சைக்கிளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 22, 33, 35 மற்றும் 36 வயதுடைய திப்பொட்டுகொட, ஹொரண, மொரகஹஹேன மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், கொள்ளையிடப்பட்ட பொருட்களைப் பாகங்களாகப் பிரித்து விற்பனை செய்வதற்காக அவற்றை கொள்வனவு செய்து தம்வசம் வைத்திருந்த ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
சந்தேக நபர்கள் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய துருப்பிடிக்காத இரும்பிலான (Stainless Steel) மன்னா கத்தி மற்றும் கொள்ளையிடப்பட்ட மூன்று மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதில் ஒரு மோட்டார் சைக்கிள் பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் புலத்சிங்கள பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டதுடன், திருடப்பட்ட ஏனைய பொருட்களும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
இரவு நேர ரோந்து நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே இந்த பாரிய குற்றச்செயல்கள் அம்பலமாகியுள்ளன.
ஹொரண 'நவம் மகா பெரஹெர' (மகா ஊர்வலம்) நடைபெற்ற தினத்தன்று, ஹிக்கடுவை பகுதியில் வைத்து சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை மன்னா கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளை இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடுகளை மாற்றி, ஹேனேகம, கஹதுடுவ, கும்புக, கோனபொல மற்றும் ஹொரண ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கைபேசிகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவரும் போதைப்பொருள் பாவனைக்குத் தீவிரமாக அடிமையானவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் (23) ஹொரண நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், ஹொரண தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


