ஏறக்குறைய 40 ஆண்டுகளாக கென் ஸ்மித் பிறரைப் போல இயல்பான வாழ்க்கையைத் தவிர்த்துவிட்டு, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள ஒரு தொலைதூர லோச்சின் கரையில் கையால் செய்யப்பட்ட மரத்தடி அறையில் மின்சாரம் அல்லது குழாய் நீர் வசதியின்றி வாழ்கிறார்.

"இது ஒரு நல்ல வாழ்க்கை," என்று கூறும் கென், "எல்லோரும் இப்படி செய்ய விரும்புகிறார்கள், ஆனால் யாரும் செய்ய முன் வர மாட்டார்கள்," என்றார்.

கென்னின் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வில் உணவு தேடுதல், மீன் பிடித்தல், விறகு சேகரித்தல் மற்றும் வெளிப்புறங்களில் பழைய குளியல் ஒன்றில் துணிகளை துவைத்தல் போன்ற வாழ்க்கை முறை சிறந்தது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவும் 74 வயதில் இப்படி செய்வதை பலரும் ஏற்க மாட்டார்கள்.

மரண ஏரி என்று அழைக்கப்படும் லாக் ட்ரெக்கில் இருந்து ரானோச் மூரின் விளிம்பில் உள்ள சாலை அருகே உள்ள பாதையில் இரண்டு மணி நேர நடை பயணம் செய்தால் அங்கு இவரது மரப்பலகை வசிப்பிடம் அமைந்துள்ளது.

"இது லோன்லி லோச் என்று அழைக்கப்படுகிறது," என்று கூறும் அவர், "இங்கே சாலை இல்லை, ஆனால் அணை கட்டுவதற்கு முன்பு பலரும் இங்கு வாழ்ந்தார்கள்," என்கிறார்.

மலைப்பாதையில் இருந்து கீழே பார்த்தபடி, "இதன் இடிபாடுகள் இன்னும் கீழே உள்ளன. எஞ்சியிருக்கும் ஒரே உயிர் நான் மட்டும்தான்," என்று கென் கூறுகிறார்.

திரைப்பட தயாரிப்பாளரான லிசி மெக்கென்சி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கென்னை முதன்முதலில் தொடர்பு கொண்டார், மேலும் இரண்டு ஆண்டுகளாக 'தி ஹெர்மிட் ஆஃப் ட்ரெக்' என்ற பிபிசி ஸ்காட்லாந்து ஆவணப்படத்திற்காக அவரது வாழ்க்கை முறையை லிசி படம்பிடித்திருந்தார்.

சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த ஆவணப்படம் இப்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

ஸ்மித் கென் அடிப்படையில் டெர்பிஷையரைச் சேர்ந்தவர். தனது 15ஆம் வயதில் தீயணைப்பு நிலையங்களைக் கட்டும் பணியை எவ்வாறு தொடங்கினேன் என்பதை இந்த ஆவணப்படத்தில் கென் பேசியிருக்கிறார்.

தனது 26 வயதில் ஓரு இரவு நேரத்தில் தன்னை ஒரு குண்டர் கும்பல் தாக்கிய பிறகு தனது வாழ்க்கையே மாறிப்போனது என்கிறார் கென் ஸ்மித். அதன் விளைவாக மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு 23 நாட்கள் அவர் சுயநினைவை இழந்தார்.

The Hermit of Treig Ken Smith

மரப்பலகை வீட்டில் 40 ஆண்டுகள் வாழ்ந்தார் கென் ஸ்மித்.

"நான் ஒருபோதும் குணமடைய மாட்டேன் என்று சொன்னார்கள், நான் மீண்டும் பேசமாட்டேன் என்றனர். நான் இனி நடக்க மாட்டேன் என்று சொன்னார்கள். ஆனால் நான் நடந்தேன்."

"அப்போதுதான் நான் யாருடைய உதவியுடனும் வாழக்கூடாது. சுயவிதிமுறைகளுக்கு உட்பட்டு வாழ வேண்டும் என முடிவெடுத்தேன்," என்று கென் ஸ்மித் கூறுகிறார்.

கென் தனிமை பயணத்தை தொடர்ந்தார். அவரது ஆர்வம் காடுகள் பக்கம் திரும்பியது. அலாஸ்காவை ஒட்டிய கனேடிய பிரதேசமான யூகோனில், அவர் நெடுஞ்சாலையிலிருந்து நடந்து சென்று "இனி எங்கும் செல்லவில்லை" என்றால் என்ன நடக்கும் என்று யோசித்திருக்கிறார்.

பிறகு அதன்படி செயல்படவும் செய்தார். தன் நடைபயணத்தை தொடர்ந்த அவர் தனது வீட்டில் இருந்து சுமார் 22,000 மைல் நடந்ததாக நினைவுகூர்ந்தார் கென்.

வெளியூர் சென்றிருந்தபோது இவரது பெற்றோர் இறந்த விவரம், இவர் வீட்டிற்கு திரும்பும் வரையில் தெரியவில்லை.

"என்னை அந்த நிகழ்வு பாதிக்க அதிக நேரம் ஆனது. ஆனாலும் நான் எதுவும் உணரவில்லை." என்கிறார் கென்.

கென் ஸ்மித்

கென் ஸ்மித்

கென் பிரிட்டன் முழுவதும் நடந்து ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள ரானோச்சில் இருந்தபோது திடீரென்று தனது பெற்றோரை நினைத்து அழ ஆரம்பித்தார்.

"நடக்கும் போது நான் எல்லா வழிகளிலும் அழுதேன்," என்று அவர் கூறினார். "பிரிட்டனில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடம் ஒன்று உள்ளதா என்று நான் தேட நினைத்தேன்?"

"நான் எல்லா இடங்களுக்கும் சுற்றினேன். வீடு கட்டப்படாத ஏரி, நதியை பின்தொடர்ந்தேன்.

கடைசியில் நூற்றுக்கணக்கான மைல்கள் கடந்து ஆள் அரவமற்ற லோச்சின் இந்த வனப்பகுதியைக் கண்டேன். இங்கேயே தங்க விரும்பினேன்," என்று கென் பேசியபோது அழத் தொடங்கினார்.

பிறகு தனது அழுகையை நிறுத்திவிட்டு, காடுகளில் தாம் தொடர்ந்து அலைந்து திரிந்ததை முடித்துக் கொண்ட தருணம் அதுதான் என்று கென் கூறுகிறார்.

சிறிய குச்சிகளைப் பயன்படுத்தி வடிவமைப்பை முதலில் பரிசோதித்த அவர், ஒரு மர அறையை உருவாக்கத் தொடங்கினார்.

Ken with his log cabin soon after it was built in the early 1980s

1980களின் மத்தியில் மரத்தால் செய்யப்பட்ட அறையை உருவாக்கிய பிறகு தன்னை புகைப்படம் எடுத்துக் கொண்ட கென் ஸ்மித்.

நான்கு தசாப்தங்களாக, இவரது இந்த வசிப்பிட அறையில் தீ மூட்டும் பகுதி விறககுளின் உதவியால் எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் மின்சாரம், எரிவாயு அல்லது குழாய் நீர் போன்ற வசதி இங்கில்லை. குறிப்பாக செல்பேசி சிக்னல் இங்கு இல்லவே இல்லை.

தொலைதூர காட்டில் விறகு வெட்டி, அதை தங்குமிடத்திற்கு மீண்டும் மீண்டும் கொண்டு வருவது இவரது அன்றாட வேலை. இவரது முக்கிய உணவு லோச் ஏரியில் இருந்து கிடைக்கிறது.

"சுதந்திரமான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்பினால், நீங்கள் செய்ய வேண்டியது மீன்பிடிக்க கற்றுக்கொள்வதுதான்" என்கிறார் கென் ஸ்மித்.

திரைப்பட இயக்குநர் லிசி, கேபினை விட்டு வெளியேறிய பத்து நாட்களுக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில், கென் வெளியே பனியில் இருந்தவேளையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த ஆபத்தை உணர்த்தும் SOS சமிக்ஞையை டெக்சாஸில் உள்ள ஹ்யூஸ்டனில் உள்ள ஒரு மருத்துவ மையத்திற்கு அனுப்பும் கருவி இருந்தது.

அந்த கருவி மூலம் பிரிட்டனில் உள்ள கடலோர காவல்படைக்கு தகவல் சென்றதும் கென் ஃபோர்ட் வில்லியமில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மற்றும் விமான உதவியுடன் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் ஏழு வாரங்களுக்கு சிகிச்சை பெற்றார்.

அவர் சுதந்திரமாக வாழ்வதை உறுதிசெய்ய மருத்துவ ஊழியர்கள் தங்களால் இயன்றதைச் செய்தனர், மேலும் மருத்துவர்கள் அவரை நாகரீக உலகிற்கு திரும்ப கேட்டுக் கொண்டனர். அப்படி செய்தால் அவருக்கு ஒரு குடியிருப்பு மற்றும் பராமரிப்பாளர்கள் கிடைப்பர் என மருத்துவர்கள் கூறினர்.

ஆனாலும் இந்த வாழ்க்கையை விட பழையபடி காட்டில் உள்ள தமது மர வீட்டுக்கே திரும்ப கென் விரும்பினார்.

கென்

கென்

இருப்பினும், பக்கவாதத்திற்குப் பிறகு அவர் அனுபவித்த "இரட்டை பார்வை" மற்றும் நினைவாற்றல் இழப்பு பிரச்னை, கென் முன்பு இருந்ததை விட அவருக்கு அதிக உதவி தேவை என்ற நிலையை கட்டாயமாக்கியது.

கென் வசிக்கும் காட்டை கவனித்துக் கொள்ளும் எஸ்டேட்டின் தலைமை வேட்டைக்காரர், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவருக்கு உணவு கொண்டு வருகிறார், அந்த வேட்டைக்காரருக்கு தமது ஓய்வூதியத்தில் இருந்து பணம் செலுத்துகிறார் கென்.

"இப்போது வாழும் மக்கள் எனக்கு மிகவும் நல்லவர்களாக தெரிகின்றனர்," என்று கென் கூறுகிறார்.

காட்டில் வசித்தபோது அவர் மீது மரக்குவியல் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் அவர் வான் வழியாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

ஆனால், இதனால் எல்லாம் நான் எனது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்கிறார் கென்.

கென் ஸ்மித்

கென் ஸ்மித்

நாகரிக வாழ்க்கைக்கு திரும்புமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியபோதும் தமது காட்டு வாழ்வையே தேர்ந்தெடுத்தார் கென் ஸ்மித்.

"நாம் அனைவரும் பூமியிலேயே நிரந்தரமாக இருப்பவர்கள் கிடையாது,," என்று கூறும் கென், "நிச்சயமாக எனது இறுதி நாட்கள் வரும் வரை நான் இங்கேயே இருப்பேன்," என்கிறார்.

"நிறைய சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளன, ஆனால் அனைத்திலும் நான் தப்பிப்பிழைத்தேன். எப்போதாவது நான் மீண்டும் நோய்வாய்ப்படுவேன். எல்லோருக்கும் செய்வது போல் ஒரு நாள் என்னை அழைத்துச் செல்லும் காலம் வரும். ஆனால், நான் 102 வயது வரையாவது வாழ்வேன்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கென் ஸ்மித்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி