"இது தவறு. கொடுரமான தாக்குதல். தவறான தகவலின் அடிப்படையில் இது நடத்தப்பட்டுள்ளது" என்றார் உயிரிழந்தவர்களின் உறவினரான ரமீன் யூசுஃபி.

தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து ஞாயிறன்று அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தாலிபன் அறிவித்துள்ளது.

தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.

கொல்லப்பட்டவர்களில் சிலர் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றியவர்கள். சிலரிடம் அமெரிக்கா செல்வதற்கான விசா இருந்திருக்கிறது.

அமெரிக்காவின் "மிகப் பெரிய தவறு"

கொல்லப்பட்டவர்களில் மிகவும் இளம் வயதுடைய குழந்தை இரண்டு வயது சுமையா. அதிக வயதுடைய குழந்தை 12 வயதான ஃபர்சாத்.

"இது தவறு. கொடுரமான தாக்குதல். தவறான தகவலின் அடிப்படையில் இது நடத்தப்பட்டுள்ளது" என்றார் உயிரிழந்தவர்களின் உறவினரான ரமீன் யூசுஃபி.

கொல்லப்பட்ட இரண்டு வயதுக் குழந்தை சுமையா, தனது மகள் என்று இமால் அகமதி பிபிசியிடம் தெரிவித்தார்.

காபூல்

காபூல்

அமெரிக்காவுக்குச் செல்வதற்காக விண்ணப்பித்திருப்பதாகவும், விமான நிலையத்துக்குச் செல்வதற்கான தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கப் படைகளுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய நாசர் என்ற மற்றொரு உறவினரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக அகமதி கூறினார்.

அமெரிக்காவின் மத்திய படைப் பிரிவு இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. எனினும் 10 பேர் எப்படி இறந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்த சக்திவாய்ந்த வெடிப்புகள் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு அளித்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்ட வாகனத்தில் அதிக அளவில் வெடிபொருள்கள் இருந்திருக்கலாம், அது அடுத்தடுத்த வெடிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

காபூல் விமான நிலையத்துக்கு ஐஎஸ்-கே பயங்கரவாத இயக்கத்தால் ஏற்பட்டிருந்த ஆபத்தை ஒழிப்பதில் தங்களது ஆளில்லா விமானத் தாக்குதல் வெற்றிகரமாக இருந்ததாக அமெரிக்காவின் மத்தியப் படைப்பிரிவு முன்னர் கூறியிருந்தது.

கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலையத்திற்கு வெளியே தற்கொலை குண்டுதாரியால் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்ட பிறகு அமெரிக்கா தொடர்ந்து உஷார் நிலையில் உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் இயங்கும் ஐஎஸ்-கே இயக்கம் பொறுப்பேற்றது.

காபூல்

காபூல்

விமானத்தில் ஏறி நாட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பலரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

படைகள் வெளியேறுவதற்கான ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலக்கெடு நெருங்குவதால் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

விமான நிலையத்தை நோக்கி ராக்கெட் தாக்குதல்

திங்கள்கிழமையன்று விமான நிலையத்தை நோக்கி பறந்து வந்த ராக்கெட்டுகளை அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

காபூலில் வீடுகளுக்கு மேல் புகை பரவியிருப்பதையும் தெருக்களில் கார்கள் எரிவதையும் உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் விளக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காபூல்

"காபூல் விமான நிலையத்தில் அமெரிக்காவின் பணிகளில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று அதிபரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. படைகளைக் காப்பதற்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை இரண்டு மடங்காக்க வேண்டும் என்று உத்தரவும் உறுதி செய்யப்பட்டது" என்றார் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாக்கி.

இந்தத் தாக்குதில் அமெரிக்கப் படைகள் அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இறந்ததாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை.

விமான நிலையத்தைப் பாதுகாப்பதற்காக ஏவுகணை தடுப்பு அமைப்பை அமெரிக்கா நிறுவியுள்ளது.

இதனிடையே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நடக்க இருக்கும் கூட்டத்தில் காபூலிலில் இருந்து வெளியேற விரும்பும் மக்களைக் காக்கும் வகையில் பாதுகாக்கப்பட்ட பகுதியை அறிவிக்க பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தும் எனத் தெரிகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி