கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் உயர்மட்டங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது. அவரை கைது செய்த பின்னரே குறித்த அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் காரணமாக ஜனாதிபதி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர், பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோர் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அரசாங்கத்தின் முப்படை கூட்டு அமைப்பின் தலைவர்களும் இச்செய்தியால் கடும் குழப்பமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதுக்கான காரணங்கள்:
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக, மட்டக்களப்பு - வவுணதீவு சோதனைச் சாவடியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைப் படுகொலை செய்து, அவர்களின் ஆயுதங்களைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுடன் சுரேஷ் சாலே தொடர்புகளைப் பேணியமை மற்றும் அவர்களுக்கு இராணுவத் தகவலாளர்களாக ஊதியம் வழங்கியமை குறித்த குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் ஆயுதமேந்திய முஸ்லிம் குழுக்களை உருவாக்கியமை மற்றும் அதற்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.
தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் உத்தரவின் பேரில் 72 மணித்தியாலங்கள் (மூன்று நாட்கள்) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார். இந்தக் காலப்பகுதிக்கு மேலாக அவரைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டுமாயின், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதி அவசியமாகும்.
அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர முயற்சி:
இதேவேளை, பிரித்தானியாவின் 'சானல் 4' (Channel 4) ஊடகத்தின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆவணப்படத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
குறித்த ஆவணப்படத்தில், சஹ்ரான் ஹாசீமின் குழுவுடன் சுரேஷ் சாலே தொடர்புகளைப் பேணியதாக அசாத் மௌலானா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இருப்பினும், தான் இலங்கைக்கு மீண்டும் வந்தால் மீண்டும் பாதுகாப்பாகத் திரும்ப முடியுமா என்ற அச்சத்தினால், நாட்டுக்குத் திரும்புவது குறித்து அவர் இதுவரை உறுதியான பதிலை வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுரேஷ் சலே கைது: ஐந்து முக்கிய குற்றச்சாட்டுகள் முன்வைப்பு!
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களின் பின்னணி மற்றும் செயற்பாடுகளை மறைத்தமை உள்ளிட்ட ஐந்து முக்கிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று (26)கருத்து வெளியிடுகையில், சுரேஷ் சாலே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பின்வருமாறு விளக்கினார்:
தகவல் சேகரிப்பு: இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி, சந்தேகத்திற்கிடமான நான்கு முஸ்லிம் இளைஞர்கள் மூலம் நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் தொடர்பான இரகசியத் தகவல்களைச் சேகரிக்க நடவடிக்கை எடுத்தமை.
தடைகளை ஏற்படுத்தல்: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தாக்குதல்தாரிகள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கியபோது, அவற்றை மூடிமறைப்பதற்கும் விசாரணைகளுக்குத் தடைகளை ஏற்படுத்துவதற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயற்பட்டமை.
சாட்சியங்களை மறைத்தல்: கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீட்டில் வைத்து, மகேந்திரன் புலஸ்தினி என்ற 'சாரா ஜாஸ்மின்' குறித்த குண்டுவெடிப்பில் உயிரிழந்துவிட்டதாகத் தவறான பிம்பத்தை உருவாக்க நேரடியாகச் செயற்பட்டமை மற்றும் அவர் குறித்த உண்மைகளை மறைத்தமை.
உதவி மற்றும் உடந்தையாக இருத்தல்: தாக்குதல்தாரிகளின் செயற்பாட்டாளர்களை அடையாளம் காண்பதைத் தடுப்பதன் மூலம், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை.
சதித்திட்டம்: பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே அவர் கைது செய்யப்படுவதற்குப் பிரதான காரணங்களாகும்.
பேலியகொட பகுதியில் வைத்து கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். அவரிடம் பெறப்படும் வாக்குமூலங்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


