பெண்கள் மற்றும் நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடசாலை சிறுவர்கள் உட்பட 133 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மத்திய சகைன்

பிராந்தியத்தில் உள்ள சமூகக் கூடம் ஒன்றின் மீது வான் தாக்குதல் நடத்தியதை மியன்மார் இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

பா சி கியி கிராமத்தில் உள்ள இராணுவ ஆட்சியை எதிர்க்கும் ஆயுதக் குழு ஒன்றின் அலுவலகம் திறக்கப்படும் விழா மீது பாதுகாப்புப் படை கடந்த செவ்வாய்க்கிழமை (11) தாக்குதல் நடத்தியதாக இராணுவ பேச்சாளர் சோ மின் டுன் குறிப்பிட்டுள்ளார்.

இதில் கொல்லப்பட்ட சிலர் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான போராளிகள் என்றும் சிவில் உடை அணிந்த சிலரும் பலியாகி இருப்பதாகவும் அவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

சமூகக் கூடத்தின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை காலை போர் விமானங்கள் குண்டுகளை வீசியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவீச்சுக்குப் பின்னர் உயிர் தப்பியவர்கள் மீது ஹெலியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், “இதனைச் செய்தவர்கள் பொறுப்புக் கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இதனை ஒரு பயங்கரச் சம்பவம் என்று வர்ணித்திருக்கும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டுர்க், சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் 2021 பெப்ரவரியில் ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் அதன் எதிர்ப்பாளர்களுக்கு எதிரான வான் தாக்குதல்களை பயன்படுத்துவதை அதிகரித்துள்ளது.

இராணுவ சதிப்புரட்சிக்கு சகைன் பிராந்தியத்தில் எதிர்ப்பு வலுத்ததோடு அந்த சமூகத்தினர் சொந்த ஆயுதக் குழுவை உருவாக்கி செயற்படுவதோடு சொந்தமாக பாடசாலை மற்றும் மருத்துவ நிலையங்களையும் நடத்தி வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி