டெலிகொம், காப்புறுதி, லிட்ரோ எரிவாயு நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களை விற்பதற்கு அல்லது அப்புறப்படுத்த அமைச்சரவை
எடுத்த தீர்மானத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அதனைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்டோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திருத்த மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, குறித்த மனுவில் திருத்தம் செய்து ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிட மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த மனு இன்று முர்து பெர்னாண்டோ, ஜனக் டி சில்வா மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபரை பிரதிவாதியாக நியமிக்க உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, அதன்படி, அடிப்படை உரிமை மனுவில் திருத்தம் செய்ய அனுமதிக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை அனுமதியளித்த உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் திகதி மனுவை பரிசீலிக்க உத்தரவிட்டது.