அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்கள்!சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொவிட் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக இடைநிறுத்தப்பட்ட மே தின கூட்டங்களை இன்று முன்னெடுக்க நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

 மக்களால் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான எழுச்சி போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்ற நிலைமைக்கு மத்தியில் , நாடளாவிய ரீதியில் மே தினக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமனவின் மே தின கூட்டம் இன்று (01) ஞாயிற்றுக்கிழமை காலை நுகேகொடையில் இடம்பெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொள்ளமாட்டார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே தின கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்த பொதுஜன பெரமுனவினர் ஆரம்பத்தில் திட்டமிட்டிருந்த போதும் காலி முகத்திடலை கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆக்கிரமித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் கூட்டத்தை நுகேகொடையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகேகொடையில் இடம்பெறும் மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கலந்துக்கொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மாத்திரம் கூட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ளார்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை 08.30 மணியளவில் புதுக்கடையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாஸவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து நினைவு கூரல் நிகழ்வு இடம்பெறவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.30 க்கு கொழும்பு - கெம்பல் மைதானத்திலிருந்து (கெம்பல் பார்க்) பேரணியாக சுதந்திர சதுக்கத்திற்கு சென்று அங்கு பிரதான கூட்டத்தை நடத்தவுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்றைய தினம் 4 பிரதான நகரங்களில் மே தின கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதற்கமைய காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்திலும், மாலை 03 மணிக்கு கொழும்பு, மாத்தறை மற்றும் அநுராதபுரம் ஆகிய நகரங்களில் கூட்டம் இடம்பெறவுள்ளது. 

கொழும்பு மாளிகாவத்தையில் இருந்து பேரணியை ஆரம்பித்து கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைந்து அங்கு பிரதான கூட்டத்தை நடத்த ஜே.வி.பி. தீர்மானித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசிய கட்சி இம்முறை மே தின கூட்டத்தை நடத்தவில்லை. காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் கட்சியின் தலைமை காரியாலயமான சிறிகொத்தாவில் கறுப்பு கொடிகளை ஏற்றி அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

மே தினத்தை முன்னிட்டு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 1000 விவசாயிகளை ஒன்றிணைத்து பொலன்னறுவை சிடி சென்டர் நிலையத்திலிருந்து,பொலன்னறுவை வைத்தியசாலை வரை பேரணியாக செல்லவுள்ளார். 

சுதந்திர கட்சியின் மாவட்ட உறுப்பினர்களுக்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமான சந்திப்பு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இடதுசாரி கட்சிகள் 

ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் இன்று பகல் ஹைட் - பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணிதேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் இன்று பகல் பத்தரமுல்லயில் உள்ள அபேகமவில் மே தின விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்புமே தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தமிழ் தேசிய மேதின கூட்டம் இன்று பகல் 2 மணிக்கு  கல்லடி பாலத்திற்கு அருகாமையில் உள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் இடம்பெறவுள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி