வடமாகாண மீனவர்களின் போராட்டத்தையடுத்து இலங்கை கடற்படையினரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி தென்னிந்திய மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட நிலையில்  இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இந்திய-இலங்கை கடல்சார் நெருக்கம் குறித்தும் சீனத் தூதுவர் கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்கள் குறித்த அவசர விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை மக்களவையில் சமர்ப்பித்துள்ளனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் கடற்படையின் காவலில் உள்ள தமது சக ஊழியர்களை விடுவிக்கக் கோரி நேற்று (19) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நெடுந்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் டிசம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு ஆறு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில்இழுவைப் படகுகளுடன்  43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். மேலும் 12 இந்திய மீனவர்கள் நேற்று (19) மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கையகப்படுத்தப்படட இந்திய இழுவை படகுகள் தற்போது யாழ்ப்பாணம் மயிலிட்டி கடற்படை முகாமில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

"தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையானது, மன்னார் தெற்கு கடற்பகுதியில் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை துரித அன்டிஜன் பரிசோதனைக்கு அனுப்பிய பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கும், வெளிநாட்டு மீனவர்களை உள்ளடக்கிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் கடற்படை தனது நடவடிக்கைகளை தொடரும்” என கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டார்லின் இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 இந்திய மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்றொழில் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் இந்திய கடற்படையினர் மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கச் சென்றால் பிரச்சினைகள் ஏற்படலாம் என எச்சரித்திருந்தார்.

இந்திய மீனவர்கள் இலங்கையின் மீன் வளத்தை கொள்ளையடிப்பது நீண்டகாலமாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது.

இந்த கொள்ளையை தடுக்க இலங்கை கடற்படை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என வடமாகாண மீனவர் அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இதனால் கடந்த காலங்களில் தமக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக 400 மில்லியன் ரூபாவை வழங்குமாறு வடபகுதி மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, வடக்கிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்ட இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங், வடக்கில் 2,500 மீனவக் குடும்பங்களுக்கு 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், உலர் உணவுகள் மற்றும் முக்கவசங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அந்தப் பயணத்தின் போது, இந்தியாவை ஒட்டிய இலங்கையின் வடக்குப் பருத்தித்துறையில் உள்ள சாக்கோட்டை முனையையும் அவர் பார்வையிட்டார்.

அந்த இடத்திலிருந்து இந்தியா எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது என இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் தூதுவர் வினவியபோது, 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன அதிகாரி ஒருவர் அந்த இடத்திலிருந்து ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு காணொளி காட்சிகளை பதிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி