1200 x 80 DMirror

 
 

சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஒன்றிணையுமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பகிரங்க அழைப்பு விடுத்தார். 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார். 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை ஆரம்பமானது. 

சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்பட்டு, கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றைய கூட்டத்தொடரின் போது மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படவோ வாகன பேரணிகள் இடம்பெறவோ இல்லை. 

தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதன் பின்னர் முப்படையினரின் மரியாதை அணிவகுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். 

கொழும்பு தேவி பாலிகா மகளிர் கல்லூரி மாணவிகள், ஜயமங்கள கீதம் இசைத்ததன் பின்னர், சபைக்கு வருகை தந்த ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தினார். 

நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அரசாங்கத்தை ஸ்தாபித்து விரைவில் அரசியல் நெருக்கடியினை நிவர்த்திக்க வேண்டும் எனவும் ஸ்திரமான அரசாங்கத்தை நிறுவ வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது உரையின் போது வலியுறுத்தினார். 

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடுவோரை பாதுகாப்பதற்காக விசேட செயலணி ஒன்றை ஸ்தாபிப்பதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார்.

அறவழி போராட்டக்காரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் அநீதி இழைக்கப்பட்டால், அந்த செயலணியிடம் 24 மணித்தியாலங்களும் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் முறைப்பாடு தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு ஒன்றை நியமிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். 

மே 9 ஆம் திகதி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், போராட்டம் என்ற போர்வையில் வன்முறை, பயங்கரவாதத்தை பரப்பிய  நபர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் வலியுறுத்திக் கூறினார். 

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு கொழும்பு மாநகர சபை , கண்டி மாநகர சபையினால் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அங்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தேவையான வசதிகள்  செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனுமதி இல்லாத இடங்களில் தொடர்ந்தும் தங்கியிருக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். 

இதேவேளை, எரிபொருள் நெருக்கடியை நிவர்த்திக்க வௌிநாடுகளின் உதவியையும் கடனையும் எதிர்நோக்கியிருக்கும் முறைமையை முடிவுறுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

ஏற்றுமதி வருமானம் மற்றும் வௌிநாட்டு செலாவணிகள் மூலம் எரிபொருளை இறக்குமதி செய்யும் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

கடன் மறுசீரமைப்பு திட்டத்தை வகுக்கும் செயற்பாடு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் மிக விரைவில் சர்வதேச நாணய நிதியத்திற்கு அதனை சமர்ப்பித்து, கடன் வழங்கும் நாடுகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். 

நிலையற்ற வௌிநாட்டுக் கொள்கை காரணமாக சர்வதேச மட்டத்தில்  பல பின்னடைவுகளை நாடு எதிர்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அனைத்து நாடுகளுடனும் சிநேகப்பூர்வமாக நடந்துகொள்ளும் வகையில், வௌிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தார். 

சிங்களம், தமிழ் , முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இனங்களும் சமமாக கவனிக்கப்பட வேண்டும் என்பதனை இன்று சிங்கள இளைஞர், யுவதிகளே கூறுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுமார் 5 தசாப்த காலமாக சமூகத்திற்கு விளங்க வைக்க முயற்சித்த உண்மையினை இன்று  இளம் சமூகத்தினர் புரிந்துகொண்டுள்ளதாகக் கூறினார். 

பல வருடங்களாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டியது அத்தியாவசியமானது எனவும் யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட தமிழர்கள், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

தீர்க்கப்பட வேண்டிய காணிப் பிரச்சினைகள் உள்ளதாகவும் வடக்கின் அபிவிருத்தி பிரச்சினை குறித்து புதிதாக சிந்திக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் வௌிநாடுகளில் வாழும் இலங்கை தமிழ் மக்களுடன் நெருங்கி செயற்பட்டு, இலங்கையை மீள கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கு அவர்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள  எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

இத்தகைய அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு தேவையான முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பை தனது பதவிக்காலத்திற்குள் மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார். 

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி