ஒரு வருட காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் உள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீமை அவரது உறவினர்களும், சட்டத்தரணிகளும் சந்திக்க அனுமதிப்பது உள்ளிட்ட ஏனைய தடுப்புக் காவல் கைதிகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளையும் வழங்குமாறு கடந்த 22ம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாத்திரமல்ல, அவரது கவிதை சம்பந்தமாக முன்வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களுடன் எதிர்வரும் 29ம் திகதி நீதிமன்றத்தில் தோற்றி நிற்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஹ்னாப் ஜசீமை சிறைக்கு அனுப்புவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இது சம்பந்தமாக அவரது குடும்பத்திற்கோ, சட்டத்தரணிகளுக்கோ அறிவிக்கப்படாமையால் அவர் கடுமையான மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாக அவரது சட்டத்தரணிகள் கூறினர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டு  ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு  (CTID)  அஹ்னாப் ஜசீம் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு பின்பு அவரது உறவினர்களுக்கோ சட்டத்தரணிகளுக்கோ அறிவிக்காமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தடுப்புக் காவலில் வைத்துள்ளது.

கவிஞர் அஹ்னாப் ஜசீமுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீவிரவாதத்துடனான தொடர்பு சம்பந்தமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக சுய வாக்குமூலமொன்றை பலவந்தமாக பெறும் நோக்கில், ஒரு வருட காலத்திற்கும் மேலாக பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்து மானசீக ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 7 (1) உறுப்புரையின் கீழ் சந்தேக நபரான கவிஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்த போதிலும், அவரை சட்டத்தின் 7 (2) உறுப்புரையின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், முதலாவது உறுப்புரையின் கீழ் அவரை ஆஜர்படுத்தியிருந்தால் சாட்சிகள் கிடைக்காது என்பதால், கவிஞரை விடுதலை செய்ய சட்டமா அதிபர் தீர்மானிக்கும் பட்சத்தில் கிடைக்கும் நிவாரணத்தை தடுப்பதற்காக வேறொரு உறுப்புரையின் கீழ் அவரை ஆஜர்படுத்தியுள்ளதாகவும சட்டத்தரணிகள் குறிப்பிடுகின்றனர்.

கவிஞர் அஹ்னாப்  ஜசீம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எழுதிய கவிதைகளையும்  அவரது குர்ஆனையும் அவர் விடுதலை செய்யப்படும் போது வழங்குவதற்காக அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு அல்லது சிறைச்சாலை திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் அன்றைய தினம் நீதிமன்றத்திற்கு வந்திருக்காததனால், பிரதிவாதியின் கோரிக்கையின்படி, ஜூன் 29ம் திகதி வழக்கை ஒத்திவைத்து அன்றைய தினம்  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி