ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குகுழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக அழைத்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத்

தெரிவு செய்து கொள்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை நடாத்துமாறு சஜித் தரப்பினர் இதற்கு முன்னர் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்திருந்ததோடு, கரு ஜயசூரயி தரப்பினரும் நேற்று இவ்வாறான கோரிக்கையினை விடுப்பதற்கான ஆயத்தத்தில் இருந்ததாக உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

செயற்குழு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இரகசிய வாக்கெடுப்பொன்றை நடாத்துமாறு சஜித் தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தாலும், வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான அதிகாரம் செயற்குழுவிற்கே உள்ளதால் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரை அழைக்கத் தேவையில்லை என பிரதமரின் ஆலோசனைக்கு அமைய கரு ஜயசூரிய தரப்பினர் தெரிவித்துள்ளனர். ரவி கருணாநாயக்கா மற்றும் ராஜித சேனாரத்ன ஆகிய கரு ஜயசூரிய தரப்பின் இரண்டு பிரதானிகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் ஸ்ரீ.ல.சு.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இழுபறி தொடர்பில் கேட்ட போது, அடுத்த ஓரிரு தினங்களில் கட்சியின் செயற்குழுவினைக் கூட்டி வேட்பாளரைத் தெரிவு செய்ய உள்ளதாக அவர் பதிலளித்துள்ளார். இங்கு வாக்கெடுப்பை நடாத்துவதற்கான நிலை ஏற்பட்டால் சபாநாயகர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்றும் அமைச்சர் கிரியெல்ல சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐ.தே.கட்சித் தலைவரின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு ஆயத்தமாக  இருக்கும் சபாநாயகர் கரு ஜயசூரிய, பெரும்பான்மையினரின் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனினும் இதற்கு முன்னர் அவர் தொடர்ந்தும் கூறும் போது கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பம்  கிடைத்தால் மாத்திரமே தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க  ஆயத்தமாக உள்ளதாகவும் கூறினார்.

சம்பிக்க கூறிய கதை!

இதனிடையே ஐக்கிய தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 106 பேரில் அதிகமானோரின் வாக்குகளினால் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை உடனடியாகத் தெரிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி