உலக வாழ் முஸ்லிம்கள் இன்று (28) கொண்டாடுகின்றனர். இறைவனின் தூதர் இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூர்ந்து கொண்டாடப்படும் 'தியாகத் திருநாள்' ஆகும். இதுவே ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் என்றும் அழைக்கப்படுகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதமான 'துல் ஹஜ்' மாதத்தின் பத்தாம் நாளில் இப்பெருநாள் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது. ஹஜ் பெருநாளின் பின்னணியில் ஒரு உன்னதமான தியாக வரலாறு ஒன்று இருப்பதாக கூறப்படுகின்றது.
இறைத்தூதர் இப்ராஹீம் நபியின், வயதான காலத்தில் நீண்ட பிரார்த்தனைக்குப் பிறகு இஸ்மாயீல் நபி என்ற மகன் பிறந்தார். தன் உயிருக்கு மேலாக நேசித்த அந்த மகனை, இறைவனின் கட்டளைக்காகப் பலியிட இப்ராஹீம் துணிந்தார். தந்தையின் முடிவுக்கு மகனும் முழு மனதுடன் கட்டுப்பட்டார்.
நபி இப்ராஹிம் இறைக் கட்டளைக்கு இணங்க, அதை நிறைவேற்றத் தயாரானதன் மூலம் இறைவன் மீது தாம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்த்தினார். அதனால், மகனுக்கு பதிலாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளைத் தியாகம் செய்யுமாறு இறைவன் கட்டளையிட்டான்.
இவர்களின் இந்த அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும், அர்ப்பணிப்பையும் மெச்சுமுகமாக, மனிதர்களைப் பலியிடும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, விலங்குகளைப் பலியிடும் (குர்பானி) வழக்கத்தை இறைவன் அன்றிலிருந்து ஏற்படுத்தியதாக நம்பிக்கை.
விலங்குகளை பலி கொடுக்கும் சடங்கு குர்பான் என்று அழைக்கப்படுகிறது. வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஆடு, மாடு அல்லது ஒட்டகத்தை இறைவனின் பெயரால் பலியிட்டு குர்பானி கொடுக்கின்றனர். இந்த இறைச்சியானது ஒரு பங்கு தமது சொந்த குடும்பத்திற்காகவும்,மற்றொரு பங்கு தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காகவும், மூன்றாம் பங்கு ஏழை எளிய மக்களுக்காகவும் 3 பங்குகளாக பங்கிடப்படுகின்றன.
அதேநேரம், முஸ்லிம்களின் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையுடன் இணைந்ததாக கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள், ஹஜ் கடமையின் இறுதி நாளாகவும் அமைந்துள்ளது. அதனடிப்படையிலேயே தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை உணர்த்தும் புனித நாளாக ஹஜ் பெருநாள் அமைந்துள்ளது.
தம்மிடமுள்ள, தமக்குப் பிடித்தமான அனைத்தையும் படைத்த இறைவனின் நற்கருணையை மட்டும் எதிர்பார்த்து, ஏழை, எளிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தியாக மனப்பான்மையை இது ஊக்கப்படுத்துகின்றது. இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று பெருநாள் தொழுகை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுகின்றது.
நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது. தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன்.
மேலும், மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும், மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் செய்த எல்லையற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.
சுயநலத்திற்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஈத் முபாரக் !
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
2026 மே 28ஆம் திகதி


