தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அவர் 72 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான சாட்சிகளின் அடிப்படையிலேயே சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், மேலதிக தகவல்கள் வரும் நாட்களில் வௌிப்படுத்தப்படும் என மேலும் குறிப்பிட்டார்.
சில மணிநேரங்களுக்குள் அனைத்து தகவல்களையும் வௌிப்படுத்துவது கடினம் எனத் தெரிவித்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, பொலிஸார் தமது கடமையைச் சரியாக நிறைவேற்றியுள்ளதாகவும் கூறினார்.
கைதுக்கான காரணத்தை முறையாக வௌிப்படுத்தாமல் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பொலிஸாருக்கு எதிராகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "அவரைக் கைது செய்யாதிருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அத்துடன், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியிலுள்ள 'சூத்திரதாரி' (Mastermind) தொடர்பான தகவல்களை வௌிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் சஜீவ மெதவத்த நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை, இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்யும்போது அவரை 3 நாட்கள் தடுத்து வைக்கும் அதிகாரம் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அதன்பின்னர், சாட்சிகளின் அடிப்படையில் தடுத்து வைக்கும் உத்தரவைப் (Detention Order) பெற்றுக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து எதிர்காலத்தில் தௌிவுபடுத்தப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன மேலும் கூறினார்.
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே சி.ஐ.டியினால் கைது
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை கைது செய்யப்பட்டார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான மிலேச்சத்தனமான கடும்போக்குவாதிகள் குழுவினால் நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட 10 தற்கொலைத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மூலமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அனைத்து விசாரணைகளிலும் வௌிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தாக்குதலை நடத்திய குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தற்போது வழக்கு விசாரணை தினசரி அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறான பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சக்தியொன்று இருப்பதாகப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வந்தனர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
இதற்கிடையில், பிரித்தானியாவின் 'செனல் 4' (Channel 4) தொலைக்காட்சி ஒளிபரப்பிய 'Sri Lanka's Easter Bombings; Dispatches' என்ற ஆவணப்படத்தின் ஊடாக, முன்னாள் இராணுவப் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் பங்கேற்ற சந்திப்பொன்றில், ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வருவதற்காக நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
பிள்ளையானின் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றி, தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ள அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த இரகசிய விசாரணை தொடர்பான மேலதிக அறிக்கைகள் கடந்த காலங்களில் கோட்டை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே இன்று காலை பேலியகொட பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த சுரேஷ் சாலே?
மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலே 1987 மார்ச் 16 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டார். அவர் காலாட்படை மற்றும் சமிக்ஞை படையணிகளில் பணியாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவருக்குப் பல மொழிகளைக் கையாளும் திறன் இருந்தமையினால் 1993ஆம் ஆண்டு இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
2006 - 2009: பாரிஸில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முதல் செயலாளராகப் பணியாற்றினார்.
2016 - 2018: மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் அமைச்சர் ஆலோசகராகப் பணியாற்றினார்.
2019 ஜனவரி - நவம்பர்: டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் (NDC) கற்கை நெறியைப் பூர்த்தி செய்தார்.
2019 டிசம்பர் முதல்: இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) பணிப்பாளராகக் கடமையாற்றினார்.
2019 ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக, 2024ஆம் ஆண்டின் இறுதியில் அவர் அரச புலனாய்வு சேவையிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


