மின்பிறப்பாக்கிகளுக்கு பாரிய சேதம் ஏற்படக்கூடும் என எரிசக்தி நிபுணர் கலாநிதி விதுர ரலபனாவ எச்சரித்துள்ளார்.
இதுவரை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள பழைய நிலக்கரி கையிருப்பே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முழுமையாகப் புதிய நிலக்கரி கையிருப்பையே பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலை குறித்து கலாநிதி விதுர ரலபனாவ மேலும் தெரிவிக்கையில்:
"தற்போது தென்னாப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலக்கரி நாளொன்றுக்கு 10 முதல் 16 மணித்தியாலங்கள் போன்ற குறுகிய நேரத்திற்கே பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் பழைய விநியோகஸ்தரினால் வழங்கப்பட்ட நிலக்கரி இன்னும் கையிருப்பில் உள்ளது. ஆனால், நுரைச்சோலை மின் நிலைய அதிகாரிகள் மார்ச் 1 ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமை குறித்து பெரும் அச்சத்தில் உள்ளனர். பழைய கையிருப்பு தீர்ந்துபோவதால், அன்று முதல் முழுமையாகப் புதிய நிலக்கரிக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும்."
"இந்தத் தரமற்ற நிலக்கரியை 24 மணித்தியாலங்களும் தொடர்ந்து பயன்படுத்தினால், இயந்திரங்களுக்கு ஏற்படும் பாதிப்பே இங்குள்ள பாரிய பிரச்சினையாகும். வறட்சியான இந்தக் காலப்பகுதியில் நுரைச்சோலையின் இரண்டு அல்லது மூன்று இயந்திரங்கள் சேதமடைந்தால், இலங்கையின் மின்சாரக் கட்டமைப்பு பாரிய சரிவைச் சந்திக்கும். எனவே, தயவுசெய்து பொறியியலாளர்களைச் சந்தித்து முறையான தீர்மானம் எடுங்கள். இதனைச் சரியாக முகாமைத்துவம் செய்யாவிட்டால், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் மின்சாரக் கட்டணமும் பெருமளவு அதிகரிக்கக்கூடும்."
"நிலைமை பாரதூரமானது" - பாடலி சம்பிக்க ரணவக்கவின் விசேட அறிவிப்பு
இதேவேளை, நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் 'ஐக்கிய குடியரசு முன்னணி' (United Republic Front) நேற்று (23) விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.
கட்சியின் தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்க இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், சர்ச்சைக்குரிய நிலக்கரி மோசடி மற்றும் தற்போதைய களநிலைமை குறித்து விரிவான ஆய்வொன்றை முன்வைத்தார். அத்துடன், பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் அவதூறு குற்றச்சாட்டுகளுக்கும் அவர் இதன்போது பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.


