1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் 17 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


நாடளாவிய ரீதியிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்துள்ளது. நேற்றையதினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம், சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது,
காலி முகத்திடல் நோக்கி 3000க்கும் அதிகமான மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் காலி - முகத்திடலுக்குச் செல்லும் பிரதான அனைத்தையும் பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி மூட நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அதற்கமைய என்.எஸ்.ஏ. சுற்றுவட்டத்திலிருந்து சைத்திய வீதி, என்.எஸ்.ஏ. சுற்றுவட்டத்திலிருந்து ஜனாதிபதி வீதி, செரமிக் சந்தியிலிருந்து யோர்க் வீதி, ஜீ.டீ.எஃப் சந்தி, வங்கி வீதி வரை, செரமிக் சந்தியிலிருந்து என்.எஸ்.ஏ.சுற்றுவட்டம் வரை, லோட்டஸ் வீதி, கீழ் சேத்தம் வீதி, ஜீ.ஓ.எச். சந்தியிலிருந்து பிரதான வீதி மற்றும் லேடி பஸ்டியன் அவனியூ உள்ளிட்ட வீதிகள் மூடப்பட்டிருந்தன.

இதன் காரணமாக கொழும்பின் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இருதியாக கொழும்பு 7 - விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தை சுற்றி வளைத்தனர்.

பிரதமர் இல்ல வளாகத்தில் பொலிஸாரினால் வைக்கப்பட்டிருந்த வீதித்தடைகளை தகர்ப்பதற்கு மாணவர்கள் நீண்ட நேரம் முயற்சித்தனர். இதனால் அங்கு பதட்டமான நிலைமையும் ஏற்பட்டது.

எனினும் இறுதியாக மாணவர்கள் காலிமுகத்திடல் போராட்டக்கலத்திற்கு சென்றனர். அங்கு இரவு முழுதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தமது தொலைபேசியில் ஒளி எழுப்பி எதிர்ப்பினையும் பலத்தினையும் வெளிப்படுத்தினர்.

ஒரு சில கூடாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டம், இன்று நூற்றுக்கணக்கான கூடாரங்களுடன் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கின்றது.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பல தரப்பினராலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றைய தினம் குறித்த பகுதியில் இலவச சட்ட உதவி அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் சட்ட ரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டாலோ இந்த அலுவலகத்தின் ஊடாக இலவச சட்ட உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு உரத்தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நாளை மறுதினம் புதன்கிழமை பாராளுமன்ற சுற்று வட்டப்பகுதியில் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு , காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு அதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தவிற நாட்டின் சில பகுதிகளில் காலிமுகத்திடல் போன்று கூடாரங்கள் அமைத்து தொடர் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு வின்னை தொடும் அளவுக்கு உயர்ந்து நிக்கும் நிலையில், மக்கள் சமாளிக்க முடியாது திண்டாடுகின்றனர். ஆனால் அரசிடம் இதுவரை எந்த ஒரு சாதகமான திட்டங்களும் இல்லை.

சர்வதேச நாணய நிதியம் தமது பங்கிற்கு நாட்டில் வருமையில் வாழும் மக்களின் அடிவயிற்றில் கைவைக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. வரப்போகும் மாதங்களில் ஒரு வேளை உணவைக்கூட உற்கொள்வது சிறமமாகலாம் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

காலி முகத்திடல் போராட்டம், நாளுக்கு நாள் அதிகமான போராட்டகாரர்களினால் நிறம்பிவழிகின்றது. நாட்டில் நெருக்கடி நிலை இன்னும் அதிகமான மக்களை அங்கு கொண்டு சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

போராட்டகாரர்களை தடுக்கும் முயற்சியை அரசு எதிர்த்தாலும் சர்வதிகார சாயலை காட்டியபோதும் சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையில் இருக்கும் தற்போதைய அரசினால் அதற்குமேல் ஒரு அடியும் எடுத்துவைக்க முடியாது உள்ளமை இலங்கை ஜனநயாகத்திற்கு கிடைத்துள்ள தற்போதைய வெற்றி.

எவ்வாறாயினும் இன, மத, மொழி மற்றும் கட்சி பேதமற்ற இந்த போராட்டம் வெற்றியடையுமானால் இலங்கை ஆசியாவில் மற்றொறு சிறப்பு மிக்க நாடாக பார்க்கப்படும்.

அத்தோடு 74 வருடங்களுக்கு முன் இன, மத, மொழி பேதமின்றி ஆங்கிலேயரிடம் வெற்றி கொண்ட நாட்டின் சுகந்திர காற்றை மீண்டும் இலங்கையராக அனைவரும் சுவாசிக்கும் வாய்ப்பும் கிட்டும்.

 

336 x 200 Sinhala

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி