2022 ஏப்ரல் மாதம் 09, அன்று ஒரு நோக்கத்திற்காக கொழும்பு காலிமுகத்திடலுக்கு வந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் தொடங்கிய காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தில் பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் 'சமூக ஊடக ஆர்வலர்களின் ஒன்றியம்' என எங்களை நிலைநிறுத்திக் கொண்டோம்.

காலிமுகத்திடல் போராட்டத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட 'கோதகோகம'வுடன் இணைந்து அங்கு நிறுவப்பட்ட முதல் குழுக்களில் ஒன்றாக, அன்றிலிருந்து இன்று வரை 'போராட்டத்தின் சமூக ஊடகப் பாத்திரத்தை' விட மிகவும் உகந்த மற்றும் ஆக்கபூர்வமான பங்கை நாங்கள் வகித்துள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

குறிப்பாக ராஜபக்ச அரசாங்கமும் அதன் பங்குதாரர்களும் போராட்டத்திற்கு எதிராக இலட்சக்கணக்கான பணத்தை செலவழித்து போராட்டத்தை தீர்த்துக்கட்ட செய்யும் சமூக ஊடக பிரச்சார திட்டங்களை முன்னெடுக்கும் போது, சமூக ஊடக வெளிகளில் போராட்டத்தின் உண்மையான நிலைமைகளை உறுதிப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் போராட்டத்தின் உண்மையான நிலவரம் குறித்து மக்களுக்கு சரியான முறையில் எடுத்துக் கூற முடிந்தது. இதற்காக நாங்கள் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராது பணியாற்றியமையையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

மேலும், மே மாதம் 09 அரச அனுசரனை பெற்ற காடையர்களின் கொடூரத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும் போராட்டத்தின் தனித்துவமான மைல்கற்களை எமது உறுப்பினர்கள் சமூக ஊடகத்தினை பயன்படுத்தி உலகமெங்கும் எடுத்துச் சென்ற விதம் பாராட்டுக்குரியது. மேலும், எங்கள் உறுப்பினர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, தேசத்திற்காகவும் போராட்டத்திற்காகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பொறுப்பை தங்கள் கடமையாகக் கருதி இந்த வேலைகளை எல்லாம் செய்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காலிமுகத்திடல் போராட்ட மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும், குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கொண்டும், எங்கள் உறுப்பினர்கள் பலர் தங்கள் கடமையை சரிவர செய்தனர். எவ்வாறாயினும், சமூக ஊடக ஆர்வலர்களின் ஒன்றியம் என்ற வகையில், இன்று (05ஆம் திகதி) காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தில் எமது செயற்பாடுகளை நிறுத்த தீர்மானித்துள்ளோம். ஆனால் போராட்டம் தொடர்கிறது என்றும் மக்களின் கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டம் தொடர வேண்டும் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எனவே, இதுவரை நாங்கள் செய்தது போல், இனிமேலும் ஒற்றுமையாகவும், குழுவாகவும், பொது மக்களின் போராட்டத்தின் சமூக ஊடகப் பணியை சரிவர செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இறுதியாக, கோல்ஃபேஸ் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இன்று வரை எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்காலத்தில், சமூக ஊடக பயனர்கள் மற்றும் நாட்டின் குடிமக்கள் என்ற முறையில், இந்த பொது மக்களின் போராட்டத்தை மக்கள் வெற்றியுடன் முடிவுக்கு கொண்டு வர ஒன்றிணைந்து செயல்படுமாறு நாங்கள் மனதார கேட்டுக்கொள்கிறோம்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி