நட்பு நாடுகள் ஜெனீவாவில் எமக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களால் நாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் என அர்த்தப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் இன்று ஜெனீவா கூட்டத்தொடர் குறித்த கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தில் அவர்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், இந்த நாடுகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையுடன் முன்னெடுக்கும் வர்த்தக மற்றும் உதவித்திட்டங்களை நிறுத்திக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் எமது நாடு எதிர்கொண்டுவரும் நெருக்கடி என்னவென்பது எமக்கு நன்றாகத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மனித உரிமைகள் குறித்து நாம் பின்பற்றுகின்ற வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் அதன் பெறுபேறுகளை பெற்றுக்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் நன்கு அறிவோம் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப்புலிகள் இயக்கத்தை சார்ந்த கைதிகள் பலரை விடுதலை செய்தார் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், எஞ்சியுள்ள சிறைக்கைதிகளை விடுதலை செய்வது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தெளிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவற்றை அமைச்சர் அலி சப்ரியும் ஜெனீவாவில் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் பயங்கரவாதத்தடை சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியிலும் தற்போது சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவை அனுமதியும் கிடைக்கப்பெற்று, அதனை சட்டமாக்கும் நடவடிக்கைகள் நீதி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி