கொழும்பு 05, டொரிங்டன் மாவத்தையில் அமைந்துள்ள சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான வீடு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவில் சமூக ஆர்வலர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பான மேலதிக உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக, ஆணைக்குழு ஏற்கனவே முறைப்பாட்டாளரிடம் மேலதிக வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
விசாரணையின் அடுத்த கட்டமாக, ஷிரந்தி ராஜபக்ஷவிடமும் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2001ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரை அவர் தனது குடும்பத்தினருடன் இந்த வீட்டிலேயே வசித்து வந்ததாக முறைப்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், குறித்த வீடு ஷிரந்தி ராஜபக்ஷவின் பெயருக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீட்டை வாங்குவதற்குத் தேவையான நிதியை எவ்வாறு பெற்றுக்கொண்டனர் என்பது குறித்துப் பாரிய சந்தேகம் நிலவுவதால், இது குறித்து முறையான விசாரணையை நடத்துமாறு முறைப்பாட்டாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


