புலிகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளமை தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகள் புலிகளுடன் நெருங்கிப் பழகவும், அவற்றைத் தொட்டு விளையாடவும் அனுமதிக்கப்படும் 'டைகர் கிங்டம்' (Tiger Kingdom) பூங்காவிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள இரு வேறு பிரிவுகளில் வைக்கப்பட்டிருந்த புலிகளே இவ்வாறு சடுதியாக உயிரிழந்துள்ளன.
விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் நடத்திய முதற்கட்ட மாதிரப் பரிசோதனைகளில், உயிரிழந்த புலிகளுக்கு 'கேனைன் டிஸ்டெம்பர்' (Canine Distemper) எனும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள தேசிய கால்நடைத் திணைக்களத்தின் பணிப்பாளர் சோம்சுவான் ரத்தனமுங்லானோன், "புலிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதை நாங்கள் உணர்ந்துகொள்வதற்குள் நிலைமை கைமீறிச் சென்றுவிட்டது. பூனைகள் அல்லது நாய்களுடன் ஒப்பிடுகையில், புலிகளிடம் நோய் அறிகுறிகளைக் கண்டறிவது மிகவும் கடினமானது," எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த பூங்காவில் சுமார் 240 இற்கும் மேற்பட்ட புலிகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், உயிரிழந்த புலிகளின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, புலிகளுக்கு வழங்கப்பட்ட பச்சைக் கோழி இறைச்சி மூலம் இந்தத் தொற்று பரவியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. கடந்த 2004ஆம் ஆண்டு தாய்லாந்தின் மற்றொரு பூங்காவில் பறவைக் காய்ச்சல் காரணமாக 150 புலிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்குப் பரவும் அபாயம் இல்லை எனக் கூறப்பட்ட போதிலும், அங்கு பணியாற்றிய கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் 21 நாட்களுக்குக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமி நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, பொழுதுபோக்குக்காக வனவிலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பதன் ஆபத்தையே இச்சம்பவம் உணர்த்துவதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


