வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.

அந்த நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

33 வயதான அவருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு முன்னதாக 2008-ஆண்டு பெய்ஜிங், 2012-ஆம் ஆண்டு லண்டன், 2016-ஆம் ஆண்டு ரியோ என மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் அவர் பெர்முடா சார்பில் பங்கேற்றார். ஆனால் எதிலும்பதக்கம் கிடைக்கவில்லை.

"முதல் முறையாக தன்னுடைய கனவும், அதற்கு மேலாக பெர்முடா நாட்டின் கனவும் நிறைவேறியிருக்கிறது" என்று போட்டியில் வென்ற பிறகு டஃபி கூறியிருக்கிறார்.

டிரையத்லான் பந்தயத் தொலைவை அவர் ஒரு மணி நேரம் 55 நிமிடம் 36 நொடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

மழை காரணமாக 15 நிமிடம் தாமதமாகத் தொடங்கிய போட்டியில், பின்தங்கியிருந்த டஃப்பி, கடைசியில் பந்தயத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார்.

"கடைசி கிலோ மீட்டர் தொலைவைக் கடக்கும் வரை முயற்சியைக் கைவிடவில்லை. சாலையின் அந்தப் பக்கத்தில் வந்து கொண்டிருந்த எனது கணவரைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன்" என்று கூறும் டஃப்பிக்கு அவரது கணவர்தான் பயிற்சியாளர்.

ஒலிம்பிக் வரலாற்றில் பெர்முடா நாட்டுக்குக் கிடைத்திருக்கும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்தச் சாதனையை பெர்முடா மக்கள் கொண்டாடி வருகின்றனர். நாட்டின் பிரதமர் டஃபிக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

பதின்ம வயதாக இருந்தபோது பிரிட்டனுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை மறுத்தவர் டஃப்பி. 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட டஃப்பி, விளையாட்டில் இருந்தே ஒதுங்கியிருந்தார்.

நாட்டின் குறுக்களவைவிட அதிகமான பந்தயத் தொலைவு

டிரையத்லான் என்பது நீச்சல், சைக்கிள், ஓட்டம் ஆகிய மூன்றும் கலந்த போட்டி. முதலில் 1,500 மீட்டர் நீச்சல், அதன் பிறகு 40 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் பயணம், பின்னர் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட்டம் ஆகியவற்றைக் கொண்டது. இடையே ஓய்வெடுக்க முடியாது.

டஃப்பி பங்கேற்ற 51.5 கி.மீ. தொலைவு கொண்ட டிரையத்லான் போட்டி, அவரது நாட்டின் மொத்த அகலத்தையும் விட அதிகமானது. ஏனெனினல் பெர்முடா தீவைக் குறுக்காக அளந்தால் வெறும் 40 கிலோ மீட்டர் நீளம்தான் இருக்கும். அந்த அளவுக்கு சின்னஞ்சிறிய தீவு அது.

டிரையத்லான்

டிரையத்லான்

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள இந்தத் தீவு நாடு, பிரிட்டன் முடியாட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

1936-ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களை அனுப்பி வருகிறது பெர்முடா. முதல்முறையாக 1976-ஆம் ஆண்டில் கிளாரென்ஸ் ஹில் என்பவர் ஹெவிவெயிட் குத்துச் சண்டைப் போட்டியில் பெர்முடாவுக்காக வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

அப்போது நாட்டின் மக்கள் தொகை வெறும் 53 ஆயிரம் மட்டுமே. அந்த நேரத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற உலகிலேயே மிகச் சிறிய நாடு என்ற பெருமை பெர்முடாவுக்குக் கிடைத்தது.

ஒலிம்பிக் போட்டிகளுக்காக பெர்முடா சார்பில் அதிக வீரர்கள் பங்கேற்பதில்லை. 1992-ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த போட்டியில்தான் அதிகபட்சமாக 20 வீரர்கள் பங்கேற்றனர். பெரும்பாலும் 10-க்கும் குறைவான வீரர்களே பங்கேற்பது வழக்கம். கடைசியாக ரியோ ஒலிம்பிக்கில் 8 பேர் பங்கேற்றனர்.

டஃப்பி

டஃப்பி

டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு பெர்முடா சார்பில் இரண்டு பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இதுவரையிலான எண்ணிக்கையில் இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை. டிரையத்லான் போட்டியில் பங்கேற்ற டஃப்பி தவிர துடுப்புப் படகுப் போட்டியில் டாரா அலிசாடே பங்கேற்றுள்ளார். அவருக்கு இதுவரை பதக்கம் கிடைக்கவில்லை.

பஞ்சரான டயர்; முயற்சியைக் கைவிடாத வீராங்கனை

பெர்முடா தங்கப் பதக்கத்தை வென்ற ட்ரையத்லான் போட்டியின்போது பிரிட்டன் வீராங்கனையான டெய்லர் பிரவுனின் சைக்கிள் டயர் பஞ்சரானது. சைக்கிள் பிரிவின் முதல் கிலோ மீட்டரைக் கடக்கும்போது இப்படியானதால் அவர் சற்றுத் தடுமாறினார்.

உடனடியாக சக்கரத்தை மாற்றிக் கொண்டு புறப்பட்டார். இதனால் 22 விநாடிகள் அவர் பின்தங்கியிருந்தார். இருப்பினும் அந்தத் தாமதத்தை சரி செய்து கொண்ட அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

"ஒரு கிலோ மீட்டரைத் தாண்டியிருந்தபோது டயரில் இருந்து உஷ்ஷென்ற சத்தம் கேட்டது. நான் நிறுத்திவிட வேண்டும் என்று நினைக்கவில்லை. சக்கரத்தை மாற்றிக் கொண்டு போட்டியைத் தொடரத் தீர்மானித்தேன்" என்றார் அவர்.

நிறைவேறிய நூற்றாண்டுக் கனவு

பெர்முடாவைப் போலவே பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் நீண்ட காலக் கனவு நனவாகியிருக்கிறது. அந்த நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை ஹிடிலின் டியாஸ் தங்கப் பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக் போட்டிகளில் பிலிப்பைன்ஸ் நாடு பெற்றிருக்கும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

பெண்களுக்கான 55 கிலோ எடைப் பிரிவில், உலக சாதனையைப் படைத்த சீனாவின் லியாவோ கியூனை விட அதிக எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற டியாஸ், ஏற்கெனவே பிலிப்பைன்ஸில் பிரபலமான விளையாட்டு வீராங்கனை. புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரான மேன்னி பாக்கியோவுக்கு இணையாக அவரை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

1924-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரும் பிலிப்பின்ஸ், இதற்கு முன் ஒரு முறைகூட தங்கப்பதக்கம் வென்றதில்லை. ஒட்டுமொத்தமாக மூன்று வெள்ளிப் பதக்கங்களையும், 6 வெண்கலப் பதக்கங்களையும் மட்டுமே வென்றிருந்தது.

சுமார் 11 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டுக்கு தங்கப் பதக்கம் என்பது இதுவரை கனவாகவே இருந்து வந்தது.

டோக்யோ ஒலிம்பிக்கில் 19 பேர் குழுவை அனுப்பிய பிலிப்பின்ஸுக்கு தியாஸ் வென்ற ஒரு தங்கப்பதக்கத்தின் மூலம் ஒரு நூற்றாண்டுக் கனவு நிறைவேறியிருக்கிறது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி