சில நாட்களுக்குள் எரிபொருள் விலைகளை (Fuel Prices) கணிசமான அளவில் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபல பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சந்தையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாய் வரை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றிரவு (25) தனியார்த் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விலையை உயர்த்தாவிடின் மீண்டும் பொருளாதார நெருக்கடி!
இது குறித்து தனநாத் பெர்னாண்டோ மேலும் விளக்குகையில்:
"தற்போதைய தரவுகளின்படி, டீசலின் விலை தோராயமாக 600 ரூபாய் வரையாவது அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன், மே 6ஆம் திகதி நிலவரப்படியான தரவுகளுக்கு அமைய, பெட்ரோல் விலையும் ஆகக்குறைந்தது 20 முதல் 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிடின், இலங்கை ரூபாய் மேலும் கடுமையான அவமதிப்பிற்கு (Depreciation) உள்ளாகும். ரூபாய் மதிப்பிழந்தால் எரிபொருள் விலை மீண்டும் தானாகவே உயரும். கடந்த காலங்களில் நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியதற்கு இந்த சுழற்சியே காரணமாகும்."
எரிபொருள் விலையை உயர்த்தாமல் நட்டத்தை அரசு ஏற்குமாயின், அது பணவீக்கத்தை (Inflation) மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
"பணக்காரர்களுக்கு அல்ல, ஏழைகளுக்கே மானியம் தேவை"
எரிபொருள் விலையை அதிகரிக்கும் அதேவேளை, சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில தரப்பினருக்கு மாத்திரம் எரிபொருள் மானியத்தை (Fuel Subsidy) வழங்குவது கட்டாயமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
"தற்போது அரசாங்கத்தின் கணக்குப்படி ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் சுமார் 100 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த பொதுவான மானிய முறையினால், மானியம் தேவையில்லாத பெரும் பணக்காரர்களே அதிக பலனைப் பெறுகின்றனர். மாறாக, நாட்டின் வறிய மக்களைத் தேர்ந்தெடுத்து இந்த மானியங்களை வழங்குவதே முறையானதாகும். குறிப்பாக, பொதுப் போக்குவரத்து (Public Transport) பேருந்துகள் ஓடும் கிலோமீற்றர் தூரத்தைக் கணக்கிட்டு, அவற்றுக்கு நேரடியாக டீசல் மானியத்தை வழங்க முடியும். சொகுசு வாகனங்களில் செல்லும் பணக்காரர்களுக்கு மானியம் வழங்குவதை விட, பேருந்தில் பயணிக்கும் சாதாரண ஏழை மக்களுக்கு அதனை வழங்குவதே சாலச் சிறந்தது"
என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


