் ஆகப் பிந்திய மக்கள் அணையாக வெளி உலகத்திற்குக் காட்டப்படும். அதை ஒரு விதத்தில் தமிழ் மக்களின் ஆணையைப் பெறுவதற்கான மறைமுகப் பொது வாக்கெடுப்பாக பயன்படுத்தினால் என்ன?

எனவே இங்கு பிரச்சனை குத்து விளக்கு கூட்டணி அதை முன்வைக்கின்றது என்பது அல்ல. சுரேஷ் பிரேமச்சந்திரன் அதைக் குறித்து அதிகமாக பேசி வருகிறார் என்பதுமல்ல. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தேசத் திரட்சியைப் பாதுகாப்பார். தமிழ் மக்களின் அகப் பிந்திய ஆணையை வெளியே கொண்டு வருவார் என்ற அடிப்படையில் அதைக் குறித்துச் சிந்தித்தால் என்ன?

அடுத்தது சாணக்கியன் சொன்னது.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் பெரும்பாலும் சஜித் பிரேமதாசாவின் வாக்குகளைக் கவர்ந்து விடுவார் என்ற ஒரு அச்சம் சஜித் அணியிடம் இருக்க முடியும். ராஜபக்ஷவுக்கு எதிரான வாக்குகள் வேறு எங்கே போய்ச் சேரும்? சஜித்தைத் தான் போய்ச் சேரும் என்ற ஒரு தர்க்கம் இங்கு முன்வைக்கப்படலாம். ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சகளின் தயவில் தங்கியிருக்கிறார்.ஜனாதிபதி தேர்தலில் அவர் தாமரை மொட்டு கட்சியின் ஆதரவின்றி வெல்ல முடியாது. தாமரை மொட்டு கட்சிக்கு ரணில் தேவை. ஏனென்றால் உலக சமூகம் அவர்களுக்கு எதிராக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் தற்காப்பு நிலைக்குச் சென்று தம்மை பலப்படுத்திக் கொண்ட பின், அடுத்தடுத்த தேர்தல்களில் மீண்டும் யுத்த வெற்றி வாதத்தை முன் வைக்கலாம் என்று சிந்திக்கக் கூடும். அவ்வாறு தாமரை மொட்டுக் கட்சியானது தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்தால், அவர்களுக்கு ரணில் என்ற முன் தடுப்பு தேவை.

இப்படிப்பட்டதோர் அரசியல் சூழலில்,ரணிலை தமிழ் மக்கள் ராஜபக்சக்களோடு சேர்த்துப் பார்த்தால் தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவுக்கு எதிரணிக்குப் போகக்கூடிய வாய்ப்புகளை அதிகம் உண்டு. அவ்வாறு எதிரணியை நோக்கிப் போகக்கூடிய வாக்குகளை ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் கவர்ந்தால், எதிரணி வெற்றிபெறும் வாய்ப்புகள் மேலும் குறையலாம். எனவே எதிரணியை ஆதரிக்க கூடிய தமிழ் தரப்புக்களும் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை விரும்பாது.

இந்த அடிப்படையில்தான் தமிழ்த் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளருக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றனவா? ஒரு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிச்சயமாக வெல்லமாட்டார்.ஆனால் அவர் சிங்களத் தலைவர்களின் வெற்றிகளை வேண்டுமென்றால் சவால்களுக்கு உட்படுத்தலாம். அங்கேயும் கூட தனிச்சிங்கள வாக்குகளைத் திரட்டுவது என்று ராஜபக்சக்களைப் போல முடிவெடுத்தால் என்ன நடக்கும்? அதற்கு நாட்டில் அனர்த்தம் வேண்டும்.தமிழ் மக்களுக்கு எதிராக அல்லது முஸ்லிம் மக்களுக்கு எதிராக தனிச் சிங்கள வாக்குகளைத் திரட்டுவதற்கு நாட்டில் பதட்டம் ஏற்பட வேண்டும்.இன முரண்பாடுகள் தூண்டப்பட வேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு பின்னரான அரசியல் சூழல் அவ்வாறு ராஜபக்சக்களை நோக்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்டிக் கொடுத்தது. ஆனால் அங்கேயும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்குள் ராஜபக்சங்களுக்கு ஆதரவான தமிழ் முஸ்லிம் மலையக வாக்குகள் இருந்தன என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே ஒரு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகிறவர் சிங்கள வேட்பாளர்களோடு பேரம் பேசலாமோ இல்லையோ, அவர் தமிழ் மக்களின் உச்சபட்ச கோரிக்கையை -நிச்சயமாக அது ஒற்றை ஆட்சி கோரிக்கையாக இருக்கக் கூடாது- முன்வைத்து தேர்தலில் நிற்கலாம் தானே? தமிழ் வாக்குகளை கையெழுத்திடப்பட்ட வெற்றுக் காசோலையாக-பிளாங்க் செக்-சிங்கள வேட்பாளர்களுக்கு கொடுப்பதை விடவும் அதை ஒரு பேரத் துருப்புச் சீட்டாக அல்லது தமிழ் மக்களின் ஆணையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்தினால் என்ன ?

  • நிலாந்தன்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி