முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் நாட்டின் பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்திஜீவிகள் தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
பெண்கள் உரிமைகள் சார்ந்து பணியாற்றும் பேராசிரியர்கள், செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள ஒருமித்த ஆதரவு அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தக் கண்டன அறிக்கையில் தேசமான்ய ராதிகா குமாரசுவாமி, கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ, கலாநிதி சுபாங்கி ஹேரத், கலாநிதி ரேணுகா பத்திரண மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மையப்படுத்திய அரசியல் விசாரணைகளுக்குள், அவரது மனைவியான பேராசிரியை மைத்ரி விக்ரமசிங்கவை இழுப்பது தேவையற்ற துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுயாதீன கல்விமான்களை இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்துவது அவர்களது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல் எனச் சுட்டிக்காட்டியுள்ள புத்திஜீவிகள், இது தொடர்பில் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
வொல்வர்ஹாம்ப்டன் (University of Wolverhampton) பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அரச நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவருக்கு இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
பேராசிரியை மைத்ரி விக்ரமசிங்க, களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவராகவும் சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார். அத்துடன் அவர் பால்நிலை கற்கைகள் (Gender Studies) தொடர்பான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வொல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகம் அவருக்கு வழங்கிய கௌரவ கலாநிதிப் பட்டம் என்பது, அவரது நீண்டகால கல்விசார் சாதனைகளுக்காக வழங்கப்பட்டதே தவிர, அது அரசியலுடன் தொடர்புடையது அல்ல என அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கல்வி சுதந்திரம் மற்றும் அரசியல் பழிவாங்கல்களிலிருந்து கல்விமான்களைப் பாதுகாப்பது ஒரு ஜனநாயக சமூகத்தின் அவசியமான அம்சம் என வலியுறுத்தியுள்ள இந்த அறிக்கை, எவ்விதமான விசாரணைகளும் வெளிப்படைத்தன்மையுடனும் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாகவும் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.




