ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இராஜாங்க அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி வகித்து வருவதுடன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஷ்ப குமார, லசந்த அழகியவன்ன, சாமர சம்பத் தசநாயக்க, சுரேஷ் ராகவன், சாந்த பண்டார ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக இன்று திங்கட்கிழமை (08) பதவியேற்றுள்ளனர்.

தற்போது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஷான் விஜேலால், தயாசிறி ஜயசேகர, துஷ்மந்த மித்ரபால, அங்கஜன் ராமநாதன், துமிந்த திஸாநாயக்க ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களே எஞ்சியுள்ளனர்.

அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் துமிந்த திஸாநாயக்கவும் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தீர்மானத்தை மீறி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தற்போது தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவித்தனர்.

கடந்த வாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சியின் யாப்பின் மூலம் தனது அதிகாரங்களைப் பலப்படுத்த யாப்பில் திருத்தம் செய்திருந்தார். கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து விலகிச் செல்லும் எம்.பி.க்கள் தொடர்பில் கடுமையான தீர்மானங்களை எடுக்கும் வகையில் மைத்திரிபால சிறிசேன அதிகாரங்களை தன்வசம் சேர்த்துக் கொண்டார். இதனால் அந்தக் கட்சியின் சிரேஸ் உறுப்பினர்கள் பலர் அதிருப்தியடைந்திருந்தனர்.

அமரவீரவிடமிருந்து புதிய கட்சி!

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் தலைவராக மஹிந்த அமரவீர செயற்படுவார் எனவும் தெரியவருகிறது.

புதிதாக உதயமாகும் இந்த அரசியல் கட்சி, தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்றும் கூறப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி