அது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
கெரவலபிட்டிய சதுப்புநிலத்தை நிரப்பி பேணப்பட்டு வரும் குப்பை மேட்டில் கடந்த 25ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சதுப்புநிலங்களில் குப்பைகளைக் கொட்டும்போது ஏற்படும் இயற்கையான அழுத்தங்கள் மற்றும் உயிரியல் செயற்பாடுகள் காரணமாக, மீத்தேன் போன்ற வாயுக்கள் உட்புறமாகச் சிக்கி எரிபொருளாக மாறுவது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சின் பதில் அமைச்சராகக் கடமையாற்றும் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி, சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் மூலம் விசேட அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளார்.
அதற்கமைய, கீழ்க்கண்ட விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தி விரைவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும், இது தொடர்பாகப் பொதுமக்களைத் தெளிவுபடுத்துமாறும் அவர் பணித்துள்ளார்:
மீத்தேன் வாயு வெளியேற்றம் மற்றும் கட்டுப்பாடு:
சதுப்புநிலத்தில் சிக்கியுள்ள மீத்தேன் வாயு காரணமாகத் தீ மேலும் பரவும் அபாயம் மற்றும் அதனால் ஓசோன் படலம் மற்றும் வளிமண்டலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஓசோன் அலகு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளல்.
மறுசுழற்சி வேலைத்திட்டம்:
புதிய அரசாங்கத்தினால் குப்பைகளை விஞ்ஞான ரீதியாக மறுசுழற்சி செய்வதற்கான புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதற்குப் பின்னணியாக இருந்த காரணங்கள் மற்றும் அதில் ஏதேனும் நிர்வாக அல்லது தொழில்நுட்பக் குறைபாடுகள் உள்ளதா என விசாரணை செய்தல்.
சுற்றுச்சூழல் பாதிப்பு:
தீ விபத்தினால் அழிவடைந்த சதுப்புநிலத் தொகுதியை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ளல்.


