சீனாவில் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும், தங்கள் நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் சட்டங்களை முறையாக திருத்தி இருக்கிறது.

அதோடு சர்வதேச வங்கிகளை எல்லாம் பயத்தில் ஆழ்த்தி இருக்கும் புதிய தடைக்கு எதிரான சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்துவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20ஆம் தேதி) நடந்த சீன நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரசின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களில் இதுவும் ஒன்று.

சர்ச்சைக்குரிய தடைக்கு எதிரான சட்டம் தொடர்பான விவரங்களும் அக்கூட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்களும் இச்சட்டம் தங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் எனக் கருதுகின்றனர்.

இந்த சட்டத்தின்படி ஹாங்காங்கில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், சீனாவின் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீதான வெளிநாட்டு அரசுகளின் தடைகளை அமலாக்க முடியாது.

ஆனால் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் இந்த இச்சட்டம் தொடர்பான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என ஹாங்காங் ஊடகங்களிடம் இருந்து செய்திகள் வந்திருக்கின்றன.

சீனாவில் மூன்று குழந்தைகள் திட்டம் அமலுக்கு வந்தது

சீனாவில் மூன்று குழந்தைகள் திட்டம் அமல்

சீனா கடந்த மே மாதமே, தன் நாட்டில் வாழும் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் என அறிவித்திருந்தது. இது சீனாவின் இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டத்தில் காணப்படும் பெரிய கொள்கை மாற்றம்.

அந்த முடிவை தற்போது முறையாக சட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். அதோடு சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதத்திலும், குழந்தை வளர்க்கு சுமையை குறைக்கும் விதத்திலும் பல தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன என்கிறது ஷின்ஹுவா செய்தி முகமை.

இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன்: ஆதிக்கம் செலுத்தவா? உதவி செய்யவா?

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் 'மகா ஆட்டம்' - என்ன நடக்கப் போகிறது?

அளவுக்கு அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் சமூக பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியை ரத்து செய்தது, பெற்றோர்களுக்கு பேறு கால விடுமுறை வழங்க உள்ளூர் அரசாங்கங்களை ஊக்குவிப்பது, பெண்களுக்கான வேலைவாய்ப்பு உரிமைகளை அதிகரிப்பது, குழந்தை நலம் சார் கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடக்கம்.

சமீபத்தில் வெளியான மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகள், சீனாவின் பிறப்பு விகிதம் கணிசமாக வீழ்ச்சி கண்டிருப்பதைக் காட்டியது.

கடந்த 2016ஆம் ஆண்டு, சீனா பல தசாப்தங்களாக பின்பற்றி வந்த ஒரு குழந்தைத் திட்டத்தை மாற்றி, இரு குழந்தைகள் திட்டமாக்கியது. இருப்பினும் பிறப்பு விகிதம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை.

சீன நகரங்களில் குழந்தையை வளர்த்து எடுக்கும் செலவுகள், பல சீன தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தடுத்தது.

ஹெச் எஸ் பி சி வங்கி

ஹெச் எஸ் பி சி வங்கி

பெரிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பலவும், தடைக்கு எதிரான சட்டம் எப்படி, எப்போது ஹாங்காங்கை பாதிக்கும் என தேசிய மக்கள் காங்கிரஸின் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்து வந்தன.

இச்சட்டத்தை சீனா கடந்த ஜூன் மாதமே நிறைவேற்றியது. அதை வெள்ளிக்கிழமை ஹாங்காங்கிலும் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹாங்காங்கில் அமலாக்குவது ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சட்டப்படி, சீனாவில் இருக்கும் நிறுவனங்கள், சீன தனிநபர்களுக்கு எதிராகவோ அல்லது சீன நிறுவனங்களுக்கு எதிராகவோ வெளிநாட்டு தடை சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது. மேலும் சீனாவின் பதிலடி நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும், இல்லை எனில் தண்டிக்கப்படுவார்கள்.

ஹாங்காங்கில் நடைபெற்ற ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தை சீனா நசுக்கியதைத் தொடர்ந்து, அப்பிராந்தியத்தின் நிர்வாகியான கேரி லாம் உட்பட பல்வேறு சீன அதிகாரிகள் மீது அமெரிக்கா பலகட்ட தடைகளை விதித்தது.

அதன் பிறகு, இந்த தடைக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்க அதிகாரிகள் மீதும் சீனா தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஹாங்காங்கில் இருக்கும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் அமெரிக்காவின் தடையை நடைமுறைப்படுத்தினால், சீனாவின் தடைக்கு எதிரான சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்.

ஹாங்காங் ஒரு மிகப் பெரிய நிதி நிறுவனங்களின் புகலிடம். ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் போன்ற புகழ்பெற்ற மிகப் பெரிய வங்கிகளின் கணிசமான வருமானம் சீனாவில் இருந்துதான் வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி