மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தினால் (NIE) நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இதனை வெளிப்படுத்தியுள்ளதாகச் சபையின் முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 6-ஆம் தர ஆங்கில பாட அலகில் ஆபாச இணையத்தளம் ஒன்றின் பெயர் உள்வாங்கப்பட்டமை குறித்து ஆராய தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆரம்பகட்ட விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது.
விசாரணைக்குழுவின் அறிக்கையின்படி, தேசிய கல்வி நிறுவகத்தின் இரண்டு பெண் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்றிரவு (19) 'டிவி தெரண'வின் '360' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க:
"இது குறித்து விசாரிக்க தேசிய கல்வி நிறுவகத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 8 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அவர்களில் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு புத்தகம் அச்சிடப்படும்போது அது 12 தடவைகள் பரிசோதிக்கப்படும். பின்னர் மூன்று தடவைகள் மெய்ப்புப் பார்க்கப்படும் (Proof reading). அதன் பின்னரே அச்சிடுவதற்கு முன்னரான இறுதிப் பிரதி பார்க்கப்படும்."
இவ்வளவு நடைமுறைகள் இருந்தும் யாரும் இதனை கவனிக்காதது ஏன்? இதற்குப் பின்னால் ஏதேனும் சதி இருக்குமா?
"சதி முயற்சி நடந்ததா என்று ஆராய்வது தர்க்கரீதியானது. முழுமையான செயன்முறை முடிவடைந்த பின்னர், கடைசி நேரத்தில் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்பட்ட திருத்தமே இதற்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முழுமையான பாட அலகு இந்தச் செயன்முறை ஊடாகவே சென்றது, ஆனால் கடைசி நேரத் திருத்தம் இந்தச் செயன்முறை ஊடாகச் செல்லவில்லை."
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் போதிய தகைமைகள் இல்லாதபோதும் அவர்களுக்குத் தேசிய கல்வி நிறுவகத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதிலளித்தார்.
தகைமைகள் குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ள இரு அதிகாரிகளால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சங்கடத்துக்குள்ளாவது ஏன்? அங்கிருந்த ஒருவரின் மகள் பன்னல பிரதேச சபையில் 'மாலிமாவ' (தேசிய மக்கள் சக்தி) சார்பில் போட்டியிடுகிறார். அரசியல் நெருக்கம் காரணமாகவா இவர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர்?
"நிச்சயமாக இல்லை. நாம் அவ்வாறு பார்த்து வேலை செய்வதில்லை. அவர் தேர்தலில் போட்டியிட்டாலும் இல்லாவிட்டாலும், எமது கட்சியை ஆரம்பித்தவராக இருந்தாலும் கூட, நாம் இதில் எவ்விதத்திலும் தலையிடப்போவதில்லை என என்னால் 1000 வீதம் கூற முடியும். இங்கு தவறு நடந்துள்ளது. தகைமை குறைந்தவர்கள் வேலை செய்யும்போது தவறுகள் நிகழ வாய்ப்புள்ளது.
"ஆனால், முழுப் பாட அலகையும் பார்க்கும்போது பிள்ளைகளை வேண்டுமென்றே ஆபாச விடயங்களுக்குத் திசைதிருப்பும் நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் நான் சஜித் பிரேமதாசவுக்குச் சவால் விடுகிறேன், முடிந்தால் அந்த இணைப்பைத் (Link) திறந்து அதில் ஆபாச விடயங்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்."


