வெளியேறும் நபர்கள், நாட்டுக்குச் சேவை செய்யாமல் வெளிநாடு செல்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாரிய பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா நேற்று (23) நாடாளுமன்றத்தில் விசேட வெளிப்படுத்தலொன்றை மேற்கொண்டார்.
நாட்டின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பின் ஊடாக மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் போன்ற நிபுணர்களை உருவாக்குவதற்காக செலவிடப்படும் தொகை மற்றும் அவர்களிடமிருந்து நாட்டுக்குக் கிடைக்கும் சேவை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் புள்ளிவிபரங்களுடன் கருத்துக்களை முன்வைத்தார்.
ஒரு மருத்துவரை உருவாக்குவதற்காக அரசாங்கம் பல மில்லியன் ரூபாய் பொதுமக்களின் வரிப்பணத்தைச் செலவிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"நமது நாட்டின் ஏழை மக்களின் வரிப்பணத்திலிருந்து 50 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டே ஒரு மருத்துவர் உருவாக்கப்படுகிறார். ஆனால், அவர்கள் பட்டம் பெற்றவுடன் நாட்டுக்குச் சேவை செய்யாமல் வெளிநாடு செல்கின்றனர். இது ஒரு தேசிய குற்றமாகும்."
இவ்வாறு நிபுணர்கள் வெளிநாடு செல்வதால் அரசாங்கம் செலவழித்த பணம் மட்டுமன்றி, அவர்களிடமிருந்து நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய தொழில்முறை பங்களிப்பும் இழக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டுப் கல்விக்காக வெளியேறும் பாரியளவிலான செல்வம்
இலங்கை மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்விக்காக ஆண்டுதோறும் செலவிடும் வெளிநாட்டு நாணயம் குறித்தும் அவர் இங்கே விசேட வெளிப்படுத்தலொன்றைச் செய்தார்.
ஆண்டுதோறும் இலங்கையிலிருந்து வெளியேறும் தொகை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமானது.
இந்த பாரிய தொகையை நாட்டுக்குள்ளேயே வைத்திருப்பதென்றால், உள்நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பணத்தில் கல்வி கற்றுவிட்டு நாட்டை விட்டு வெளியேறும் நிபுணர்கள் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் சில விடயங்களைப் பரிந்துரைத்தார்:
கட்டாய சேவைக்காலம் (Bond System): அரச பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் நிபுணர்கள் குறைந்தபட்சம் சில ஆண்டுகள் இந்நாட்டில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டரீதியான பிணைப்பை உருவாக்குதல்.
பணத்தை அறவிடுதல்: நாட்டுக்குச் சேவை செய்யாமல் வெளிநாடு செல்வதாயின், அரசாங்கம் அவர்களுக்காகச் செலவிட்ட செலவை மீண்டும் அறவிட வேண்டும்.
தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல்: வெளிநாடுகளுக்குச் செல்லும் டொலர்களைச் சேமிக்க வேண்டுமானால், இலங்கைக்குள் தரமான தனியார் பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு இருக்கும் தடைகளை நீக்க வேண்டும்.
"சர்வதேச பல்கலைக்கழகங்கள் இலங்கைக்கு வருவதற்கு நாம் இடமளிக்க வேண்டும். அப்போது நமது பிள்ளைகளின் பணம் நாட்டுக்குள்ளேயே சேமிக்கப்படுவதுடன், வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வருவதன் மூலம் நாம் வெளிநாட்டு நாணயத்தையும் ஈட்டிக்கொள்ள முடியும்," என அவர் மேலும் தெரிவித்தார்.
இலவசக் கல்வி என்ற பெயரில் பொதுப்பணத்தைச் செலவிட்டு நிபுணர்களை உருவாக்குவதால் மாத்திரம் பயனில்லை என்றும், அவர்களிடமிருந்து நாட்டுக்குச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கு முறையான வேலைத்திட்டமொன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றும் கூறி பைசர் முஸ்தபா தனது உரையை நிறைவு செய்தார்.


