நிலவிய சிரமங்கள் குறித்துக் கவலையுடன் பேசிக்கொண்டனர்.
ஓராண்டு கழிந்து, இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் போதும் அதே போன்றதொரு மக்கள் முறைப்பாட்டைக் காண முடிந்தது. அது கொள்ளுப்பிட்டி சுற்றுவட்டத்தில் ஒன்று கூடிய மலையகத் தமிழ் மக்களிடமிருந்து எழுந்தது.
கொள்ளுப்பிட்டி சந்திப்பில் அடுப்பு கூட்டி, சிவப்பு அரிசியில் பொங்கல் சோறு சமைத்து, அதனை சூரிய பகவானுக்குப் படைத்த அவர்கள், ஒரு வித்தியாசமான வேண்டுதலையே முன்வைத்தனர். 'டிட்வா' அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள், அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், இதற்காக உடனடியாக சட்டரீதியான தீர்வை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
"டிட்வா புயலுக்குப் பின்னர், பாதிக்கப்பட்டவர்களுக்கு 25,000 ரூபா, 50 லட்சம் ரூபா என அரசாங்கம் இப்போது இழப்பீடு வழங்குகிறது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அந்த இழப்பீடுகளை வழங்கும் விதம் குறித்து ஒரு சுற்றுநிரூபத்தையும் வெளியிட்டுள்ளார். ஆனால், மலையக மக்கள் இந்த நிவாரணங்களைப் பெறுவதற்கு இப்போது சட்ட ரீதியான தடை ஏற்பட்டுள்ளது. அதற்குக் காரணம் எமக்கு நில உரிமை (Land Ownership) இல்லாததாகும். இதன்காரணமாக அனர்த்தத்திற்குப் பின்னரும் நாம் மீண்டும் ஒரு அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளோம்."
மலையக மக்களின் இந்தக் குறைபாடு குறித்து இவ்வாறு கூறுபவர், 'மக்கள் ஒருங்கிணைப்பு மற்றும் வலையமைப்பு நிறுவனத்தின்' நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜீவரத்னம் சுரேஷ் ஆவார்.
200 ஆண்டுகால தோட்டத் தொழிலாளர் வரலாற்றில், முதன்முறையாக தோட்டத் தொழிலாளர் சமூகத்திற்குத் தபால் முகவரிகள் (Postal Addresses) கிடைப்பதற்குக் காரணமாக இருந்தவர் சுரேஷ். மாவத்தகம முவன்கந்த தோட்டத்தில் வசிக்கும் ஜீவரத்னம் சுரேஷ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் காரணமாகவே மலையக மக்களுக்கு அந்த உரிமை கிடைத்தது.
இருந்தபோதிலும், சுரேஷ் போன்றவர்களின் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. ஆயிரமாயிரம் எதிர்பார்ப்புகளுடன் ஆட்சிக்குக் கொண்டு வந்த புதிய அரசாங்கத்துடன் மீண்டும் ஒருமுறை போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுரேஷ் இப்போது கூறுகிறார்.
"ஒரு வீட்டிற்கு 50 லட்சம் ரூபா வழங்கப்படும் எனக் கூறினாலும் தோட்ட மக்களால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறானதொரு அனர்த்த நிலையிலாவது சட்டத்திலுள்ள குறைபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முடியுமா என்று நாம் பார்த்தோம். இப்போது அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளது. விதிமுறைகளின் கீழ் காணிகளைப் பொறுப்பேற்க முடியும். நிறுவனங்களின் கீழுள்ள காணிகளைக் கூடப் பொறுப்பேற்க முடியும். அப்படியிருந்தும் இந்த நிலப் பிரச்சினையை ஏன் தீர்க்கவில்லை என்பது குறித்து எமக்கு இப்போது சந்தேகம் எழுகிறது. இவ்வளவு காலமும் தோட்டப்பகுதிகளில் தேர்தல்களின் போது மக்கள் தொழிற்சங்கங்களுக்கே வாக்களித்தனர். ஆனால் இந்த பொதுத் தேர்தலில் அந்த வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்தன. இவ்வளவு காலம் தோட்டத் தொழிற்சங்கங்கள் எங்களை ஏமாற்றியதாலேயே மக்கள் அவ்வாறு வாக்களித்தனர். ஆனால், இப்போது தேர்தலுக்கு மாத்திரம் எம்மைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற சந்தேகம் எழுகிறது."
"நில உரிமை கிடைக்கும் வரை இந்த சுற்றுநிரூபங்களினால் எந்தப் பயனும் இல்லை. இன்று வாக்களித்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் எதுவும் எமக்குக் கேட்கவில்லை. முன்னதாக எந்த அரசாங்கம் இருந்தாலும் தோட்டப்புற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இருந்தது. ஆனால் இப்போது அது சுந்தரலிங்கம் பிரதீப் என்ற ஒரு பிரதி அமைச்சரின் கீழ் உள்ளது. அமைச்சரவையில் எமது இந்தப் பிரச்சினைகளை யார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்?"
ஜீவரத்னம் சுரேஷ் கூறுவதற்கேற்ப, 'டிட்வா' அனர்த்தம் ஏற்பட்ட பின்னர், அரச இயந்திரம் தகவல்களைச் சேகரிக்கும் சந்தர்ப்பத்திலிருந்தே மலையக மக்கள் பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். பிரதேச செயலகங்களை மையமாகக் கொண்ட பொது நிர்வாகக் கட்டமைப்பிலிருந்து தோட்டப்பகுதிகள் துண்டிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார். இந்த அலட்சியத்தை வடக்கின் தமிழ் மக்களுடன் ஒப்பிட்டு அவர் இவ்வாறு விளக்கினார்:
பிரதேச செயலகங்கள் தோட்ட நிறுவனங்களுக்குக் கீழ்ப்படிந்தவையா?
"நிர்வாகக் கட்டமைப்பிற்குள் எங்களை உள்வாங்குமாறு நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். பொதுவாக 300-400 குடும்பங்களுக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் இருப்பதாகக் கூறப்படுகிறது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, டெல்ஃப்ட் போன்ற பகுதிகளில் 3,000 மக்கள் தொகைக்கு பிரதேச செயலகங்கள் உள்ளன. ஆனால் மலையகப் பகுதிகளில் 13,000 குடும்பங்களுக்கு ஒரேயொரு கிராம உத்தியோகத்தர் மாத்திரமே உள்ளார். டிட்வா போன்ற அனர்த்தத்தின் போது தகவல்களை எப்படிப் பெறுவது என்று சொல்லுங்கள்? இந்த அனர்த்தத்தின் போது அரசாங்கம் எதிர்கொண்ட பெரிய பிரச்சினை இந்தப் பகுதிகளின் தகவல்கள் இல்லாமையே ஆகும். அதிகாரிகள் அங்கு செல்லாமல் தகவல்களை எப்படிப் பெறுவது? ஒரு பிரதேச செயலகத்தில் அமைச்சுக்களால் நியமிக்கப்பட்ட பல்வேறு வகையான கள அதிகாரிகள் உள்ளனர். அமைச்சுக்களின் வளங்கள் கிராமங்களுக்குச் செல்வது இந்த அதிகாரிகள் மூலமேயாகும். ஆனால் மலையகப் பகுதிகளில் அவ்வாறான வளங்கள் சென்றடைவதில்லை. ஏனென்றால் அதிகாரிகள் இந்தக் கிராமங்களுக்குச் செல்வதில்லை. பெண்கள் அபிவிருத்தி அதிகாரிகள், கலாசார அதிகாரிகள் எத்தனை முறை இந்தக் கிராமங்களுக்குச் சென்று பார்த்துள்ளனர்?"
"அனர்த்தத்துடன் நோர்வூட் பிரதேச செயலகம் இப்போது ஹற்றன் நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். ஹற்றனிலிருந்து முப்பத்தி சொச்சம் கிலோமீட்டர் தொலைவில் கார்ட்மோர் (Guardmore) தோட்டம் உள்ளது. மொக்கா (Mocca) தோட்டம் உள்ளது. இப்போது அந்தத் தோட்டத்து மக்கள் பிரதேச செயலகத்தில் ஒரு வேலையைச் செய்ய வேண்டுமென்றால், ஒரு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டுதான் வர வேண்டும். அங்கு வந்தவுடன் அங்கிருக்கும் அதிகாரிகள் அனைவரும் சிங்கள மொழியிலேயே வேலை செய்கிறார்கள். நகரத்தில் யாராவது ஒருவரைப் பிடித்து சிங்களத்தில் படிவங்களை நிரப்பிக் கொடுக்கும்போது அன்றைய நாள் முடிந்துவிடுகிறது. மீண்டும் 35 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, மற்றுமொரு நாளில் வந்துதான் வேலையை முடிக்க வேண்டியுள்ளது. அன்றைய தினம் தோட்ட வேலை இல்லை. இரண்டு நாட்கள் வேலைக்குச் செல்லாவிட்டால் தோட்டக் கங்காணி சத்தம் போடுவார்."
இலங்கை தோட்டத்துறையின் உழைப்புப் படையிலிருந்த இடைவெளியை நிரப்புவதற்காகத் தென்னிந்தியத் தொழிலாளர்களைப் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கைக்கு அழைத்து வந்தனர். மலையகத் தமிழர்கள் என அழைக்கப்படும் இந்த மக்களுக்காக இராஜதந்திர ரீதியில் தலையீடுகளைச் செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக 1967 'சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம்' மூலம் 6 லட்சம் இந்தியத் தொழிலாளர்களை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பும் தீர்மானம் இதற்கு ஒரு உதாரணமாகும்.
மலையக மக்களின் நலன்களைப் பார்ப்பது இந்தியாவிற்கு ஒரு அரசியல் வேலையாக இப்போது மாறியுள்ளது. தோட்டப்புறங்களுக்கு மேலும் 10,000 வீடுகளை வழங்குவது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதும் அதன்படியே ஆகும். எனினும், இந்த 10,000 வீடுகள் 2015 ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வருவதாக சுரேஷ் கூறுகிறார்.
"அந்த வீட்டுத் கதை 2015 முதல் கூறப்படுவது. அதில் இதுவரை 4,000 சொச்சம் வீடுகளே கொடுக்கப்பட்டுள்ளன. 200 உறுதிப்பத்திரங்கள் மற்றும் 2,000 நில உரிமையாளர் பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. நாம் இந்த நாட்டின் குடிமக்கள். எனவே எமது வீட்டு உரிமையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். 2015 முதல் 2025 வரை கூட 10,000 வீடுகளைக் கட்ட முடியாமல் போயுள்ளது. தொழிலாளர்கள் மாத்திரம் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். மொத்தமாக 6 லட்சம் பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு வீட்டின் உரிமை இருக்க வேண்டும். இந்த மண்ணில் பிறந்த ஏனைய மக்களைப் போலவே இந்த மண்ணில் ஒரு வீட்டில் இறக்கும் உரிமை எமக்கு உண்டு. ஆனால் நாம் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றால் எமக்குத் தருவது 'இந்திய வீடுகள்' என்று கூறுகிறார்கள். 'டிட்வா' அனர்த்தம் மலையகத்திற்கு வந்தது இந்தியாவிடம் கேட்டுவிட்டு வரவில்லையே? இந்தியா எம்மைப் பார்க்கும் வரை காத்திருப்பதற்கு நாம் இலங்கையர்கள் இல்லையா? இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 4% பங்களிப்பை நாம் வழங்குகிறோம். ஆனால் வருடாந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை ஆண்டிறுதியில் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புகிறார்கள். இந்த மூன்று ஆண்டுகளும் அப்படித்தான் கழிந்தன."
"யாருக்கும் அநீதி இழைக்கவில்லை" - நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்
மலையக சமூகத்திடமிருந்து முன்வைக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் அவர்களிடம் கேட்டபோது, இழப்பீடு வழங்கும் போது நில உரிமை பரிசோதிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
"உண்மையில் 25,000 அல்லது 50,000 ரூபா வழங்கும் போது யாருடைய நில உரிமையையும் பார்க்கவில்லை. அப்படி ஒரு பிரச்சினை இல்லை. உண்மையில் இப்போதுள்ள சுற்றுநிரூப விதிகளின்படி அவர்களுக்கு அப்படி ஒரு சிக்கல் வர வாய்ப்பில்லை. வீடு என்ற விடயத்தில் தோட்ட உரிமையாளர்களும் வீடுகளைக் கட்டுவதற்கு நிலத்தை வழங்க எமக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதனால் எமக்கு பெரிய அளவில் பிரச்சினை வரவில்லை. வீடுகளைச் சுத்தம் செய்வதற்காகவே 25,000 ரூபா வழங்கப்படுகிறது. அதில் எதனையும் பார்ப்பதில்லை. வெள்ளம் அல்லது அனர்த்தம் ஏற்பட்டதா என்பதை மாத்திரமே பார்க்கிறோம். வெள்ளம் அல்லது மண்சரிவு ஏற்பட்டு வீட்டு உபகரணங்களுக்குச் சேதம் ஏற்பட்டிருந்தால் 50,000 ரூபா வழங்கப்படுகிறது. அதிலும் எந்த உறுதிப்பத்திரங்களையும் பார்ப்பதில்லை. அதற்கு அப்பால் சென்றாலும் அந்தப் பிரச்சினை பாதிக்கும் நிலை இல்லை. உதாரணமாக லயன் வீடுகளில் இருந்தவர்களுக்கு இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகின்றன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் மூலமும் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டம் உள்ளது. சிலவேளை ஒரு மாதத்திற்குள் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். பலர் 25,000 கிடைக்கவில்லை என்று கூறினாலும், டிசம்பர் 31ஆம் திகதியாகும் போது கிடைக்க வேண்டியவர்களுக்குக் கிடைத்துவிட்டது. யாராவது மேன்முறையீடு செய்திருந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. இப்போதுதான் அவர்களுக்கு காசோலைகள் (Checks) செல்கின்றன. அவர்கள் முறைப்பாடு செய்த காலத்தில் நாம் பார்க்கும்போது வழங்கப்பட்டுவிட்டதே. எப்படியிருந்தாலும் மக்கள் தரப்பில் ஒரு அவசரமும் உள்ளதுதானே. வேலைகள் நடந்து வருகின்றன."
மாவட்டச் செயலாளரின் பதிலின்படி இழப்பீடு வழங்கல்கள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. மிகுதியானது காலத்தைப் பொறுத்த ஒரு விடயமாகும். எனினும், மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தச் செயல்முறை குறித்து என்ன அவதானிப்புகளைக் கொண்டுள்ளது?
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் (ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு) நிஹால் சந்திரசிறி அவர்கள் தெரிவித்த கருத்துக்களின்படி, மலையக மக்களின் துன்பங்கள் குறித்த சம்பவ ஆய்வுகளை டிட்வா அனர்த்தத்திற்கு முன்னரே ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. புலத்கோபிட்டிய, களுபஹன மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேசத்திலுள்ள லெவண்ட் போன்ற தோட்டங்கள் இதற்கு இரண்டு உதாரணங்களாகும்.
டிட்வா அனர்த்தத்திற்குப் பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு விசேட அறிக்கையைத் தயாரிக்கத் தொடங்கியது. இந்த நாட்களில் அது இறுதி நிலையில் உள்ளது.
நிஹால் சந்திரசிறி அவர்கள் கூறியதன் படி, மலையக மக்கள் இவ்வாறு பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு ஒரு காரணம், பிரதேச செயலாளர்கள் அந்த மக்களின் வசிப்பிடங்கள் தொடர்பான தலையீடுகளை தோட்ட நிறுவனங்களின் நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டுத் தட்டிக்கழிப்பதாகும்.
அரசாங்கத்தின் சுற்றுநிரூபங்கள் மலையக மக்களுக்கும் பொருந்த வேண்டுமானால், தோட்ட நிறுவனங்களின் 'ஏகாதிபத்தியத்திலிருந்து' தமது சமூகம் விடுவிக்கப்பட வேண்டும் என ஜீவரத்னம் சுரேஷ் கூறுகிறார்.
"இந்தத் தோட்டங்கள் என்பது இலங்கை என்ற நாட்டிற்குள் இருக்கும் ஒரு தனி நாடு போன்றது. அதன் முகாமையாளரே (Manager) அங்கு அரசன். பல சுற்றுநிரூபங்கள் பொதுவானவை என்று வெளியிடப்பட்டாலும், அவற்றை தோட்டங்களுக்குள் நடைமுறைப்படுத்த முடியாது. உதாரணமாக 2017 இல் பிரதேச சபைகள் இந்தத் தோட்டங்களுக்குள் வேலை செய்யக் கூடிய வகையில் பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட்டது. ஆனால் அதில் இருப்பது தோட்ட முகாமையாளருக்கு அறிவித்து அவரது விருப்பத்தின் பேரிலேயே வேலை செய்ய முடியும் என்பதாகும். அதன் அர்த்தம் என்ன? முகாமையாளர் விரும்பாவிட்டால் அந்த வேலை நடக்காதா? பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பாக தேசிய சட்டங்கள் உள்ளன. அதன் கீழ் ஒரு அரச நிறுவனத்திற்குப் பதிலாக ஒரு தனியார் நிறுவனத்தின் பிரதானி ஒருவரின் பிறப்பு அல்லது இறப்பை உறுதிப்படுத்த முடியுமா? முடியாது. ஆனால் இந்தத் தோட்ட நிறுவன முகாமையாளர்களால் முடியும். இது நிர்வாக அதிகாரத்தை வழங்குவதாகும். மலையக மக்களை அடிமைகளாக வைத்திருப்பதாகும். இந்த முரண்பாடான சட்டங்களினாலேயே என்னதான் சுற்றுநிரூபங்கள் போட்டாலும் எமக்குத் தடைகள் வருகின்றன."
"இந்த அனர்த்தத்தின் போது எத்தனை நிறுவனங்கள் தலையிட்டு மக்களுக்கு உதவின? குறைந்தபட்சம் கொஞ்சம் அரிசி அல்லது ஒரு போர்வையாவது கொடுத்தது யார்? சில தோட்ட முகாமையாளர்கள் சிறிய வேலைகளைச் செய்தார்களே தவிர, நிறுவனங்களாகத் தலையிடவில்லை. 'தோட்டங்கள் எமக்குச் சொந்தமானவை அல்ல' என்று கூறும் பிரதேச செயலாளர்கள் இன்னமும் இருக்கிறார்கள். நில உரிமையை உறுதிப்படுத்துமாறு கூறினால், அரசாங்கம் இன்னமும் 'நிச்சயமாகத் தருவோம்' என்று கூறிக் கொண்டிருக்கிறது. அடிப்படை விடயங்களை மாற்றாமல் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. இந்த அரசாங்கம் வரும்போது 'முறைமையை' (System) மாற்றுவார்கள் என்று நாம் நினைத்தோம். குறைந்தபட்சம் நில உரிமையை உறுதிப்படுத்தும் ஒரு சட்டச் சீர்திருத்தமாவது வரும் என்று நினைத்தோம். அத்தகைய ஒரு விடயத்திற்கு அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் உறுதிப்பாடு தேவை. ஆனால் இப்போது மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுவிட்டோமா என்றே எமக்குத் தோன்றுகிறது."
- பிங்குன் மேனக கமகே மற்றும் ரவிஷான் பெர்னாண்டோ


