உலப்பனே - வரக்காப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில் சிக்குண்டுள்ள புகையிரதம் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவ்விடத்திலேயே கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பிலிருந்து கண்டி - நாவலப்பிட்டி ஊடாக நானுஓயா நோக்கி பயணித்த இந்த புகையிரதம், ஒன்பது பெட்டிகளைக் கொண்டதுடன், அதில் குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டியும் உள்ளடங்கியுள்ளது.
சிக்குண்டுள்ள இந்த புகையிரதத்தின் இயந்திரம் (Engine) மாத்திரம் சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியானது எனவும், முழு புகையிரதத்தின் பெறுமதி சுமார் 70 கோடி ரூபாய் எனவும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரதம் மிகப்புதிய நிலையில் காணப்பட்ட போதிலும், புகையிரத பாதை மிக மோசமாக மண்சரிவுக்குள்ளாகி சேதமடைந்துள்ளதால், அதனை எவ்விதமான புகையிரத நிலையத்திற்கும் இழுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்க பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தினசரி 04 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டித்தந்த இந்த புகையிரதத்தின் சேவை தடைப்பட்டுள்ளமையினால், புகையிரத திணைக்களத்திற்கு இதுவரை பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குறித்த புகையிரதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலப்பனே - வரக்காப்பிட்டிய பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவு காரணமாக புகையிரத தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கும் நிலையில் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


