தீர்மானத்திற்கு இணங்க வெளியிடப்பட்ட 34/2025 இலக்க சுற்றறிக்கையின்படி, இந்த 2026 ஆம் ஆண்டில் 1,506 பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது என்பது கடந்த பல ஆண்டுகளாக விவாதத்திற்குரிய ஒரு விடயமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பெரிய கவனம் செலுத்தப்படாமல், மாணவர்கள் குறைவு என்ற காரணத்தினால் மூடப்பட்ட பல பாடசாலைகள் உள்ளன. பெரும்பாலும் அவை "பாடசாலைகள் மூடப்பட்டுவிட்டன" என்றே கூறப்பட்டன.
பாடசாலைகளை மூடுவதற்கு முன்னர் அரசாங்க அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாட வேண்டும் என்று நான் கூறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. கல்வி அமைச்சின் “வருடாந்த பாடசாலை கணக்கெடுப்பு அறிக்கைகளின்” படி, 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015 இல் மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 10,144 ஆக இருந்தது. 2020 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 10,155 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் 2015 இல் 50 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 1,515 ஆக இருந்த நிலையில், 2020 இல் அந்த எண்ணிக்கை 1,439 ஆக, அதாவது 76 பாடசாலைகளால் குறைந்துள்ளது. அவ்வாறே 2015 இல் 10 க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகள் 3,113 ஆக இருந்தன, 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 3,044 ஆகக் குறைந்தது.
2015 முதல் 2020 வரையான இந்த 5 ஆண்டுகளில் பாடசாலைக் கல்வியில் காணப்பட்ட போக்கு இதுதான். பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும், குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை குறைவதோடு, குறைந்த ஆசிரியர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கையும் குறைவதாகும். இது பாடசாலைக் கல்வியின் ஏனைய குறைபாடுகள் மற்றும் வீழ்ச்சிகளுக்கு மத்தியிலும் ஒரு முக்கியமான வளர்ச்சியாகும்.
அடுத்ததாக 2025 ஆம் ஆண்டு கடந்த டிசம்பருடன் முடிவடைந்ததால், 2025 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பை நடத்த போதுமான நேரம் இருந்திருக்காது. எனவே 2024 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு அறிக்கையைக் கருதினால், 2020 க்குப் பிறகு 2024 இறுதிக்குள் நிலைமை என்னவென்றால், 2020 இல் இருந்த 10,155 பாடசாலைகள், அடுத்த நான்கு ஆண்டுகளில் 2024 முடிவில் 10,047 ஆகக் குறைந்துள்ளன.
அந்த குறைந்த 108 பாடசாலைகள் மூடப்பட்டனவா? அல்லது தானாகவே மூடிக்கொண்டனவா? அது எப்படி நடந்தது? எஞ்சியிருக்கும் 10,047 பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வாறு 1,645 ஆக உயர்ந்தது? மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 108 ஆல் குறையும் போது, 10 ஆசிரியர்களுக்கும் குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வாறு 3,065 ஆக (21 பாடசாலைகளால்) அதிகரித்தது? இவை ஆராயப்பட வேண்டிய விடயங்கள்.
இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ள பின்னணியில், 2015 - 2020 வரை ஒரு வளர்ச்சி இருப்பதற்கும், அதன் பின்னரான 4 ஆண்டுகளில் அந்த வளர்ச்சி வீழ்ச்சியடைவதற்கும் குறிப்பிடத்தக்க காரணங்கள் இருக்க வேண்டும். எனவே, மாணவர் எண்ணிக்கை 50 க்கும் குறைவு என்பதற்காக பாடசாலைகளை மூடுவது கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் எளிதான காரியமாக இருக்கலாம்.
ஆனால் அது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் வேதனையான, அநீதியான மற்றும் தன்னிச்சையான தீர்மானமாகும். அனைத்து பிள்ளைகளின் கல்வி உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டிய ஒரு தேசிய கல்விச் செயல்பாட்டில், பாடசாலைகளை மூடுவதற்கான தீர்மானங்களை எடுப்பது தர்க்கரீதியான அல்லது கொள்கை ரீதியான அணுகுமுறை அல்ல.
இந்த ஜே.வி.பி/மாலிமா அரசாங்கம் 34/2025 சுற்றறிக்கையை வெளியிட்டு மூடத் தீர்மானித்துள்ள 1,506 பாடசாலைகள் எந்தப் பகுதிகளில் உள்ளன என்று ஆராயும்போது, 50 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளில் பெரும்பாலானவை நகர்ப்புறங்களுக்கு வெளியிலேயே அமைந்துள்ளதைக் காணலாம்.
கொழும்பு கல்வி வலயத்திலுள்ள 122 பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 02 மட்டுமே உள்ளன. ஹோமாகம மற்றும் பிலியந்தலை வலயங்களில் உள்ள 184 பாடசாலைகளில் இவ்வாறான பாடசாலைகள் தலா 11 வீதம் 22 உள்ளன. இவை பெரும்பாலும் பிரதேச சபை எல்லைகளாகும். ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள 85 பாடசாலைகளில் 06 மட்டுமே இவ்வாறானவை.
மேல் மாகாணத்திற்கு வெளியே செல்லும்போது, மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் தெல்தெனிய கல்வி வலயத்தில் 96 பாடசாலைகளில் 31 பாடசாலைகளும், வில்கமுவ கல்வி வலயத்தில் 45 பாடசாலைகளில் 15 பாடசாலைகளும், வலப்பனையில் 89 பாடசாலைகளில் 29 பாடசாலைகளும் 50 மாணவர்களுக்கும் குறைவானவை என்பதால் மூடப்பட வேண்டும். ஊவா மாகாணத்தில் 892 பாடசாலைகளில் 172 பாடசாலைகள் மூடப்பட வேண்டும்.
மன்னார் மாவட்டத்தில் 132 பாடசாலைகளில் 40 பாடசாலைகள் மூடப்பட வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தில் 58 பாடசாலைகளில் 25 பாடசாலைகள் மூடப்பட வேண்டும். கேகாலை மாவட்டத்தின் 3 வலயங்களில் 498 பாடசாலைகளில் 120 பாடசாலைகள் மூடப்பட வேண்டும். இந்த கிராமப்புறப் பகுதிகளைக் கருதும்போது, ஒடுக்கப்பட்ட மக்களைக் கவனிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தினால் அவர்களின் பாடசாலைகளில் 20 - 25 சதவீதமானவை மூடப்படவுள்ளன.
இதன்போது அரசாங்கமும் கல்வி அதிகாரிகளும் கட்டாயமாக அவதானம் செலுத்த வேண்டிய 3 முக்கியமான விடயங்கள் உள்ளன:
மூடப்படவுள்ள பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்தில் பாடசாலை செல்லும் மாணவர்களில் எத்தனை பேர் வேறு பாடசாலைகளுக்குச் செல்கின்றனர் மற்றும் ஏன்?
பிரதேச மாணவர்களில் ஒரு சிறு அளவிலான மாணவர்களாவது ஏன் இந்த மூடப்படவுள்ள பாடசாலைக்கு வருகிறார்கள்?
பிரதேசத்திற்கு வெளியே செல்லும் மாணவர்களில் கணிசமானவர்கள், பிரதேசத்திலுள்ள பாடசாலை அபிவிருத்தி செய்யப்பட்டால் அங்கு மாறுவார்களா?
எனக்குத் தெரிந்தவரை இதுவரை இவ்வாறான உத்தியோகபூர்வ தேடுதல் எதுவும் நடைபெறவில்லை. அந்தப் பொறுப்பை நிறைவேற்றாத கல்வி அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு பாடசாலைகளை மூடுவதற்கான தீர்மானங்களை எடுக்க அரசாங்கத்திற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. அத்துடன் பாடசாலைகளை மூடுவதில் அவசரப்பட வேண்டிய தேவையும் இல்லை.
எனவே: (அ) புதிய 34/2025 சுற்றறிக்கையை உடனடியாக நிறுத்தி, பாடசாலைகளை மூடுவதை உடனே நிறுத்துமாறும், (ஆ) பாடசாலை அதிபர், தற்போது பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள ஏனைய பெற்றோர்களுடனும், (இ) பாடசாலை அமைந்துள்ள பிரதேசத்தின் உள்ளூராட்சி மன்றத்துடனும் (Local Government) எதிர்வரும் 3 மாதங்களுக்குள் கலந்துரையாடி, அதன் மூலம் எட்டக்கூடிய முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை பெற்றோர்களுக்கும் உள்ளூராட்சி மன்றத்திற்கும் வழங்கி, அந்தப் பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்றத்தினால் நிறைவேற்றப்படும் முன்மொழிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் ஒரு ஜனநாயகப் பண்பைப் பின்பற்றுமாறு நான் அரசாங்கத்திற்கு முன்மொழிகிறேன்.
மூடப்படத் தயாராக இருக்கும் இந்தப் பாடசாலைகளின் மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்காகவும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் இணக்கப்பாட்டைப் பெறுவதற்காகவும் இவ்வாறானதொரு ஜனநாயக வழிமுறையின் ஊடாகத் தீர்வுகளைக் கோருமாறு நான் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.


