புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான தரம் 1 மாணவர்களைப் பாடசாலைகளுக்கு உள்வாங்கும் தேசிய நிகழ்வு, இன்று காலை அத்துருகிரிய குணசேகர வித்யாலயத்தில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, "வளமான நாட்டுக்குள் வளமான கல்வியை" பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி, பெற்றோரின் பொருளாதார நிலையைப் பொறுத்து தீர்மானிக்கப்படக் கூடாது என்றும், கல்வியிலிருந்து எந்தவொரு பிள்ளையும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தரம் 6 க்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டாலும், அதனால் எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான, புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தர மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அந்தப் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர், 2030 ஆம் ஆண்டு வரை வருடாந்தம் புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
'கனவுப் பாடசாலை' ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும், அதனை யதார்த்தமாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் மையக் கல்விக்குப் பதிலாக மாணவர் மையக் கல்வியை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் இதன்போது கூறினார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக நற்பண்புகள் மற்றும் பச்சாதாபம் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதாகக் கூறிய பிரதமர், பிள்ளைகள் சுமந்து செல்லும் புத்தகப் பையின் எடையைக் குறைப்பதிலிருந்து ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம், மனஅழுத்தம் இன்றி கல்வி கற்பதற்குத் தேவையான சூழலை உருவாக்கப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


