அடுத்த சில தினங்களினுள் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி

வேட்பாளரை நியமிப்பதற்கு அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தனர். கட்சியினுள் பிளவுகள் ஏதும் ஏற்படாதவாறு அதனைச் செய்வது தொடர்பில் அவர் விஷேட கவனத்தைச் செலுத்தியிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியினுள் எந்தவித குழப்பங்களோ, பிளவுகளோ இல்லை என்றும், கட்சி என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைந்து அனைவரினதும் ஏகோபித்த முடிவின் பிரகாரம் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வெளிப்படுத்த உள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்கா தெரிவித்தார்.  கொட்டாஞ்சேனை பரமானந்த விகாரையில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற 53வது வருடாந்த பெரஹரவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளிடத்தில்  நேற்று (15) கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  விரிவான கூட்டணியை ஒன்று சேர்த்துக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டங்கள் மற்றும் அதற்கான செயற்பாட்டுத் திட்டங்களை முன்வைக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக களமிறங்குவதற்கு எதிர்பார்க்கும் அனைவரிடத்திலும் தான் தெரிவித்ததாகவும், அந்த அனைத்து விடயங்களையும் கவனத்திற்கொண்டு செயற்குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெறுவது சிரமமானது என்றும் இதன் போது தெரிவித்துள்ள பிரதமர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏனைய நட்பு அணிகளின் ஒத்துழைப்பை வெற்றி கொள்வது கண்டிப்பானது என்றும் கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஜனநாயக தேசிய முன்னணியினால் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கும் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இதன் போது சிவில் அமைப்புக்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது இணங்கியதற்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையினை நீக்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை ரீதியான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பிரதான கோரிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரர் கூறும்போது, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்றார். எந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினாலேயே இந்த கூட்டணி மற்றும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் அடுத்ததாக அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் அவசியமானது என்றும் தம்பர அமில தேரர் மேலும் கூறினார்.

கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன, பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, சமன் ரத்னபிரிய, சுனில் த சில்வா, ராஜா உஸ்வெடகெய்யாவ, கலாநிதி ஜெஹான் பெரேரா, பிரியதர்ஷணி ஆரியரத்ன உள்ளிட்ட சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பினைப் பிரதிநிதித்துவப் படுத்தியர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி