இந்த வருடத்திற்கான ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலத்தை நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்து உரையாற்றினார்.

இதற்கமைய, செப்டம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து பெறுமதி சேர் வரியை 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதாக ஜனாதிபதி கூறினார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதன் ஊடாக அரச செலவீனங்களுக்காக பணம் அச்சிடுவதை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற யோசனையையும் ஜனாதிபதி சபையில் முன்வைத்தார்.

அரச தொழில் முயற்சிகளை மறுசீரமைப்பதற்கான அலுவலகமொன்றை ஸ்தாபிக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கூறினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தெரிவு செய்யப்பட்ட சில பிரதேச சபைகளை அண்மித்த மாநகர சபை அல்லது நகர சபையுடன் இணைப்பதற்கான யோசனையையும் முன்வைத்தார்.

அரச மற்றும் அரச – தனியார் கலப்பு நிறுவனங்களில் தொழில்புரிவோரின் கட்டாய  ஓய்வூதிய வயதெல்லையை 60 வயதாக  நிர்ணயிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்பட வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி இன்று கூறினார்.

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின்  20 வீத பங்குகளை நுகர்வோர் மற்றும் அந்த வங்கிகளின் ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வறிய மக்களுக்காக தற்போது வழங்கப்படுகின்ற  கொடுப்பனவை அடுத்த நான்கு மாதங்களுக்கு நீடிக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்தார்.

கர்ப்பிணித் தாய்மாருக்கு வழங்கப்படுகின்ற   கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, நிவாரணம் வழங்க வேண்டிய 61,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.

சுயாதீனமாக செயற்படும் வகையில், தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

இரண்டு அல்லது அதற்கு குறைந்த ஹெக்டேர் வயல் பரப்பில் நெற்செய்கை மேற்கொண்டு கடன் செலுத்த முடியாமற்போயுள்ள விவசாயிகள் செலுத்தத் தவறிய  680 மில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்வதற்கும் ஜனாதிபதி யோசனை முன்வைத்தார்.

ஹாலிஎலயில் இருந்து கொழும்பு வரை மரக்கறி மற்றும் பழ வகைகளை கொண்டு செல்வதற்கு  ஏதுவாக அதற்கான வசதிகளுடன் கூடிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

ரயில் போக்குவரத்து சேவையை விஸ்தரிப்பதற்காக தனியார் முதலீட்டை பெறவும், முன்மாதிரி வேலைத்திட்டமாக களனி மார்க்க ரயில் போக்குவரத்தை விஸ்தரிக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கிளையை குருநாகலில் ஸ்தாபிக்கவும் அவர் யோசனை முன்வைத்தார்.

இதனிடையே, சர்வ கட்சி அரசாங்கத்தில் இணையுமாறு அனைத்து கட்சிகளுக்கும் இன்று மீண்டும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

அரசியல் நோக்கங்களை புறந்தள்ளி, நாட்டின் நலன் கருதி ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அரசியல் கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

2022 நிதியாண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளையும் எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளது. 

2022 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் சாரம்சம்

அரசாங்கத்தின் மொத்த வருமானம் – 2094 பில்லியன் ரூபா

அரசாங்கத்தின் மொத்த செலவு – 4427 பில்லியன் ரூபா

அதன்படி, வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,333 பில்லியன் ரூபா

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்ய 342 பில்லியன் ரூபாவை வௌிநாட்டுக் கடன் மூலம் பெற்றுக்கொள்ளவும், 1991 பில்லியன் ரூபாவை உள்நாட்டுக் கடன் முலம் பெற்றுக்கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி