மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை கோரி வடக்கு, கிழக்கு உள்ள நீதிவான் நீதிமன்றங்களில் பொலிஸாரால் தாக்கல்

செய்யப்பட்ட மனுக்கள் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளன.

பொதுச் சுகாதாரத்துக்கும், பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பங்கமில்லாமல் உயிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தலாம் என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் யாழ். நீதவான் நீதிமன்றத்திலும், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் நெல்லியடிப் பொலிஸாரால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்திலும் , ஊர்காவற்துறைப் பொலிஸாரால் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் இன்று நடைபெற்ற விசாரணைகளை அடுத்து அந்தந்த நீதிமன்றங்களால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, சுன்னாகம், அச்சுவேலி மற்றும் தெல்லிப்பளை பொலிஸாரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் கடந்த வாரம் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா - ஈச்சங்குளம் பகுதியில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை விதிக்குமாறு கோரி வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் அந்த நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளை தகுந்த முறையில் நினைவுகூருவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை என்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திருகோணமலையில் மாவீரர்களை நினைவேந்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுச் சுகாதாரத்துக்கும் பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பங்கமில்லாமல் மாவீரர் நினைவேந்தலை நடத்தலாம் என்று மூதூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பூர் - ஆலங்குளம் பகுதியில் மாவீரர் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்குமாறு கோரி மூதூர் நீதிவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சட்டத்தரணி டி.ரமணனால் இந்த நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதுடன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் இது தொடர்பில் வாதம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை கோரி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 7 பொலிஸ் நிலையங்களால் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும், மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் கடந்த வாரம் அந்தந்த நீதிமன்றங்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

'இறந்தவர்களை நினைவு கூருவதைத் தடை செய்ய முடியாது. ஆனால், தடை செய்யப்பட்ட அமைப்பை அல்லது அவர்களை அடையாளப்படுத்தும் கொடி உள்ளிட்ட எதனையும் பயன்படுத்த முடியாது. பொதுச் சுகாதாரத்துக்கும், பொதுமக்கள் பாதுகாப்புக்கும் பங்கமில்லாமல் உயிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தலாம்.' என்று வடக்கு, கிழக்கில் உள்ளநீதிவான் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி