உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தி ஒட்டு மொத்த  இலவசக்  கல்விக்கு வேட்டு வைக்கவும்,அதே போன்று கல்வித் துறையினை  ராணுவமயப்படுத்தவுமே கொத்தலாவல பல்கலைக் கழகச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற கோத்தா-மகிந்த ஆட்சி முன்நிற்கின்றது.

இவை மட்டுமன்றி மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு எதனையும் வழங்க முடியாது நிற்கின்றது.அதேவேளை நீண்ட காலமாக இருந்துவரும் ஆசிரியர்-அதிபர்களின் சம்பள முரண்பாட்டிற்குரிய தீர்வினைக் கொண்டுவர ஆட்சியினர் விடாப்பிடியாக மறுத்தும் வருகிறனர்.

இந் நிலையில் விவசாயிகள் தொழிலாளர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள்- அதிபர்கள் புத்திஜீவிகள் வீதியில் இறங்கி வெகுஜன எழுச்சிப் போராட்டங்களில்பங்கு கொண்டு வருகிறார்கள். இவற்றை நசுக்கி ஒடுக்குவதற்கு அரசாங்கம் தனது பொலீஸ் அடக்குமுறையினைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அதன் காரணமாக மக்கள் போராட்டங்களில் முன்நின்ற முன்னிலை சோஷலிசக் கட்சியின் தோழர்களான சமீர கொஸ்வத்த , கோசிலா ஆகியோரை பொலீஸ் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

அதே போன்று போராட்டங்களில் பங்கு கொண்ட 48 ஆசிரியர்-அதிபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொலீஸ் அடக்கு முறையினையும் போராட்டங்களில் பங்கு கொள்வோர் மீதான அராஜக நடவடிக்கைகளையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.அத்துடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது என கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சி.கா.செந்தி வேல் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில், அன்று ஜே.ஆர் தொடக்கி வைத்த தனிநபர் தனிக் கட்சி சர்வாதிகாரத்தை அதன் தொடர்ச்சியில் ராஜபக்க்ஷக்கள் தமது குடும்ப ஆட்சியாக முன்னெடுத்து வருகிறார்கள். பதவிக்கு வருவதற்காக மக்களுக்குப் பொய் வாக்குறுதிகளை வழங்கியதுடன் தேசிய இனங்களைப் பகைவர்களாகச் சித்தரித்தே கோதா-மகிந்த தலைமையிலான பொதுசன பெரமுனை ஆட்சிக்கு வந்தது.ஆனால் நிறைவேற்று  அதிகாரமும் பாராளுமன்றப் பெரும்பான்மையும் கிடைத்ததன் மூலம் தமது குடும்ப சர்வாதிகாரத்தை ராணுவமயப்படுத்தலுக்கு ஊடாக முன்னெடுப்பதிலேயே முனைப்புக்காட்டி வருகின்றனர். அவற்றுக்கான சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முன்நிற்கிறார்கள்.

அதேவேளை விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்குவதிலும் தொழிலாளர்களைச் ஒட்டச் சுரண்டுவதற்கும் ஆட்சியினர் முழு ஆதரவையும் வழங்கி நிற்கிறார்கள். அதே வேளை தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கு எதிரான பேரினவாத செயற்பாடுகளை முன்னெடுத்து சிங்கள மக்களைத் திசைதிருப்பும் செய்கிறார்கள்.ஆனால் இவற்றை எல்லாம் கடந்தே அனைத்து மக்களும் வீதியில் இறங்கியே நியாயமான தமது கோரிக்கைகளுக்காகப் போராடி வருகிறார்கள். எனவே அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களில் இறங்கி உறுதியுடன் முன் செல்வது மட்டுமே ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்கான ஓரே பாதையாகும் என்பதையே தொடரும் மக்கள் போராட்டங்கள் எடுத்துக் காட்டி வருகின்றன.

சி.கா.செந்திவேல்

பொதுச் செயலாளர்.

பு.ஜ.மா.லெ.கட்சி.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி