அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும், அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத்த மதகுருவொருவரால் கடந்த 15ஆம் திகதி அரசாங்க உத்தியோகத்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன். குறித்த பௌத்த குரு ஒருவருட காலத்திற்குள் இலுப்படிச்சேனை, பிள்ளையாரடி பகுதியில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் கடந்த காலத்தில் மாவட்ட செயலகம், பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருக்கு எதிராகவும் கெவிழியாமடு பகுதியில் கிராம சேவையாளருக்கு எதிராகவும் கடந்த 15ஆம் திகதி பட்டிப்பளை பிரதேச செயலாளருக்கு எதிராகவும் தொடர்ச்சியான முறையற்ற வகையில் வன்முறைத்தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

குறித்த மதகுருவின் செயற்பாடானது பௌத்த மதகுருவின் கொள்கைக்கு எதிரான வகையில் இவரின் செயற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் இலங்கை அரசாங்கம் ஒரு பார்வையாளர் போன்று இவரின் செயற்பாட்டை பார்த்து வருகின்றது.  இந்த மதகுருவினை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெறுக்கின்றார்கள். மதகுருவுக்குரிய மனிதாபிமானமோ, கொள்கையோ இவரிடமில்லை. இவர் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பௌத்த சாசன அமைச்சு முறையான நடவடிக்கையினை எடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்கவேண்டிய நிலையேற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட மக்களின் உரப்பிரச்சினை தொடர்பிலும் அவர் இங்கு கருத்து வெளியிட்டார்.

கடந்த காலங்களில் இயற்கை விவசாயத்தினை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் செயற்கை உரத்தினை விவசாயத்திற்கு பயன்படுத்தியதற்கான பொறுப்பினை இந்த நாட்டின் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். இயற்கை உரத்தினையும் இலை குழையையும் கொண்டு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மட்டக்களப்பு விவசாயிகளை இரசாயண உரத்திற்கு மாற்றியது இந்த அரசாங்கமேயாகும்.   இந்த அரசாங்கத்தின் தேசிய ரீதியான கொள்கைகளில் பல தவறுகள் இருக்கின்றன. மாறி மாறிவரும் அரசாங்கங்கள் விவசாயம் தொடர்பான கொள்கைகளை மாற்றுவதன் ஊடாக பாதிக்கப்படுவது இந்த மட்டக்களப்பு மாவட்ட மக்கள் என்பதை இந்த அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.

இயற்கை உரத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு இல்லை. ஆனால் முழுமையாக இயற்கை உரத்தினை மட்டுமே பாவிக்க வேண்டும் என்ற அழுத்ததிற்கே இந்த மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர். படிப்படியாகவே இந்த செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். உடனடியாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இரசாயண உரத்தினை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மேலும் தெரிவித்ததாவது, 

இந்த நாட்டில் அரசாங்க உத்தியோகத்தர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றனர். கோவிட் அச்சுறுத்தல், விலையேற்றம் என பல்வேறு நெருக்கடிகளினால் அரசாங்க ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வெளியிடப்பட்ட வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழியர்களுக்கு எந்தவித ஒதுக்கீடும் செய்யப்படாதது இந்த அரசாங்கத்தின் மோசமான ஏமாற்று செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு நிதியொதுக்காத காரணத்திற்காக வடகிழக்கில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

எதிர்வரும் காலத்தில் குறைநிரப்பு பிரேரணை ஊடாக வேணும் நிதிகளை அரசாங்க ஊழியர்களுக்கு ஒதுக்கும் வாய்ப்புகள் உள்ள நிலையில் அதற்கான செயல் வடிவத்தை கொடுக்க ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும்.

வரவு செலவுத்திட்டம் ஊடாக புரியாத விடயங்களை நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார். அரசாங்க உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கும் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பினை இல்லாமல் செய்யும் வயதெல்லை ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கப்பட்ட விடயத்தில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்து இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு வழியேற்படுத்த வேண்டும். அத்துடன் அமைச்சர் ஒருவர் அரசாங்க உத்தியோகத்தர்களை நலினப்படுத்தக்கூடியவாறு தெரிவித்த கருத்து அரசாங்க உத்தியோகத்தர்களை காயப்படுத்தியுள்ளது. குறித்த கருத்தினை அமைச்சர் மீளப்பெற்று அரசாங்க உத்தியோகத்தர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

நாற்பது வருடங்களாக அரசியலில் இருந்த முதிர்ச்சியுள்ள தேசிய அரசியலில் பங்குகொண்ட அரசியல்வாதி யாரும் இந்த அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  இந்த காலத்திலேயே இலங்கையில் பொருட்களின் உச்சக்கட்ட விலையேற்றமும் பொருட்களின் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த முடியாமலும் திறைசேரியின் வருமானம் குறைந்த அளவு இருந்ததும், வெளிநாட்டு நாணயங்கள் தொடர்பான இழப்புகளும், சர்வதேச ரீதியான இராஜதந்திர செயற்பாடுகளில் பாதிப்புகளும் ஏற்பட்டு இலங்கை அரசாங்கம் தனது நிர்வாகத்தினை கொண்டு செல்ல முடியாது நலினமடைந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் நலன்கள் தொடர்பு கொண்ட விடயங்களில் வரவு செலவு திட்டத்தில் நிதிகளை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்.

அரசாங்க உத்தியோகத்தர்கள் இந்த வரவு செலவு திட்டத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கோவிட்டினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினை கட்டியெழுப்பும் திட்டங்களும் இந்த வரவு செலவு திட்டத்தில் இல்லை. பலதரப்பட்ட பாதிப்புகள் இந்த வரவு செலவு திட்டத்தில் உள்ளன. வரவு செலவு திட்டத்தின் ஊடாக 65வீதத்திற்கு மேற்பட்ட நன்மைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டும். பாதுகாப்புக்கு பல்லாயிரக்கணக்கான கோடியை ஒதுக்கீடு செய்துவிட்டு, வறுமை நிலையில் உள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் புறக்கணிக்கப்பட்டது என்பது வன்மையாக கண்டிக்கக்கூடிய செயற்பாடாகும். இந்த வரவு செலவு திட்டத்தின் மீதான விமர்சனங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அதனை அரசாங்கம் மீள்பரிசீனை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி