முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் தலைமையில் “நாம் ஸ்ரீலங்கா” அமைப்பு, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய
முன்னணியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் “நாம் ஸ்ரீலங்கா” அமைப்புக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை வெள்ளிக்கிழமை காலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்படவுள்ளது. ஸ்ரீ.ல.சு.கட்சி தொகுதி அமைப்பாளர்கள் அனேமானோரைக் கொண்ட “நாம் ஸ்ரீலங்கா” அமைப்பு, ஸ்ரீ.ல.சு.கட்சியைப் பாதுகாப்பதற்காக ராஜபக்ஷ குடும்பத்தின் மொட்டு கட்சிக்கு எதிராக பரந்தளவிலான கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதோடு, நவம்பர் 05ம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் மாநாடு ஒன்றையும் கூட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.