திருகோணமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை. நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம். - நடந்த சம்பவத்திற்கு வருத்தமும் தெரிவிப்பு.திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு தனது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து கொண்டு கடமையேற்கச் சென்ற ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களை கடமையேற்க விடாமல் தடுத்தமை தொடர்பில் பாடாசலை அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களுக்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (22) திருகோணமலை நீதவான் நீதிமன்றின் முன் அழைக்கப்பட்டிருந்தது.எதிர்காலத்தில் ஹபாயா ஆடை தொடர்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தப்படமாட்டாது என்று கூறி நல்லெண்ண அடிப்படையில் வழக்குகளை இணக்கமாக முடித்துக்கொள்ள விரும்புவதாக சண்முகா வித்தியாலயத்தின் அதிபர் தரப்பானது திறந்த நீதிமன்றில் முன்மொழிந்திருந்தது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியையோடு கலந்தாலோசித்த ஆசிரியையின் சட்டத்தரணிகள் பின்வரும் நிபந்தனைகளை அதிபரும் பாடசாலை சமூகமும் ஏற்பின் இணக்கமொன்றுக்கு வர சாத்தியமிருப்பதாக கூறி அதனை நீதிமன்ற வழக்கேட்டிலும் பதிவு செய்திருந்தனர்.1) இனி எக்காலத்திலும் சண்முகா கல்லூரிக்கு கற்பிக்க செல்கின்ற முஸ்லிம் ஆசிரியைகள் தமது ஆடையாக அபாயாவை அணிவதற்கு தன்னாலோ தனது பாடாசாலை சமூகத்தாலே எவ்வித தடங்கல்களும்; ஏற்படுத்தப்பட மாட்டாது என்று பாடசாலை அதிபர் வெளிப்படையாக உத்தவராதமளிக்க வேண்டும்.2) 05 வருடங்களாக ஆசிரியை பஹ்மிதா றமீஸ் அவர்களுக்கு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டிருக்கின்ற சம்பள உயர்வு, பதவி உயர்வு என்பவற்றை பெறுவதற்கான வருடாந்த மீளாய்வு படிவம் உட்பட அனைத்து ஆவணங்களையும் சண்முகா வித்தியாலய அதிபர் உடனே கையெழுத்திட்டு வழங்க வேண்டும்.3) ஆசிரியை பஹ்மிதா அவர்கள் சண்முகா வித்தியாலயத்திற்கு மீளவும் முறையாக நியமனம் பெறுகின்ற விடத்து அபாயா ஆடையுடன் தனது ஆசிரிய கடமைகளை மேற்கொள்ள எவ்வித ஆட்சேபனைகளையும் தனக்கு இல்லையென்ற உத்தரவாதத்தினை இந்நீதிமன்றில் அளிக்க வேண்டும்.4) ஆசிரிய பஹ்மிதா அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தீங்குகள் தொடர்பில் தமது மனவருத்தத்தினை மன்றில் வெளிப்படையாக பதிவு செய்ய வேண்டும்.பாடசாலை அதிபர் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் இந்நிபந்தனைகளை உள்வாங்கி தனது சமர்ப்பணத்தினை செய்ததுடன் அதில் விசேடமாக இலங்கையில் முஸ்லிம் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையாக ஹபாயாவை அணிவதற்கு சட்டரீதியாக அவர்களுக்கு உரிமையுள்ளது என்பதனை ஏற்றுக்கொண்டிருந்தார்.அவர் தனது சமர்ப்பணத்தில் 'இன்றிருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு அமைவாக எவரும் ஹபாயா அணிந்து வருவதற்கான உரிமை உண்டு என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம். அதில் எந்தவிதமான தயக்கமோ, பின்வாங்கலோ கிடையாது' என்று கூறி அதனை வழக்கேட்டிலும் பதிவு செய்திருந்தார்.மேலும் அன்றைய சம்பவம் கல்லூரி வளாகத்தில் நடந்திருப்பது வருந்தத்தக்க விடயம் என்றும் இவ்வழக்கு இணக்கமாக தீர்க்கப்படுமிடத்து பஹ்மிதா ஆசிரியை தனது சம்பள உயர்வுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமிடத்து அவற்றிற்கு உடனடியாக சிபாரிசு கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியையும் அதிபர் சார்பாக வழங்கியிருந்தார். இவ்விரு சமர்ப்பணங்களையும் பதிவுசெய்த நீதிமன்றம் அவற்றையேற்று தனது கட்டளையினை ஆக்கியதுடன் அவற்றினடிப்படையில் இச்சம்பவத்தோடு தொடர்புபட்ட 03 வழக்குகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா சார்பில் சட்டத்தரணி ஏ.எம்.சாதிர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான ஹஸ்ஸான் றுஷ்தி, றதீப் அகமட் மற்றும் எம்.எம்.ஏ. சுபாயிர் ஆகியோர் ஆஜராயிருந்ததுடன் தவிசாளர் சட்டமாணி றாஸி முகம்மத் அவர்களும் மன்றில் பிரசன்னமாயிருந்தார்.கடந்த 05 வருடங்களுக்கும் மேலாக இழுபறியில் இருந்த வந்த இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியை சார்பாக குரல்கள் இயக்கம் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.சண்முகா ஹபாயா விவகாரம் என்பது ஒரு தனிப்பட்ட ஆசிரியைக்கு நடந்த அநீதி என்பதனை விட இது முஸ்லிம் பெண் அரச ஊழியர்களின் கலாச்சார ஆடை உரிமையினை உத்தரவாதப்படுத்துவற்கான போராட்டமாகும். சண்முகா இந்து மகளிர் கல்லூரி சமூகமானது முஸ்லிம் பெண் ஆசிரியைகள் தங்களது கலாச்சார ஆடையான ஹபாயாவை அணிந்து வருவதற்கு எந்த தடையுமில்லை என்று ஏற்றுக்கொண்டிருப்பது இச்சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.இது 'துருக்கி தொப்பியினை நீதிமன்றில் அணிவதற்கான போராட்டத்திற்கு" நிகரான சட்ட போராட்டமாகும். இந்த வெற்றி ஆசிரியை பஹ்மிதா அவர்களுக்கு மட்டுமானதல்ல. மாறாக தங்களது கலாச்சார ஆடையாக ஹபாயாவை அணிந்து அரச அலுவலகங்களுக்கு பணிபுரியச் செல்கின்ற அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி