மாவீரர் கல்லறைகள் உன்னதமானவை, அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள் என்று தெரிவித்த தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிசாந்தன், மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலுள்ள துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் உணர்வுபூர்வமாக சுடரேற்றி நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

அவர், இன்று  (22) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

எமது இனத்தின் விடுதலைக்கான எழுச்சிமிகு போராட்டம் மௌனிக்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளைக் கடந்த போதும் மாவீரர்களின் கல்லறைகளை இலங்கை அரசு இடித்தொழிக்கும் செயற்பாடுகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை.

இதனை, மன்னார் ஆட்காட்டி துயிலும் இல்லத்தின்  உடைப்பு வெளிப்படையாகவே எடுத்துக்காட்டுகின்றது. இதனை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையான கண்டிக்கிறது.

இலங்கை இராணுவத்தினதும், அரச, இராணுவ புலனாய்வாளர்களதும்  மிலேச்சத்தனமான செயற்பாடாக தொடர்வது, ஏற்கெனவே இடித்தொழித்த துயிலுமில்ல கல்லறைகளின் சிறு பாகங்களை கூட ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உடைத்தெறியும் செயற்பாடுகள் ஒரு புறமாகவும்.

தமிழ்த் தேசிய பரப்பில் முன்னின்று செயற்படும்  செயற்பாட்டாளர்களை, அவர்களது குடும்பத்தினரை, ஆதரவாளர்களை தொடர்ந்தும் அச்சுறுத்துவதும், பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் கொழும்புக்கு அழைத்து மிரட்டுவதும் தொடர்கிறது.

பொலிஸார் மூலமாக தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக  நீதவான் நீதிமன்றங்களில் வழக்குத்தாக்கல் செய்து, அதன் மூலமாக நினைவேந்தல்களுக்கான  தடையுத்தரவுகளையும் பெறுவதும், அச்சுறுத்துவதுமாக அரசின் மிலேச்சத்தனமான அராஜகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

உங்களுக்கு வேண்டுமேன்றால் ஒவ்வொரு ஆட்சியும், ஆட்சியாளர்களும் மாறும் போது இது புது புது விடயங்களாக தென்படலாம் ஆனால் எங்களுக்கு இவ் விடயங்கள் அனைத்தும் பழகிய  ஒன்றுதான் எனவே தமிழர்களாகிய நாம் எக்காலத்திலும் இவற்றைக் கண்டு அஞ்சப்போவதில்லை என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி