மலையக ரயில் சேவை நாளை (09) முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



சீரற்ற காலநிலையின் காரணமாக நாவலப்பிட்டி மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கிடையில், இடம்பெற்ற மண்சரிவு , மண் மேடுகள் மற்றும் பாறைகள் விழுந்தமையினால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. சீரமைப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மஸ்கெலியா - சிவனொளிபாத மலை நல்லதண்ணி வீதி, இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்துள்ளார்.

தேசிய கட்டிட ஆய்வு நிறுவன அதிகாரிகள், இந்த பாதையில் இடம்பெறும் மண் சரிவு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வழிவகை செய்யும் வகையில், இந்த வீதியை தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா கிரிமெட்டிய வீதி, மண் சரிவினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இங்கு ஒரு வழி பாதை போக்குவரத்தே இடம்பெறுவதாக உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி