எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றும், திட்டமிட்டபடி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், அனைத்து அமைச்சுகளினதும் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
"யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நாங்கள் தொடர்வோம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி, சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) மற்றும் சாத்தியக்கூறு அறிக்கைகள் போன்ற எந்தவொரு கட்டுமானப் பணியையும் தொடங்குவதற்கு முன்னர் பெறப்பட வேண்டிய சில கட்டாய அறிக்கைகள் உள்ளன. அவற்றைத் தவிர, திட்டத்தை நிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுகளினதும் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுடன் நாங்கள் இத்திட்டத்தை முன்னெடுப்போம்" என்று அவர் கூறினார்.
குறித்த பகுதி ஒரு சரணாலயம் மற்றும் சுற்றாடல் ரீதியாக உணர்திறன் மிக்க பகுதி என்பது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "நிச்சயமாக, சுற்றாடல் விவகாரம் குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம். அது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
இந்த ஆண்டுக்குள் அங்கு முதலாவது போட்டி விளையாடப்படும் என்று ஜனாதிபதி கூறியது, அதிகாரிகள் அவரைத் தவறாக வழிநடத்தியதால் ஏற்பட்டதா என்று கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி அத்திட்டத்தை நிறைவு செய்யும் தனது விருப்பத்தை மட்டுமே தெரிவித்தார் என்றார்.
"மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வது குறித்து அரசாங்கத்திற்கு ஒரு யோசனை உள்ளது. கட்டுமானப் பணிகளை எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடிப்பதே எமது நோக்கமாகும். ஜனாதிபதி அத்திட்டத்தை நிறைவு செய்யும் தனது விருப்பத்தையே வெளிப்படுத்தினார்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.


