நாட்டின் பொருளாதார மற்றும் இனப்பிரச்சினைக்கு  தீர்வு காணும் வகையில்,  பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய, புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

என  மக்கள் விடுதலை முன்னணியின் ( ஜே .வி.பி)  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான   அநுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதே  திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கும் வேடிக்கையான மனிதர்கள் இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர் எனவும் அவர் விமர்சித்தார். 

பாராளுமன்றத்தில்  இன்று (22) இடம்பெற்ற, அரசியலமைப்பின்  22ஆவது  திருத்தச் சட்டமூல வரைபின் இரண்டாம் வாசிப்பு  மீதான விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இதுவரை  திருத்தம் செய்யப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும்  எவ்வித வேறுபாடுமின்றி ஆதரவாக வாக்களித்தவர்கள் இன்றும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து, அதே  திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிக்கும் வேடிக்கையான மனிதர்கள் இந்த பாராளுமன்றத்தில் உள்ளனர். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலான சிரேஷ்ட அரசியல்வாதிகள் தற்போது 22ஆவது திருத்தமே இறுதித் தீர்வு என புகழ் பாடுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

ஜனநாயகத்தை பாதுகாத்து ,தமிழ் ,முஸ்லிம்,சிங்கள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பொருத்தமான அம்சங்களை உள்ளடக்கிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். மாறாக இருக்கின்ற அரசியலமைப்பில் மாற்றங்களை செய்தோ, அல்லது இந்த திருத்தங்களுக்கு எல்லாம் வாக்களித்தவர்களை கொண்டோ புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது என்றார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி