இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் தூண்களாக

விளங்கினாலும், இதுவரையில் தமது வாழ்க்கைக்கு வசந்தம் ஏற்படாதுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான காணி மற்றும் வீட்டு உரிமை உட்பட பல்வேறு உரிமைப் பிரச்சினைகள் தொடர்பில், இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஆளுங்கட்சி எதிர்க்கட்சியினர் இடையே காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களில் பலரும், பல ஆண்டுகளாகவே பல ஆட்சிகளின் கீழ் பெருந்தோட்டச் சேவைகள் தொடர்பான அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ள ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க, மேலுமொரு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் மன்றில் அறிவித்தார்.

இதுவரை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்துவரும் மிகக் குறைந்த வசதிகளுடைய வீட்டுத் தொகுதிகள் தொடர்பான கணக்கு விவரங்களை மன்றில் சமர்ப்பித்த வேலுசாமி ராதாகிருஸ்ணன் எம்.பி, பெருந்தோட்ட மக்களுக்காக சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் வீடுகள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

'ஒரு இலட்சத்து நாற்பத்து ஆறாயிரத்து எழுநூற்று 14 வீடுகள் இன்னும் தேவைப்படுகின்றன. அத்துடன், தற்காலிகக் குடிசைகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்துவரும் மக்களின் தொகை பத்தாயிரத்து 991ஆகக் காணப்படுகின்றது' என்று அவர் எடுத்துரைத்தார்.

2005ஆம் ஆண்டு முதல் மூன்று அரசாங்கங்களின் கீழ் அமைச்சர் பதவி வகித்த மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான வீடுகளை அரசாங்கத்தால் தனித்து அமைத்துக்கொடுக்க முடியாதென்றும் அதற்காக வெளிநாட்டு நிதியுதவியை நாடவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இந்திய வீடுகள் எங்கே?

கடந்த காலங்களில் இந்திய அரசாங்கத்தினால் பத்தாயிரம் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான உதவிகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவற்றை நிர்மாணிப்பதற்கான காணிகளை ஒதுக்குவதில் தோட்ட முதலாளிமார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இது தான் இங்குள்ள பிரச்சினை என்றும் இராதாகிருஸ்ணன் எம்.பி குறிப்பிட்டார்.

இலங்கையில் தமக்கென்று வீடற்றிருக்கும் மக்களில் பெருந்தோட்ட மக்களே முன்னிலையில் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இராதாகிருஸ்ணன் எம்.பியின் தகவல்படி, 36,158 பெருந்தோட்டக் குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி காணப்படுகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் பெருந்தோட்ட மக்களின் உணவுத் தேவையை விட மலசலகூடத் தேவை பெரிதாகத் தோற்றவில்லை எனவும் அவர் எடுத்துரைத்தார்.
'சாப்பிட்டால் தானே மலசலகூடம் செல்லவேண்டும். சாப்பாட்டுக்கே வழியில்லை. அதனால் மலசலகூடம் செல்லவும் தேவையில்லை. அதனால்தான் அவர்கள் மலசலகூடம் நிர்மாணிப்பதைக்கூட நிறுத்திவிட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

இதன்போது மன்றில் கருத்துரைத்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம், பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம், தற்போது குறைவடைந்துள்ள தேயிலை அறுவடையை அதிகரித்துக்கொள்ள முடிவதோடு அதன் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார நிலைமையை மேம்படுத்த முடியுமென்றார்.

தொழிலாளர்களிடம் தோட்டங்களை ஒப்படையுங்கள்...

1992ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் 22 கம்பனிகளிடம் பெருந்தோட்டங்கள் குத்தகைக்கு விடப்பட்ட போது 12 இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றினார்கள் என்று எடுத்துரைத்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், அந்தத் தொகை தற்போது ஒரு இலட்சத்து 43 ஆயிரமாகக் குறைவடைந்துள்ளது என்றார்.

தோழிலாளர்களின்மையால் இதுவரையில் 9 ஆயிரம் ஹெக்டெயார் தோட்டக் காணிகள் பயிரிடப்படாமல் கைவிடப்பட்டுள்ளன. தோட்ட நிர்வாகத்தினரின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்த சுரேஸ் எம்.பி, தோட்டக் கம்பனிகளால் தோட்டங்கள் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை என்றும் அதனால் அந்தக் காணிகளை அரசாங்கத்திடம் மீளக் கையளிக்க வேண்டுமென்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

இதன்போது மன்றில் உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், தோட்டத் தொழிலாளர்களால் பரம்பரை பரம்பரையாகப் பயிரிடப்பட்டு வந்த காணிகளும், தோட்ட உரிமையாளர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்ததோடு, ஒரு நாளில் ஒன்பது மணிநேரம் அயராது உழைக்கும் தோட்டத் தொழிலாளிக்கான ஒரு நாள் ஊதியம், யாசகனின் வருமானத்தை விடக் குறைவானது என வருந்தினார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒரு நாள் சம்பளம் ஆயிரம் ரூபாயாகக் காணப்பட வேண்டுமென்று சம்பள நிர்ணயச் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தோட்டக் கம்பனிகளால் அத்தொகை வழங்கப்படுவதில்லை என்று, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தச் சம்பளத் தொகையை வழங்க கம்பனிகள் நடவடிக்கை எடுக்காவிடின், மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்க அனைத்துத் தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி