மற்றும் சேவைகளின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தற்போதைய உலகளாவிய சந்தையில், போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பீப்பாய் 65 அமெரிக்க டொலராக இருந்த கச்சா எண்ணெய் விலை 102 டொலராக (59% அதிகரிப்பு) உயர்ந்துள்ளதுடன், மேலும் அதிகரிக்கும் அறிகுறிகளையும் காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டு ரஷ்ய-உக்ரைன் போர் காலத்தை விடவும் தற்போது இலங்கை மிகவும் நிலையற்ற ஒரு சூழலில் உள்ளது.
இருப்பினும், 2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் எரிபொருள் விலை நிர்ணய முறையானது சந்தை விலைகளுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது. நெருக்கடிக்கு முன்னர் பல ஆண்டுகளாக உள்நாட்டு எரிபொருள் விலைகள் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு (Administered), அவ்வப்போது சீரற்ற முறையில் மாற்றியமைக்கப்பட்டன.
பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கை சந்தையுடன் இணைக்கப்பட்ட எரிபொருள் விலை நிர்ணய பொறிமுறைக்கு (Market-linked fuel pricing mechanism) மாறியது. இதன் மூலம் உள்நாட்டு விலைகள் உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் நாணய மாற்று விகித மாற்றங்களை மிக நெருக்கமாகப் பின்பற்றுகின்றன.
இந்த சீர்திருத்தம், எண்ணெய் விலை மாற்றங்கள் பணவீக்கத்திற்கு எவ்வாறு கடத்தப்படுகின்றன என்பதை மாற்றியுள்ளது. இது ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறது: இந்த மாற்றங்கள் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் பல்வேறு துறைகளுக்கு எவ்வாறு சென்றடைகின்றன?
இரண்டு வெவ்வேறு விலை நிர்ணய முறைகள்: பணவீக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட விளைவுகள்
மாதாந்த தரவுகள் மற்றும் உள்ளூர் கணிப்புகளைப் பயன்படுத்தி, தற்போதைய வளைகுடா நெருக்கடியால் ஏற்படும் எண்ணெய் விலை அதிர்ச்சிகளுக்கு இலங்கையின் நுகர்வோர் விலைச்சுட்டெண் (CPI) எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை இரண்டு வெவ்வேறு விலை நிர்ணய முறைகளின் கீழ் மதிப்பிட முடியும்: அவை 'நிர்வாக விலை நிர்ணய முறை' மற்றும் தற்போதைய 'சந்தையுடன் இணைக்கப்பட்ட முறை' ஆகும்.

படம் 1: வளைகுடா போர் எண்ணெய் விலை அதிர்ச்சி (65 டொலரிலிருந்து 102 டொலர் வரை) - நிர்வாக மற்றும் சந்தை விலைகளின் கீழ் CPI மீதான தாக்கம்
2022-க்கு முன்னைய நிர்வாக விலை நிர்ணய முறையின் கீழ், உள்நாட்டு எரிபொருள் விலைகள் பெரும்பாலும் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட போது, உலகளாவிய எண்ணெய் விலை அதிர்ச்சிகள் நுகர்வோர் விலைச்சுட்டெண்ணில் (CPI) மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தின.
பல மாதங்களுக்குப் பிறகும், மதிப்பிடப்பட்ட பணவீக்க பதில் பூஜ்ஜியத்திற்கு அருகிலேயே இருந்தது. தற்போதைய வளைகுடா அதிர்ச்சி போன்ற ஒரு பெரிய எண்ணெய் விலை உயர்வு கூட, நுகர்வோர் விலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தாமதமான மாற்றங்களையே ஏற்படுத்தியிருக்கும் என்பதை இது உணர்த்துகிறது.
இருப்பினும், சந்தையுடன் இணைக்கப்பட்ட விலை நிர்ணய முறையின் கீழ் நுகர்வோர் விலைச்சுட்டெண் (CPI) மிக விரைவாகவும் தீவிரமாகவும் பதிலளிக்கிறது.
எண்ணெய் விலை அதிர்ச்சிகள் இப்போது சில மாதங்களுக்குள்ளேயே கணிசமாக உயர்ந்த CPI பணவீக்கத்திற்கு வழிவகுக்கின்றன. உலகளாவிய எரிசக்தி விலை மாற்றங்கள் இப்போது நேரடியாக உள்நாட்டுப் பணவீக்கத்திற்கு மாற்றப்படுகின்றன என்பதை இது காட்டுகிறது.
முன்பு இருந்த விலை நிர்ணய முறை நுகர்வோருக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்கியது போலத் தோன்றினாலும், இந்த விளக்கம் ஒரு முக்கியமான சிக்கலைத் தவறவிடுகிறது: விலைக் குறைப்புகளை அல்லது மாற்றங்களைத் தடுத்து நிறுத்துவது இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் உண்மையான செலவை இல்லாமல் செய்யாது.
இது வெறுமனே நிதி நெருக்கடி மற்றும் வெளிப்புற சமநிலையின்மை (External imbalances) என பொருளாதாரத்தின் பிற பகுதிகளுக்குச் சுமையை மாற்றுகிறது. இதுவே 2022 நெருக்கடியில் நாம் கண்டது போன்ற ஒரு பாரிய பொருளாதார சரிவுக்கு இறுதியில் வழிவகுக்கும்.
துறை வாரியான ஆய்வு: பாதிப்புகள் எங்கு சேருகின்றன?
சந்தையுடன் இணைக்கப்பட்ட விலையிடலின் கீழ் எண்ணெய் விலைகள் உயர்ந்து நிலையாக இருக்கும்போது, அதன் தாக்கம் பல்வேறு நிலைகளில் பரவுகிறது. சில துறைகள் உடனடியாகப் பதிலளிக்கின்றன, மற்றவை சில கால தாமதத்திற்குப் பிறகே மாற்றமடைகின்றன.
போர் தொடங்கியதில் இருந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள 59% அதிகரிப்பானது, ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை படம் 2 தெளிவாகக் காட்டுகிறது.

படம் 2: வளைகுடா போர் எண்ணெய் விலை அதிர்ச்சி (65 டொலரிலிருந்து 102 டொலர் வரை) - 2022-க்குப் பிந்தைய சந்தை விலை தரவுகளைப் பயன்படுத்தி துறை வாரியான CPI தாக்கம்
பாதிப்புகள் எங்கு சேருகின்றன?
எண்ணெய் விலை மாற்றத்தின் மிக உடனடியான மற்றும் வலுவான தாக்கம் போக்குவரத்து கட்டணங்களில் அவதானிக்கப்படுகிறது. எரிபொருள் விலைகள் அதிகரித்தவுடன், போக்குவரத்து நடத்துநர்கள் (Transport operators) உடனடியாகத் தங்கள் இயக்கச் செலவுகள் உயர்வதை எதிர்கொள்கின்றனர், இது மிக விரைவாக நுகர்வோருக்கு மாற்றப்படுகிறது.
இதன் விளைவாக, ஒரு எண்ணெய் விலை அதிர்ச்சியைத் தொடர்ந்து வரும் முதல் சில மாதங்களிலேயே போக்குவரத்து விலைகள் செங்குத்தாக உயர்கின்றன. இதுவே எரிசக்தி விலை உயர்வு ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் உணரப்படும் முதன்மையான வழியாக அமைகிறது.
அடுத்ததாக, ஒரு சிறிய கால இடைவெளிக்குப் பிறகு உணவுப் பொருட்களின் விலைகள் பதிலளிக்கின்றன. உணவு உற்பத்தியானது இயந்திரங்கள் மூலம் எரிசக்தியைப் பயன்படுத்தினாலும், குறுகிய காலத்தில் அது நேரடியாக எரிபொருள் விலையுடன் பிணைக்கப்பட்டிருக்காது.
இருப்பினும், பண்ணைகள், துறைமுகங்கள் மற்றும் மொத்த விற்பனை சந்தைகளில் இருந்து சில்லறை விற்பனையாளர்களுக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான செலவு, எரிபொருள் விலை உயரும்போது அதிகரிக்கிறது.
இலங்கையைப் பொறுத்தவரை விநியோகச் சங்கிலிகள் (Supply chains) பெரும்பாலும் சாலைப் போக்குவரத்தையே நம்பியிருப்பதால், விநியோக வழிகள் மிக முக்கியமானவை.
குடும்பச் செலவுகளில் உணவுக்கான பங்கு அதிகமாக இருப்பதாலும், பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் குழுக்களிடையே ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை நீடிப்பதாலும், இது மிகவும் வெளிப்படையான மற்றும் உடனடி நலன்புரி பாதிப்பாக அமைகிறது.
மேலும், உரங்கள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் 2023 இல் இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு விதித்த தடை போன்ற உலகளாவிய உணவு ஏற்றுமதித் தடைகள் மீண்டும் உருவானால், அது ஊட்டச்சத்து மீதான தாக்கத்தை மேலும் மோசமாக்கக்கூடும்.
உற்பத்திப் பொருட்கள், சில்லறை சேவைகள் மற்றும் ஏனைய நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட உணவு அல்லாத பொருட்களின் விலைகள் மெதுவான ஆனால் நிலையான அதிகரிப்பைக் காட்டுகின்றன.
பொருளாதாரத்தின் பல்வேறு வணிகங்கள் அதிக போக்குவரத்து மற்றும் எரிசக்தி செலவுகளைத் தங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் சேர்க்கத் தொடங்குவதால் ஏற்படும் 'இரண்டாம் சுற்று விளைவுகளை' (Second-round effects) இது பிரதிபலிக்கிறது.
வீடமைப்பு, மின்சாரம் மற்றும் எரிபொருள் சார்ந்த பயன்பாட்டுச் சேவைகளின் (Utilities) விலைகள் நிலையான அதிகரிப்பைக் காட்டுவதற்கு முன்னதாக ஒரு தற்காலிக சரிவைக் காட்டுகின்றன.
இது மின்சாரக் கட்டணங்கள் மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) விலைகள் தொடர்ச்சியாக மாற்றப்படாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்தப்படுவதால் ஏற்படும் ஒரு நிறுவன ரீதியான அம்சமாகும்.
இதன் விளைவாக, உலகளாவிய எண்ணெய் விலை உயர்வுக்கும் உள்நாட்டு விலைத் திருத்தங்களுக்கும் இடையே ஒரு கால இடைவெளி இருக்கலாம்.
கொள்கை ரீதியான பார்வைகள்: விநியோகச் சங்கிலித் தடைகளைக் குறைத்தல்
எரிபொருள் விலைகள் இப்போது சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், எண்ணெய் விலை மாற்றத்தின் தாக்கம் (Pass-through) தவிர்க்க முடியாதது.
அந்தத் தாக்கம் ஏற்படுகிறதா என்பது கேள்வியல்ல, மாறாக அது பொருளாதாரத்திற்குள் இருக்கும் தடைகளால் (Frictions) சீராக நடைபெறுகிறதா அல்லது தாமதப்படுத்தப்பட்டு அதிகரிக்கப்படுகிறதா என்பதே முக்கியமான கேள்வியாகும்.
-
போக்குவரத்து விலைகள்: எரிபொருள் விலைகள் அதிகரித்தவுடன் முதலில் மாறுபடும் போக்குவரத்து விலைகள், நேரடி எரிபொருள் செலவுகளைப் பிரதிபலிக்கின்றன. எரிபொருள் QR முறை போன்ற விரைவான பதில்கள் தட்டுப்பாடு காலங்களில் எரிபொருள் பற்றாக்குறையை நிர்வகிக்க உதவுகின்றன. விலைத் திருத்தங்கள் வெளிப்படையானதாகவும் கணிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே முக்கியக் கொள்கை முன்னுரிமையாகும். விலைக் கடத்தலைத் தாமதப்படுத்தும் முயற்சிகள் பொருளாதாரத்தில் விரிவான சமமின்மையை உருவாக்கலாம்.
-
உணவுப் பணவீக்கம்: உணவுப் பணவீக்கத்தின் கால இடைவெளியானது (Lag), எண்ணெய் அதிர்ச்சிகள் உடனடியாகத் தோன்றாமல் விநியோகச் சங்கிலிகள் வழியாக நகர்வதைக் காட்டுகிறது. எரிபொருள் மற்றும் உரங்கள் போன்ற முக்கிய உள்ளீடுகள் கிடைக்கும்போது, உற்பத்தியாளர்கள் தொடர்ந்து இயங்க முடியும். இது விநியோகச் சுருக்கத்தைத் தடுத்து, உணவு விலை உயர்வை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்க உதவும். ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு மீள்திறன் கொண்ட உணவு விநியோகச் சங்கிலிகள் முக்கியமானவை.
எரிபொருள் விலை நிர்ணய சீர்திருத்தத்துடன், உலகளாவிய எண்ணெய் அதிர்ச்சிகள் உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் விதத்தை இலங்கை மாற்றியுள்ளது.
விலை சமிக்ஞைகளை (Price signals) அடக்குவது இப்போது இலக்கல்ல, மாறாக அவை கட்டமைப்பின் ஊடாக எவ்வாறு நகர்கின்றன என்பதை நிர்வகிப்பதே நோக்கமாகும். விநியோகச் சங்கிலித் தடைகளைக் குறைப்பதன் மூலம், எரிசக்தி விலையினால் ஏற்படும் பொருளாதார அழுத்தங்களை மக்கள் சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.


