நிதியின் ஒரு பகுதி போலி மின்னஞ்சல் (BEC) ஊடாக திசைதிருப்பல்
5 கட்டங்களாக நிதி வௌிநாடுகளுக்குப் பாயும் வரை திறைசேரி உறக்கத்தில்; ஐ.எம்.எப் நிபந்தனைகள் மீறப்பட்டதால் அரசாங்கத்திற்கு விசேட பொதுமன்னிப்புப் பெறும் நிலை
கொள்ளையடிக்கப்பட்ட நிதியைத் தேடி FBI, Interpol மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP) இலங்கையுடன் இணைந்து கூட்டு நடவடிக்கை
இலங்கை அரசாங்கத்தினால் வௌிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு செலுத்தவிருந்த கடன் நிதியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (75 கோடி ரூபாவிற்கும் அதிக நிதி) சைபர் குற்றவாளிக் குழுவொன்றினால் நுணுக்கமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியன அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் (COPF) சமர்ப்பித்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கைகள் மூலம் வௌிச்சத்திற்கு வந்துள்ளது.
இதுவொரு சாதாரண கணினி ஊடுருவல் (Hacking) சம்பவம் அல்லவென்றும், இந்நாட்டின் அரச நிதி நிர்வாகக் கட்டமைப்பில் காணப்படும் பாரதூரமான டிஜிட்டல் பாதுகாப்பு பலவீனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு இன்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு பாரிய அளவிலான சைபர் மோசடி (Business Email Compromise - BEC) என்பதும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் அவுஸ்திரேலியாவின் ஏற்றுமதி நிதி முகவரகத்திற்கு (Export Finance Agency) 22.9 மில்லியன் டொலர் கடன் மறுசெலுத்துகை செய்யப்படவிருந்தது.
இதன்போது, சைபர் குற்றவாளிகள் அந்த அவுஸ்திரேலிய நிறுவனத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரியை ஒத்த போலி டொமைன் (Spoofed Domain) ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
அதில் "Australia" என்ற சொல்லில் உள்ள "i" என்ற எழுத்திற்குப் பதிலாக "1" என்ற இலக்கத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த போலி மின்னஞ்சல் கணக்கின் ஊடாக உத்தியோகபூர்வ தொடர்பாடல்களுக்கு இடையூறு விளைவித்து, பணம் வைப்பிலிடப்பட வேண்டிய கணக்கு இலக்கங்களை மாற்றி திறைசேரியை அவர்கள் திசை திருப்பியுள்ளனர்.
உத்தியோகபூர்வ அறிக்கைகள் மூலம் வௌிப்படுத்தப்பட்டுள்ள முக்கிய விபரங்கள்:
நேரடி கண்காணிப்புக் கட்டமைப்புகள் (Real-time monitoring) இன்மை:
இந்த பாரிய நிதிப் பறிமாற்றமானது ஒரே தடவையில் இடம்பெறாமல், 5 கட்டங்களாக வெவ்வேறு பரிவர்த்தனைகளாக இடம்பெற்றுள்ள போதிலும் மகா திறைசேரியின் எந்தவொரு கட்டமைப்பாலும் இதனைக் கண்டறிய முடியாமல் போயுள்ளது.
குறிப்பிட்ட நிதி தமக்குக் கிடைக்கப்பெறவில்லை என அவுஸ்திரேலிய கடன்வழங்குநர் நிறுவனம் இலங்கைக்கு அறிவித்த பின்னரே, இந்நாட்டு அதிகாரிகள் இந்த மோசடி குறித்து அறிந்துகொண்டுள்ளனர்.
அரசு நிறுவனங்களுக்கிடையிலான டிஜிட்டல் இடைவெளி:
வௌிநாட்டு வளங்கள் திணைக்களம் (ERD), அரச கடன் மேலாண்மை அலுவலகம் (PDMO) மற்றும் மகா திறைசேரி ஆகியன ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத, வௌ்வேறு கணினி கட்டமைப்புகளை (Fragmented digital infrastructure) பயன்படுத்துகின்றமையினால், தரவுகளை சரிபார்ப்பதில் (Verification) பலவீனங்கள் ஏற்பட்டுள்ளன. சைபர் கொள்ளையர்கள் இந்த இடைவெளியையே சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
நாணய நிதிய உடன்பாடுகள் முறிவடைந்தமை மற்றும் விசேட பொதுமன்னிப்பு:
இந்த நிதி காணாமல் போனமையால் உரிய காலத்தில் வௌிநாட்டுக் கடனைச் செலுத்த இலங்கை தவறியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தின் நிபந்தனைகள் தொழில்நுட்ப ரீதியாக மீறப்பட்டுள்ளன.
இதன் விளைவாக புதிய வௌிநாட்டுக் கொடுப்பனவு நிலுவை (External payment arrears) ஏற்பட்டுள்ளதால், நாணய நிதியத்தின் நிதி உதவியைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இது குறித்து விளக்கி, உத்தியோகபூர்வ விசேட பொதுமன்னிப்பு (Formal waiver) ஒன்றைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணைகளும் நிதியைக் கண்டறிதலும்:
கொள்ளையடிக்கப்பட்ட பணம் சர்வதேச வங்கி வலையமைப்புகளின் ஊடாக எவ்வாறு கடத்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவதற்காக, இலங்கை புலனாய்வாளர்களுடன் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸ் (AFP), சர்வதேச பொலிஸ் (Interpol) மற்றும் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) ஆகியன இணைந்து கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, அமெரிக்காவின் டெலவெயர் (Delaware) மாநில வங்கியொன்றிலிருந்த கொள்ளையடிக்கப்பட்ட நிதியிலிருந்து 200 டொலர் தொகை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு (COPF), நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் அறிக்கைகளுடன், இலங்கை கணினி அவசர தயார்நிலை கட்புலன் (CERT) நிறுவனத்தின் தொழில்நுட்பக் முடிவுகளையும் தற்போது மறுசீராய்வு செய்து வருகின்றது.
இந்த சைபர் கொள்ளை இடம்பெற்ற விதம் மற்றும் எதிர்காலத்தில் அரச நிதி நிறுவனங்களை இவ்வாறான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் உள்ளடங்கிய முழுமையான அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


